எசேக்கியேல் 35 : 1 (ECTA)
ஏதோமுக்குக் கடவுளின் தண்டனை ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 35 : 2 (ECTA)
மானிடா! உன் முகத்தைச் சேயிர் மலைக்கு நேராய்த் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்குரை.
எசேக்கியேல் 35 : 3 (ECTA)
அதற்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; சேயிர் மலையே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன். என் கையை உனக்கெதிராய் நீட்டி உன்னைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன்.
எசேக்கியேல் 35 : 4 (ECTA)
உன் நகர்களை இடிபாடுகளாய் மாற்றுவேன். நீ பாழிடமாய் இருப்பாய். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.
எசேக்கியேல் 35 : 5 (ECTA)
ஏனெனில் முற்காலப் பகையை மனத்தில் கொண்டு நீ இஸ்ரயேலரை அவர்களின் துன்பகாலத்தில், அவர்களது தண்டனையின் உச்சக் கட்டத்தில் வாளுக்கு இரையாக்குமாறு கையளித்தாய். * எண் 27:17; 1 அர 22:17; மத் 9:36; மாற் 6:34..
எசேக்கியேல் 35 : 6 (ECTA)
எனவே, என்மேல் ஆணை! உன்னை இரத்தப் பழிக்குக் கையளிப்பேன். அப்பழி உன்னைத் தொடரும், நீ இரத்தம் சிந்துதலை வெறுக்காததால் அது உன்னைத் தொடரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 35 : 7 (ECTA)
சேயிர் மலையைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன். அதன் வழியாய்ச் செல்லும் போக்குவரத்தை நிறுத்துவேன்.
எசேக்கியேல் 35 : 8 (ECTA)
உன் மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவேன். வாளால் கொல்லப்பட்டோர் உன் குன்றுகளிலும் பள்ளத் தாக்குகளிலும் எல்லா ஓடைகளிலும் வீழ்வர்.
எசேக்கியேல் 35 : 9 (ECTA)
உன்னை என்றென்றும் பாழிடமாய் ஆக்குவேன். உன் நகரங்கள் குடியற்றுப்போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வாய்.
எசேக்கியேல் 35 : 10 (ECTA)
ஆண்டவராகிய நான் அங்கே இருந்தபோதும் நீ ‘இவ்விரு இனங்களும் நாடுகளும் என்னுடையவை; நான் அவற்றை உடைமையாக்கிக் கொள்வேன்’ எனச் சொன்னாய்.
எசேக்கியேல் 35 : 11 (ECTA)
எனவே, என் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராகக் காட்டிய பகைமைக்கும் சினத்திற்கும் பொறாமைக்கும் ஏற்ப, நான் உன்னை நடத்துவேன். நான் உன்னைத் தீர்ப்பிடும்போது, அவர்களிடையே என்னை அறியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 35 : 12 (ECTA)
அப்போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன எல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய். “அவை பாழாக்கப்பட்டுவிட்டன; இரையாகத் தரப்பட்டுள்ளன” என்று நீ சொன்னாய்.
எசேக்கியேல் 35 : 13 (ECTA)
நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி, உன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய். அவற்றை நான் கேட்டேன்.
எசேக்கியேல் 35 : 14 (ECTA)
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உலகு முழுவதும் மகிழ்வடையும்படி நான் உன்னைப் பாழாக்குவேன்.
எசேக்கியேல் 35 : 15 (ECTA)
இஸ்ரயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழாக்கப்படுகையில் நீ மகிழ்வடைந்ததால் நானும், உனக்கு அவ்வாறே நடக்கச் செய்வேன். சேயிர் மலையும் ஏதோம் முழுவதும் பாழிடமாகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15