ஆதியாகமம் 16 : 1 (ECTA)
ஆகாரும் இஸ்மயேலும் ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.
ஆதியாகமம் 16 : 2 (ECTA)
சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.
ஆதியாகமம் 16 : 3 (ECTA)
ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
ஆதியாகமம் 16 : 4 (ECTA)
அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.
ஆதியாகமம் 16 : 5 (ECTA)
அப்பொழுது சாராய் ஆபிராமிடம், “எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்” என்றார்.
ஆதியாகமம் 16 : 6 (ECTA)
ஆபிராம் சாராயிடம், “உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்” என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.
ஆதியாகமம் 16 : 7 (ECTA)
ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.
ஆதியாகமம் 16 : 8 (ECTA)
அவர் அவளை நோக்கி, “சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்” என்றாள்.
ஆதியாகமம் 16 : 9 (ECTA)
ஆண்டவரின் தூதர் அவளிடம், “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட” என்றார்.
ஆதியாகமம் 16 : 10 (ECTA)
பின்பு, ஆண்டவரின் தூதர் அவளிடம், “உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்” என்றார்.
ஆதியாகமம் 16 : 11 (ECTA)
மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.
ஆதியாகமம் 16 : 12 (ECTA)
ஆனால், அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.
ஆதியாகமம் 16 : 13 (ECTA)
அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.
ஆதியாகமம் 16 : 14 (ECTA)
ஆகவே, அந்தக் கிணற்றிற்கு ‘பெயேர் லகாய்ரோயி’* என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருக்கின்றது. * எபிரேயத்தில், ‘என்னைக் காண்கின்ற வாழ்பவரின் கிணறு’ என்பது பொருள்..
ஆதியாகமம் 16 : 15 (ECTA)
ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார். [* கலா 4: 22 ]
ஆதியாகமம் 16 : 16 (ECTA)
ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16