எசேக்கியேல் 39 : 1 (ECTA)
கோகின் படுதோல்வி மானிடா! நீ கோகுக்கு எதிராய் இறைவாக்குரைத்துச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. மெசேக்கு மற்றும் தூபால் இனங்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.
எசேக்கியேல் 39 : 2 (ECTA)
நான் உன்னைத் திருப்பி, தொலைவடக்குப் பகுதிகளிலிருந்து விரட்டி, இஸ்ரயேல் மலைகளுக்கு இழுத்துக்கொண்டு வருவேன்.
எசேக்கியேல் 39 : 3 (ECTA)
பின்னர் உன் இடக்கையில் இருக்கும் வில்லை நான் தட்டிவிட்டு வலக்கையில் இருக்கும் அம்புகளைக் கீழே விழச் செய்வேன்.
எசேக்கியேல் 39 : 4 (ECTA)
இஸ்ரயேல் மலைகளில் நீ வீழ்வாய்; நீயும் உன் எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் மக்களினங்களும் வீழ்வீர். நான் உன்னை ஊன் தின்னும் எல்லாப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
எசேக்கியேல் 39 : 5 (ECTA)
நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 39 : 6 (ECTA)
நான் மாகோகின்மீதும் கடலோரங்களில் பாதுகாப்பாய் வாழும் எல்லார்மீதும் நெருப்பை அனுப்புவேன். அப்பொழுது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
எசேக்கியேல் 39 : 7 (ECTA)
நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன். என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன். ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் தூயவராய் இருப்பவர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.
எசேக்கியேல் 39 : 8 (ECTA)
இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்; இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 39 : 9 (ECTA)
அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப் படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் வில்களையும் அம்புகளையும், வேல்களையும் ஈட்டிகளையும் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். ஏழாண்டுகள் இவ்வாறு எரிபொருளாய்ப் பயன்படுத்துவர்.
எசேக்கியேல் 39 : 10 (ECTA)
அவர்கள் விறகுகளை வயல் வெளியிலிருந்து சேகரிக்கவோ காடுகளிலிருந்து வெட்டவோ மாட்டார்கள். ஏனெனில் படைக்கலன்களை அவர்கள் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். அவர்கள் தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பர், தங்களைச் சூறையாடியோரைச் சூறையாடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 39 : 11 (ECTA)
அந்த நாளில் இஸ்ரயேல் கடலுக்குக் கிழக்கே வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கில் கோகுக்கு ஓர் இடுகாடு கொடுப்பேன். அது வழிப்போக்கரின் பாதையில் இருக்கும். ஏனெனில் கோகையும் அவனுடைய கூட்டத்தினர் அனைவரையும் அவர்கள் அங்கே புதைப்பர். எனவே அதை ‘அமோன் கோகு பள்ளத்தாக்கு’ என அழைப்பர். * எபிரேயத்தில், ‘கோகு கூட்டத்தினர்’ என்பது பொருள்..
எசேக்கியேல் 39 : 12 (ECTA)
நாட்டைத் தூய்மைப்படுத்தும்பொருட்டு இஸ்ரயேல் வீட்டார் அவர்களை ஏழு மாதங்கள் புதைப்பர்.
எசேக்கியேல் 39 : 13 (ECTA)
நாட்டின் எல்லா மக்களும் அவர்களைப் புதைப்பர். நான் என் மாட்சியை வெளிப்படுத்தும் அந்நாள் அவர்களுக்குச் சிறப்பான நாளாய் இருக்கும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 39 : 14 (ECTA)
நாட்டைத் தூய்மைப்படுத்த வழிப்போக்கர் குழு ஒன்றை அவர்கள் அழைப்பர். அக்குழுவினர் அவர்கள் நாடெங்கும் சென்று மண்ணில் எஞ்சிக் கிடக்கும் பிணங்களைத் தேடிப்புதைப்பர். ஏழு மாத முடிவில் அவர்கள் இப்படித் தேடத் தொடங்குவர்.
எசேக்கியேல் 39 : 15 (ECTA)
அவர்கள் நாடெங்கும் செல்கையில் ஒருவன் ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தால், புதைப்போர் அதனை அமோன் கோகு பள்ளத்தாக்கில் புதைக்கும் வரை, அதன் அருகில் ஓர் அடையாளம் வைக்க வேண்டும்.
எசேக்கியேல் 39 : 16 (ECTA)
இத்துடன் ‘அமோனா’ எனும் பெயரில் ஒரு நகரும் இருக்கும்; இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவர்.
எசேக்கியேல் 39 : 17 (ECTA)
மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்; வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள். உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது. நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம். [* திவெ 19:17- 18 ]
எசேக்கியேல் 39 : 18 (ECTA)
வலிமைமிகு மனிதரின் சதையை உண்பீர்கள். நாட்டின் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவற்றை, ஆட்டுக்கிடாய்கள், செம்மறிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள், பாசானின் கொழுத்த காளைகள் ஆகியவற்றை உண்பது போல உண்பீர்கள். [* திவெ 19:17- 18 ]
எசேக்கியேல் 39 : 19 (ECTA)
நான் உங்களுக்கெனத் தயாரிக்கும் பலியில் நீங்கள் தெவிட்டுமளவுக்குக் கொழுப்பை உண்டு, வெறியுண்டாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள். [* திவெ 19:17- 18 ]
எசேக்கியேல் 39 : 20 (ECTA)
என் மேசையில் நீங்கள் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் வலிமைமிகு மனிதர்களையும் எல்லாப் போர் வீரர்களையும் வயிறார உண்பீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [* திவெ 19:17- 18 ]
எசேக்கியேல் 39 : 21 (ECTA)
இஸ்ரயேலுக்கு மறுவாழ்வு நான் என் மாட்சியை வேற்றினத்தாரிடையே வெளிப்படுத்துவேன். நான் நிறைவேற்றும் தண்டனைத் தீர்ப்பையும் அவர்கள் மீது விழும் என் கைவலிமையையும் எல்லா மக்களினத்தாரும் காண்பர்.
எசேக்கியேல் 39 : 22 (ECTA)
ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்பதை அந்நாளிலிருந்து இஸ்ரயேல் வீட்டார் அறிந்துகொள்வர்.
எசேக்கியேல் 39 : 23 (ECTA)
இஸ்ரயேல் மக்கள் எனக்கு உண்மையற்றவராய் நடந்ததால் தங்கள் பாவத்தின் பொருட்டுச் சிறையிருப்புக்குச் சென்றனர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர். எனவே நான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டு அவர்களைப் பகைவர்களிள் கையில் ஒப்புவித்தேன். அவர்கள் எல்லாரும் வாளால் வீழ்ந்தனர்.
எசேக்கியேல் 39 : 24 (ECTA)
நான் அவர்களின் தீட்டுக்கும் குற்றங்களுக்கும் ஏற்றபடி அவர்களை நடத்தி என் முகத்தை அவர்களிடமிருந்து திருப்பிக்கொண்டேன்.
எசேக்கியேல் 39 : 25 (ECTA)
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இப்போது நான் யாக்கோபை முன்னைய நன்னிலைக்குக் கொணர்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவர் மீதும் மனம் இரங்குவேன். என் திருப்பெயர் குறித்து பேரார்வம் கொண்டிருப்பேன்.
எசேக்கியேல் 39 : 26 (ECTA)
அவர்கள் தங்கள் நாட்டில் எவருடைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்புடன் வாழும்போது, தங்கள் அவமானத்தையும் அவர்கள் எனக்குச் செய்த எல்லா நம்பிக்கைத் துரோகங்களையும் மறந்து விடுவர்.
எசேக்கியேல் 39 : 27 (ECTA)
நான் அவர்களை வேற்றினத்தாரிடமிருந்தும் பகை நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கையில், நான் தூயவர் என அவர்கள் வழியாய்ப் பல மக்களினங்கள் முன்னால் வெளிப்படுத்துவேன்.
எசேக்கியேல் 39 : 28 (ECTA)
அப்போது ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்று அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நான் அவர்களை வேற்றித்தாரிடையே சிறையிருப்புக்கு அனுப்பினாலும் அவர்களது நாட்டிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களில் யாரையும் அங்கே விட்டுவிட மாட்டேன்.
எசேக்கியேல் 39 : 29 (ECTA)
நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29