ஆதியாகமம் 15 : 1 (ECTA)
ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.”
ஆதியாகமம் 15 : 2 (ECTA)
அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!
ஆதியாகமம் 15 : 3 (ECTA)
நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.
ஆதியாகமம் 15 : 4 (ECTA)
அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
ஆதியாகமம் 15 : 5 (ECTA)
அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். [* உரோ 4:18; எபி 11: 12 ]
ஆதியாகமம் 15 : 6 (ECTA)
ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். [* உரோ 4:3; கலா 3:6; யாக் 2: 23 ]
ஆதியாகமம் 15 : 7 (ECTA)
ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார்.
ஆதியாகமம் 15 : 8 (ECTA)
அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?” என்றார்.
ஆதியாகமம் 15 : 9 (ECTA)
ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார்.
ஆதியாகமம் 15 : 10 (ECTA)
ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால், பறவைகளை அவர் வெட்டவில்லை.
ஆதியாகமம் 15 : 11 (ECTA)
துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
ஆதியாகமம் 15 : 12 (ECTA)
கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. [* யோபு 4:13, 14 ]
ஆதியாகமம் 15 : 13 (ECTA)
ஆண்டவர் ஆபிராமிடம், “நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர். [* திப 7: 7 ]
ஆதியாகமம் 15 : 14 (ECTA)
அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர்.
ஆதியாகமம் 15 : 15 (ECTA)
நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதாதையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய்.
ஆதியாகமம் 15 : 16 (ECTA)
நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில், எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை” என்றார்.
ஆதியாகமம் 15 : 17 (ECTA)
கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
ஆதியாகமம் 15 : 18 (ECTA)
அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள * திப 7:5..
ஆதியாகமம் 15 : 19 (ECTA)
கேனியர், கெனிசியர், கத்மோனியர்,
ஆதியாகமம் 15 : 20 (ECTA)
இத்தியர், பெரிசியர், இரபாவியர்
ஆதியாகமம் 15 : 21 (ECTA)
எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21