எசேக்கியேல் 11 : 1 (ECTA)
எருசலேம் தண்டனைத் தீர்ப்புப் பெறுதல் பின்னர் ஆவி என்னைத் தூக்கி ஆண்டவரது இல்லத்தின் கிழக்குநோக்கி இருக்கும் கீழை வாயிலுக்குக் கொண்டுவந்தது. அவ்வாயிற்பகுதியில் இருபத்தைந்து பேர் இருந்தனர். அவர்கள் நடுவே மக்கள் தலைவர்களான அசூரின் மகன் யாசனியாவையும் பெனாயாவின் மகன் பெலற்றியாவையும் கண்டேன்.
எசேக்கியேல் 11 : 2 (ECTA)
அவர் என்னை நோக்கி, “மானிடா! இந்நகரில் கெடுதலானவற்றைத் திட்டமிடுபவர்களும் தீய அறிவுரை கூறுபவர்களும் இவர்களே.
எசேக்கியேல் 11 : 3 (ECTA)
‘வீடுகட்டும் காலம் அருகில் உள்ளது அன்றோ! இந்நகர் ஒரு பாண்டம், நாமோ இறைச்சி’ என அவர்கள் சொல்கிறார்கள்.
எசேக்கியேல் 11 : 4 (ECTA)
ஆகவே, அவர்களுக்கெதிராக இறைவாக்குரை! மானிடா! இறைவாக்கு உரை!” என்றார்.
எசேக்கியேல் 11 : 5 (ECTA)
அப்போது ஆண்டவரது ஆவி என்மீது இறங்கியது. ஆண்டவர் என்னிடம் கூறுவது; “நீ சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் இவ்வாறெல்லாம் எண்ணுகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் உள்ளதை நான் அறிவேன்.
எசேக்கியேல் 11 : 6 (ECTA)
நீங்கள் இந்நகரில் பலரைக் கொலை செய்துள்ளீர்கள். இதன் தெருக்களைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள்.”
எசேக்கியேல் 11 : 7 (ECTA)
ஆகையால், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உங்களால் கொலை செய்யப்பட்டு இதனுள் போடப்பட்டவர்கள்தான் இறைச்சி; இந்நகர் ஒரு பாண்டம். உங்களையோ நான் இதனுள்ளிருந்து வெளியேற்றுவேன்.
எசேக்கியேல் 11 : 8 (ECTA)
வாளுக்கு நீங்கள் அஞ்சினீர்கள்; ஆனால் வாளையே உங்கள் மீது கொணர்வேன்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 11 : 9 (ECTA)
நான் உங்களை இந்நகரினின்று வெளியேற்றி உங்களை மாற்றாரிடம் கையளித்து உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.
எசேக்கியேல் 11 : 10 (ECTA)
உங்களுக்கு நான் வழங்கும் தீர்ப்பு; நீங்கள் இஸ்ரயேலின் எல்லையில் வாளால் வீழ்வீர்கள். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
எசேக்கியேல் 11 : 11 (ECTA)
இந்நகர் உங்களுக்கு ஒரு பாண்டமாக இராது; நீங்களும் இதிலுள்ள இறைச்சியாக இருக்கமாட்டீர்கள்; இஸ்ரயேலின் எல்லையில் நான் உங்களைத் தீர்ப்பிடுவேன்.
எசேக்கியேல் 11 : 12 (ECTA)
நீங்கள் மீறிய நியமங்களின் ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் நீதி நெறிகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தாரின் நீதிநெறிகளைப் பின்பற்றினீர்கள்.
எசேக்கியேல் 11 : 13 (ECTA)
நான் இறைவாக்குரைத்தபோது, பெனாயாவின் மகன் பெலற்றியா செத்துப்போனான். நான் முகம்குப்புற விழுந்து, உரத்த குரலில், “ஐயோ, தலைவராகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் எஞ்சியிருப்போரை முற்றிலும் அழிக்கப் போகிறீரோ?” என்று கதறினேன்.
எசேக்கியேல் 11 : 14 (ECTA)
நாடு கடத்தப்பட்டோருக்குக் கடவுளின் வாக்குறுதி அப்போது, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எசேக்கியேல் 11 : 15 (ECTA)
“மானிடா! உன் சகோதரர், உன் உறவின் முறையினர் மற்றும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்து, ‘அவர்கள் ஆண்டவரை விட்டுத் தொலைவில் போய்விட்டார்கள்; எங்களுக்குத்தான் இந்நாடு உரிமையாய்க் கொடுக்கப்பட்டுள்ளது’ என எருசலேமில் வாழ்வோர் கூறுகின்றனர்.
எசேக்கியேல் 11 : 16 (ECTA)
எனவே நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ‘நான் அவர்களைத் தொலைவில் வேற்றினத்தாரிடையே அனுப்பி இருந்தாலும், நாடுகளிடையே அவர்களைச் சிதறடித்திருந்தாலும் அவர்கள் சென்ற அந்நாடுகளில் அவர்களுக்கு நான் ஒரு சிறிய தூயகமாக இருந்துள்ளேன்.
எசேக்கியேல் 11 : 17 (ECTA)
ஆதலால் நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உங்களை மக்களினங்களிடையே இருந்து கூட்டிச் சேர்த்து நீங்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று உங்களை ஒன்று சேர்த்து இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குத் தருவேன்.
எசேக்கியேல் 11 : 18 (ECTA)
அவர்கள் அங்கு வந்ததும், வெறுக்கத்தக்க எல்லாவற்றையும், அருவருப்புகள் அனைத்தையும் அதனின்று களைவார்கள்.
எசேக்கியேல் 11 : 19 (ECTA)
அவர்களுக்கு நான் வேறோர் இதயத்தையும் புதியதோர் ஆவியையும் வழங்குவேன். கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து விட்டு, சதையாலான இதயத்தை அருளுவேன். [* எசே 36:26- 28 ]
எசேக்கியேல் 11 : 20 (ECTA)
அப்போது அவர்கள் என் நியமங்களின்படி நடப்பார்கள். என் நீதிநெறிகளுக்குச் செவி கொடுத்து அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். [* எசே 36:26- 28 ]
எசேக்கியேல் 11 : 21 (ECTA)
ஆனால், வெறுக்கத்தக்கவற்றையும் அருவருப்புகளையும் நாடிச்செல்லும் இதயம் கொண்டவர்களின் வழிமுறைகளை அவர்களின் தலைமீதே சுமத்துவேன்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
எசேக்கியேல் 11 : 22 (ECTA)
கடவுளின் மாட்சி எருசலேமைவிட்டு விலகல் கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரிக்க, சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின்மேல் இருந்தது. * எசே 43:2-5..
எசேக்கியேல் 11 : 23 (ECTA)
ஆண்டவரது மாட்சி நகரின் நடுவினின்று எழுந்து நகருக்குக் கிழக்கே உள்ள மலைமீது போய் நின்றது. * எசே 43:2-5..
எசேக்கியேல் 11 : 24 (ECTA)
அப்போது, இறைக்காட்சியில் ஆவி என்னைத் தூக்கிக் கல்தேயாவிலிருந்த நாடுகடத்தப்பட்டோரிடம் கொண்டு சென்றது. பின்னர் நான் கண்ட காட்சி என்னை விட்டு அகன்றது.
எசேக்கியேல் 11 : 25 (ECTA)
நானும் ஆண்டவர் எனக்குக் காண்பித்த அனைத்தையும் நாடுகடத்தப்பட்டோரிடம் எடுத்துச் சொன்னேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25