அவர் என்னை நோக்கி, “மானிடா! எழுந்து நில், உன்னோடு பேசுவேன்” என்றார்.
எசேக்கியேல் 2 : 2 (ECTA)
அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.
எசேக்கியேல் 2 : 3 (ECTA)
அவர் என்னிடம், “மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்” என்றார்.
எசேக்கியேல் 2 : 4 (ECTA)
“வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், ‘தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே’ என்று சொல்.
எசேக்கியேல் 2 : 5 (ECTA)
கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
எசேக்கியேல் 2 : 6 (ECTA)
மானிடா! நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே. முட்புதர்களும் நெருஞ்சில்களும் உன்னைச் சூழ்ந்திருந்தாலும், தேள்களுடன் நீ வாழ்ந்தாலும், அவர்களின் சொற்களுக்கு அஞ்சாதே. அவர்கள் கலகம் செய்யும் வீட்டாராய் இருப்பினும் அவர்களின் பார்வையைக் கண்டு நடுங்காதே.
எசேக்கியேல் 2 : 7 (ECTA)
அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. அவர்களோ கலகம் செய்வோர்.
எசேக்கியேல் 2 : 8 (ECTA)
நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்துவிடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைக் தின்று விடு” என்றார்.
எசேக்கியேல் 2 : 9 (ECTA)
அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது. * திவெ 5:1..
எசேக்கியேல் 2 : 10 (ECTA)
அவர் அச்சுருளேட்டை என்முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும், கேடுகளும் எழுதப்பட்டிருந்தன. * திவெ 5:1..