ஆதியாகமம் 39 : 1 (ECTA)
போத்திபாரின் வீட்டில் யோசேப்பு யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும் படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை, அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான்.
ஆதியாகமம் 39 : 2 (ECTA)
ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
ஆதியாகமம் 39 : 3 (ECTA)
ஆண்டவர் அவரோடு இருந்ததையும் அவர் தொட்ட காரியமனைத்தையும் ஆண்டவர் துலங்கச் செய்ததையும் அவர் தலைவன் கண்டான்.
ஆதியாகமம் 39 : 4 (ECTA)
எனவே, அவனுடைய தயை யோசேப்புக்குக் கிடைத்தது. அவன் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும் வீட்டின் மேலாளராகவும் நியமித்து, தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தான்.
ஆதியாகமம் 39 : 5 (ECTA)
இவ்வாறு, தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டதிலிருந்து, எகிப்தியனின் வீட்டுக்கு யோசேப்பின் பொருட்டு ஆண்டவர் ஆசி வழங்கினார். வீட்டிலும் வயல்வெளியிலும் அவனுக்கிருந்த அனைத்தின்மீதும் ஆண்டவர் ஆசி பொழிந்தார்.
ஆதியாகமம் 39 : 6 (ECTA)
இவ்வாறு, யோசேப்பின் பொறுப்பில் தனக்கிருந்த அனைத்தையும் ஒப்படைத்த பின், தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார்.
ஆதியாகமம் 39 : 7 (ECTA)
சில நாள்கள் சென்றபின், யோசேப்பின் மீது கண்வைத்திருந்த அந்தத் தலைவனின் மனைவி அவரிடம், “என்னோடு படு” என்றாள்.
ஆதியாகமம் 39 : 8 (ECTA)
அவர் அதற்கு இணங்க மறுத்து, தம் தலைவரின் மனைவியை நோக்கி, “என் தலைவர் எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார். வீட்டிலுள்ள எதைப்பற்றியும் அவர் விசாரிப்பதுகூட இல்லை.
ஆதியாகமம் 39 : 9 (ECTA)
இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியாயிருப்பதால், உங்களைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?” என்றார்.
ஆதியாகமம் 39 : 10 (ECTA)
அவள் நாள்தோறும் வற்புறுத்தியபோதிலும், யோசேப்பு அவளோடு படுக்கவோ இருக்கவோ இணங்கவில்லை.
ஆதியாகமம் 39 : 11 (ECTA)
இவ்வாறிருக்க, ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். உள்ளே வீட்டைச் சார்ந்தவர் வேறு எவரும் இல்லை.
ஆதியாகமம் 39 : 12 (ECTA)
அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, “என்னோடு படு” என்றாள். உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.
ஆதியாகமம் 39 : 13 (ECTA)
அவர் தம் மேலாடையை அவள் கையில் விட்டுவிட்டு வெளியே ஓடியதைக் கண்டு,
ஆதியாகமம் 39 : 14 (ECTA)
அவள் தன் வீட்டு ஆள்களைக் கூப்பிட்டு; “என் கணவர் நம்மை அவமானப்படுத்துவதற்காகவா இந்த எபிரேயனை வீட்டிற்குக் கொண்டுவந்தார்? இதோ இவன் என்னோடு படுப்பதற்காக என்னிடம் வந்தான். உடனே நான் பெரும் கூச்சலிட்டுக் கத்தினேன்.
ஆதியாகமம் 39 : 15 (ECTA)
ஆனால், நான் கூச்சலிட்டதைக் கண்டு அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய் விட்டான்” என்றாள்.
ஆதியாகமம் 39 : 16 (ECTA)
மேலும், அவள் அவருடைய மேலாடையைத் தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வைத்திருந்துஅவனிடம்,
ஆதியாகமம் 39 : 17 (ECTA)
“நீர் நம்மிடம் அழைத்து வந்துள்ள எபிரேய அடிமை என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடம் வந்தான்.
ஆதியாகமம் 39 : 18 (ECTA)
அப்போது நான் கூச்சலிட்டுக் கத்தியதும், அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று கதை கட்டினாள்.
ஆதியாகமம் 39 : 19 (ECTA)
“உம் அடிமை எனக்கு இப்படிச் செய்துவிட்டான்” என்று தன் மனைவி சொல்லக் கேட்ட அவர் தலைவன், கடுஞ்சினம் கொண்டான்.
ஆதியாகமம் 39 : 20 (ECTA)
யோசேப்பின் தலைவன், அரசக் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலைக்கு அவரை இழுத்துச் சென்று அடைத்து வைத்தான்.
ஆதியாகமம் 39 : 21 (ECTA)
ஆண்டவர் யோசேப்புடன் இருந்து, அவர்மீது பேரன்பு காட்டி, சிறை மேலாளன் பார்வையில் அவருக்குத் தயை கிடைக்கும்படி செய்தார்.
ஆதியாகமம் 39 : 22 (ECTA)
எனவே, சிறைமேலாளன் சிறையிலிருந்த கைதிகள் அனைவரையும், அங்குச் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும், யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான்.
ஆதியாகமம் 39 : 23 (ECTA)
அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23