ஆதியாகமம் 24 : 1 (ECTA)
ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார்.
ஆதியாகமம் 24 : 2 (ECTA)
ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, "உன் கையை என் தொடையின் கீழ் வைத்து,
ஆதியாகமம் 24 : 3 (ECTA)
விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்; நான் வாழ்ந்துவரும் இக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும்
ஆதியாகமம் 24 : 4 (ECTA)
சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்குக்கு பெண்கொள்வாய் என்றும் சொல்" என்றார்.
ஆதியாகமம் 24 : 5 (ECTA)
அதற்கு அவர், "ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?" என்று கேட்டார்.
ஆதியாகமம் 24 : 6 (ECTA)
அதற்கு ஆபிரகாம், "அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு.
ஆதியாகமம் 24 : 7 (ECTA)
தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி, "இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்" என்று ஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள்.
ஆதியாகமம் 24 : 8 (ECTA)
உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே" என்றார்.
ஆதியாகமம் 24 : 9 (ECTA)
அவ்வாறே அவ்வேலைக்காரரும் தம் தலைவர் ஆபிரகாமின் தொடையின் கீழ் கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து வாக்குறுதியளித்தார்.
ஆதியாகமம் 24 : 10 (ECTA)
பின் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
ஆதியாகமம் 24 : 11 (ECTA)
பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை நேரத்தில், நகர்ப்புறமிருந்த கிணற்றின் அருகில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டுமாறு அவர் அவற்றை மண்டியிடச் செய்தார்.
ஆதியாகமம் 24 : 12 (ECTA)
அப்போது அவர் சொன்னது, "என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வெற்றி அளித்தருளும். என் தலைவர் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.
ஆதியாகமம் 24 : 13 (ECTA)
இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். நகர் மக்களின் புதல்வியர் தண்ணீர் எடுக்க இங்கே வருவார்கள்.
ஆதியாகமம் 24 : 14 (ECTA)
அப்பொழுது நான் "தண்ணீர் பருகும்படி உன் குடத்தைச் சாய்த்துக் கொடு" என்று கேட்க, "குடியுங்கள்; மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன்" என்று எந்த இளம்பெண் மறுமொழி சொல்வாளோ, அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவள் ஆவாளாக! நீர் என் தலைவருக்குப் பேரன்பு காட்டினீர் என்று இதனால் அறிந்து கொள்வேன்" என்றார்.
ஆதியாகமம் 24 : 15 (ECTA)
அவர் இவ்வார்த்தைகளைத் தமக்குள் சொல்லி முடிக்குமுன்பே, இதோ ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தார். அவர் ஆபிரகாமின் சகோதரர் நாகோருக்கும் அவர் மனைவி மில்க்காவுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்.
ஆதியாகமம் 24 : 16 (ECTA)
அவர் எழிமிக்க தோற்றமுடையவர்; ஆண் தொடர்பு அறியாத கன்னிப்பெண். அவர் நீரூற்றுக்குள் இறங்கிக் குடத்தை நிரப்பிக் கொண்டு மேலேறி வந்தார்.
ஆதியாகமம் 24 : 17 (ECTA)
ஆபிரகாமின் வேலைக்காரர் அவரைச் சந்திக்க ஓடிச்சென்று, "உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?" என்று கேட்டார்.
ஆதியாகமம் 24 : 18 (ECTA)
உடனே அவரும் "குடியுங்கள் ஐயா" என்று விரைந்து தம் குடத்தை தோளினின்று இறக்கி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.
ஆதியாகமம் 24 : 19 (ECTA)
அவர் குடித்து முடித்ததும், மீண்டும் அவரை நோக்கி, "உங்கள் ஒட்டகங்களும் குடித்து முடியுமட்டும் நான் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்" என்றார்.
ஆதியாகமம் 24 : 20 (ECTA)
குடத்து நீரைத் தொட்டியில் விரைவாய் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைக்க நீரூற்றுக்குள் ஓடிச் சென்று ஒட்டகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் இறைத்து ஊற்றினார்.
ஆதியாகமம் 24 : 21 (ECTA)
அந்த வேலைக்காரர் இதைக்கண்டு வாயடைத்துப்போய் தமது பயணத்திற்கு ஆண்டவர் வெற்றியளித்தாரா இல்லையா என்று அறியும்படி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆதியாகமம் 24 : 22 (ECTA)
ஒட்டகங்கள் நீர் குடித்து முடிந்தபின் அவர் அவருக்கு ஆறு கிராம் நிறையுள்ள பொன் மூக்கணியும், நூற்று இருபது கிராம் நிறையுள்ள இரண்டு காப்புகளும் கொடுத்தார்.
ஆதியாகமம் 24 : 23 (ECTA)
பின்னர் அவரை நோக்கி, "நீ யாருடைய மகள்? சொல்! உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவு தங்குவதற்கு இடம் இருக்குமா?" என்று வினவினார்.
ஆதியாகமம் 24 : 24 (ECTA)
அவரோ மறுமொழியாக, "நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள் நான்" என்றார்.
ஆதியாகமம் 24 : 25 (ECTA)
மேலும், "எங்கள் வீட்டில் வைக்கோலும் தீவனமும் மிகுதியாக இருப்பதுமன்றி, தங்குவதற்கு இடமும் உண்டு" என்றார்.
ஆதியாகமம் 24 : 26 (ECTA)
அந்த மனிதர் ஆண்டவரை வணங்கித் தொழுது,
ஆதியாகமம் 24 : 27 (ECTA)
"என் தலைவர் ஆபிரகாமின் ஆண்டவர் போற்றி! போற்றி! என் தலைவருக்கு அவர் காட்டியிருந்த பேரன்பையும் உண்மையையும் விட்டு விலகவில்லை. என் தலைவரின் சகோதரன் வீட்டிற்கு வரும் வழியில் அவர் என்முன்னே சென்றார்" என்றார்.
ஆதியாகமம் 24 : 28 (ECTA)
அந்த இளம்பெண் ஓடிச் சென்று தன் தாயின்வீட்டில் உள்ளோருக்கு இந்நிகழ்ச்சிகளைப்பற்றிக் கூறினார்.
ஆதியாகமம் 24 : 29 (ECTA)
ரெபேக்காவுக்கு லாபான் என்னும் சகோதரன் இருந்தான். அவன் வெளியே வந்து அந்த மனிதரைப் பார்க்க நீரூற்றை நோக்கி ஓடினான்.
ஆதியாகமம் 24 : 30 (ECTA)
ஏனெனில் தன் சகோதரி அணிந்திருந்த மூக்கணியையும் கைக்காப்புகளையும் அவன் கண்டிருந்தான். "அந்த மனிதர் என்னிடம் இவ்வாறு சொன்னார்" என்று தன் சகோதரி ரெபேக்கா கூறிய வார்த்தைகளையும் கேட்டிருந்தான். அவன் அந்த ஆளிடம் ஓடிச்சென்று நீரூற்றருகில் ஒட்டகங்களோடு அவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
ஆதியாகமம் 24 : 31 (ECTA)
அவன் அவரை நோக்கி, "ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக! இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்காக இடத்தையும் துப்புரவு செய்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னான்.
ஆதியாகமம் 24 : 32 (ECTA)
அவன் அவரை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, ஒட்டகங்களின் சுமையை இறக்கி, வைக்கோலும் தீவனமும் இட்டு, அவருக்கும் அவரோடு வந்த ஆள்களுக்கும் கை கால் கழுவத் தண்ணீர் கொடுத்தான்.
ஆதியாகமம் 24 : 33 (ECTA)
பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. அவரோ, "நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன்" என, லாபான் "சொல்லும்" என்றான்.
ஆதியாகமம் 24 : 34 (ECTA)
அப்பொழுது அவர், "நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.
ஆதியாகமம் 24 : 35 (ECTA)
தலைவருக்கு ஆண்டவர் மிகுதியான ஆசி வழங்கி, அவரைச் செல்வராக்கி, ஆடு மாடுகளையும், பொன் வெள்ளியையும், வேலைக்காரர் வேலைக்காரிகளையும், ஒட்டகங்கள் கழுதைகளையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
ஆதியாகமம் 24 : 36 (ECTA)
மேலும், என் தலைவரின் மனைவியாகிய சாரா தம் வயது முதிர்ந்த காலத்தில் என் தலைவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அவரும் அவனுக்குத் தமக்குரிய அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.
ஆதியாகமம் 24 : 37 (ECTA)
என் தலைவர் என்னை ஆணையிடச் செய்து. "நான் வாழ்ந்து வரும் இந்தக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்கு நீ பெண் கொள்ளமாட்டாய் என்றும்
ஆதியாகமம் 24 : 38 (ECTA)
தந்தையின் வீட்டாரிடமும், என் இனத்தாரிடமும் சென்று என் மகனுக்கு நீ பெண்கொள்வாய் என்றும் சொல்" என்றார்.
ஆதியாகமம் 24 : 39 (ECTA)
அப்போது நான் என் தலைவரை நோக்கி, "ஒரு வேளை பெண் என்னோடு வரவில்லையென்றால்? என்று வினவினேன்.
ஆதியாகமம் 24 : 40 (ECTA)
அதற்கு அவர் மறுமொழியாக, "ஆண்டவர் திருமுன் நான் வாழ்ந்து வருபவன். அவர் உன்னோடு தம் தூதரை அனுப்பி உனது பயணத்தை வெற்றிபெறச் செய்வார். என் இனத்தாரிடையே, என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் மகனுக்குப் பெண்கொள்வாய்.
ஆதியாகமம் 24 : 41 (ECTA)
அப்பொழுது நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். அப்படியே நீ என் இனத்தாரிடம் போய்க் கேட்டும், அவர்கள் தராவிட்டால், நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய்" என்றார்.
ஆதியாகமம் 24 : 42 (ECTA)
இன்று நான் அந்த நீரூற்றின் அருகில் வந்தவுடன், "என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நான் மேற்கொண்ட பயணத்திற்குக் கருணைகூர்ந்து வெற்றி தாரும்.
ஆதியாகமம் 24 : 43 (ECTA)
இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். தண்ணீர் எடுக்க வரும் இளம் பெண்ணிடம் "நான் பருகும்படி உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா என்றுகேட்க,
ஆதியாகமம் 24 : 44 (ECTA)
அவள், "குடியுங்கள்; மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன் ", என்று சொல்வாளாயின், அவளே என் தலைவரின் மகனுக்கு ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டவள் ஆவாள் என்று
ஆதியாகமம் 24 : 45 (ECTA)
என் மனத்திற்குள் சொல்லி முடிக்கும் முன்பே, இதோ ரெபேக்கா தன் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தாள். நீர் இறைக்குமாறு அவள் நீரூற்றுக்குள் இறங்கினாள். அப்பொழுது நான் அவளிடம் "எனக்குக் குடிக்கத் தா" என்றேன்.
ஆதியாகமம் 24 : 46 (ECTA)
அவள் உடனே தோளிலிருந்து குடத்தை இறக்கி, "குடியுங்கள்; உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டுவேன் ", என்று கூற, நானும் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் காட்டினாள்.
ஆதியாகமம் 24 : 47 (ECTA)
பின்பு, நான் அவளை நோக்கி, நீ யாருடைய மகள்?" என, "நான் நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள்" என்றாள். உடனே நானும் அவள் மூக்கில் மூக்கணியும் அவள் கையில் காப்புகளையும் அணிவித்தேன்.
ஆதியாகமம் 24 : 48 (ECTA)
மேலும் நான் ஆண்டவரை வணங்கித் தொழுதேன். ஏனெனில் என் தலைவரின் சகோதரியின் மகளையே, அவருடைய மகனுக்காகப் பெண் பேச வருமாறு நேர் வழியில் என்னை நடத்தி வந்த என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றினேன்.
ஆதியாகமம் 24 : 49 (ECTA)
இப்பொழுது நீர் என் தலைவருக்கு அன்பும் நம்பிக்கையும் காட்டுவீரா இல்லையா என்று எனக்குத் தெரிவியும்; அதற்கேற்ப வலமோ இடமோ எங்காகிலும் திரும்பிச் செல்வேன்" என்றார்.
ஆதியாகமம் 24 : 50 (ECTA)
அதற்கு லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, "இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது. நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக் கூடாது.
ஆதியாகமம் 24 : 51 (ECTA)
இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக் கொண்டு போங்கள்" என்றார்.
ஆதியாகமம் 24 : 52 (ECTA)
ஆபிரகாமின் வேலைக்காரர் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டதும் ஆண்டவரைத் தொழுதார்.
ஆதியாகமம் 24 : 53 (ECTA)
பிறகு அவர் பொன், வெள்ளி நகைகளையும் ஆடைகளையும் எடுத்து ரெபேக்காவுக்குக் கொடுத்தார். அவர் சகோதரருக்கும் தாய்க்கும் விலையுயர்ந்த அன்பளிப்புகளையும் கொடுத்தார்.
ஆதியாகமம் 24 : 54 (ECTA)
பின் அவரும் அவரோடு இருந்தவர்களும் உண்டு, குடித்து அங்கு இரவைக் கழித்தார்கள். அவர்கள் மறுநாள் காலை எழுந்ததும் அவர், "என் தலைவரிடம் போக விடை தாருங்கள்" என்றார்.
ஆதியாகமம் 24 : 55 (ECTA)
ரெபேக்காவின் சகோதரனும் தாயும் அவரை நோக்கி, "பெண் பத்து நாள்களேனும் எங்களோடு இருக்கட்டும்; அதன் பின் புறப்பட்டுப் போகலாம்" என்று மறுமொழி கூறினர்.
ஆதியாகமம் 24 : 56 (ECTA)
ஆனால் அவர் அவர்களிடம், "என்னை நீங்கள் தாமதப்படுத்தாதீர்கள். ஆண்டவர் என் பயணத்திற்கு வெற்றியைத் தந்திருக்கிறார். என் தலைவரிடம் நான் செல்லும்படி விடை கொடுங்கள்" என்றார்.
ஆதியாகமம் 24 : 57 (ECTA)
அதற்கு அவர்கள், "பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்" என்றனர்.
ஆதியாகமம் 24 : 58 (ECTA)
அப்படியே ரெபேக்காவை அழைத்து, "இவரோடு போகிறாயா?" என்று அவரைக் கேட்டனர். அவரும்" ;போகிறேன்" என்றார்.
ஆதியாகமம் 24 : 59 (ECTA)
எனவே, அவர்கள் தங்கள் சகோதரி ரெபேக்காவையும் அவர் தாதியையும், ஆபிரகாமின் வேலைக்காரரையும் அவரைச் சேர்ந்தவர்களையும், அனுப்பி வைத்தனர்.
ஆதியாகமம் 24 : 60 (ECTA)
அப்பொழுது அவர்கள் ரெபேக்காவுக்கு ஆசி வழங்கி அவரை நோக்கி, "எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய். உன் வழி மரபினர் தங்கள் பகைவரின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!" என்றனர்.
ஆதியாகமம் 24 : 61 (ECTA)
பின்பு, ரெபேக்காவும் அவருடைய தோழியரும் ஒட்டகங்களின் மீதேறி, அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அந்த வேலைக்காரர் அவரை அழைத்துக் கொண்டு போனார்.
ஆதியாகமம் 24 : 62 (ECTA)
இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார்.
ஆதியாகமம் 24 : 63 (ECTA)
மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.
ஆதியாகமம் 24 : 64 (ECTA)
ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.
ஆதியாகமம் 24 : 65 (ECTA)
அவர் அந்த வேலைக்காரரிடம், "'வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?" என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், "அவர்தாம் என் தலைவர்" என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.
ஆதியாகமம் 24 : 66 (ECTA)
அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும் பற்றிக் கூறினார்.
ஆதியாகமம் 24 : 67 (ECTA)
ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச் சென்று மணந்துகொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறது ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67

BG:

Opacity:

Color:


Size:


Font: