ஆதியாகமம் 17 : 1 (ECTA)
ஆபிரகாமுடன் கடவுளின் உடன்படிக்கை-விருத்தசேதனம் ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.
ஆதியாகமம் 17 : 2 (ECTA)
உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்; உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்” என்றார்.
ஆதியாகமம் 17 : 3 (ECTA)
அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது:
ஆதியாகமம் 17 : 4 (ECTA)
“உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
ஆதியாகமம் 17 : 5 (ECTA)
இனி உன்பெயர் ஆபிராம் அன்று; ‘ஆபிரகாம்’ என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில், எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். [* உரோ 4: 17 ]
ஆதியாகமம் 17 : 6 (ECTA)
மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.
ஆதியாகமம் 17 : 7 (ECTA)
தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். [* லூக் 1: 55 ]
ஆதியாகமம் 17 : 8 (ECTA)
நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார். [* திப 7: 5 ]
ஆதியாகமம் 17 : 9 (ECTA)
மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆதியாகமம் 17 : 10 (ECTA)
நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். * திப 7:8; உரோ 4:11..
ஆதியாகமம் 17 : 11 (ECTA)
உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
ஆதியாகமம் 17 : 12 (ECTA)
தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும், உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அப்படியே செய்ய வேண்டும்.
ஆதியாகமம் 17 : 13 (ECTA)
உன்வீட்டில் பிறந்த குழந்தைக்கும் விலைக்கு வாங்கியதற்கும் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு, என் உடன்படிக்கை உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.
ஆதியாகமம் 17 : 14 (ECTA)
தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்” என்றார்.
ஆதியாகமம் 17 : 15 (ECTA)
பின்பு, கடவுள் ஆபிரகாமிடம், “உன் மனைவியைச் ‘சாராய்’ என அழைக்காதே. இனிச் ‘சாரா’ என்பதே அவள் பெயர்.
ஆதியாகமம் 17 : 16 (ECTA)
அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்” என்றார்.
ஆதியாகமம் 17 : 17 (ECTA)
ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, “நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
ஆதியாகமம் 17 : 18 (ECTA)
ஆபிரகாம் கடவுளிடம், “உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்” என்றார்.
ஆதியாகமம் 17 : 19 (ECTA)
கடவுள் அவரிடம், “அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.
ஆதியாகமம் 17 : 20 (ECTA)
இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.
ஆதியாகமம் 17 : 21 (ECTA)
ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்” என்றார்.
ஆதியாகமம் 17 : 22 (ECTA)
அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.
ஆதியாகமம் 17 : 23 (ECTA)
பின்னர், ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும் தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.
ஆதியாகமம் 17 : 24 (ECTA)
ஆபிரகாமுக்கு அவர் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது அவருக்கு வயது தொண்ணூற்றொன்பது.
ஆதியாகமம் 17 : 25 (ECTA)
அவர் மகன் இஸ்மயேலுக்கு அவன் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவனுக்கு வயது பதின்மூன்று.
ஆதியாகமம் 17 : 26 (ECTA)
ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
ஆதியாகமம் 17 : 27 (ECTA)
அவருக்குச் செய்யப்பட்டதுபோல அவர் வீட்டில் பிறந்தவர்கள், வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள் ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27