யாத்திராகமம் 39 : 1 (ECTA)
குருக்களுக்கான உடைகள் செய்தல்
(விப 28:1-14) நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன. ஆண்டவர் மோசேக்கு அளித்த கட்டளைப்படி ஆரோனுக்காகத் திருவுடைகள் செய்யப்பட்டன.
யாத்திராகமம் 39 : 2 (ECTA)
பொன்னையும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி ஏப்போதை அவர் செய்தார்.
யாத்திராகமம் 39 : 3 (ECTA)
நீலம், கருஞ்சிவப்பு சிவப்புநிற நூல், கலைத்திறனுடன் அமைந்த மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை அணிசெய்ய, பொன்தகடுகளை அடித்து இழைகளாக வெட்டினார்.
யாத்திராகமம் 39 : 4 (ECTA)
ஏப்போதுக்கு இரு தோள்பட்டைகள் செய்து, அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் இணைத்தார்.
யாத்திராகமம் 39 : 5 (ECTA)
ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப்போன்றே கலை நுணுக்கத்துடன் பொன்னாலும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தயாரிக்கப்பெற்றது.
யாத்திராகமம் 39 : 6 (ECTA)
பன்னிற மணிக்கற்களுக்கு மெருகேற்றி அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்தனர். இஸ்ரயேல் புதல்வரின் பெயர்களை அவற்றின்மேல் முத்திரையாகப் பொறித்துப்பதித்தனர்.
யாத்திராகமம் 39 : 7 (ECTA)
ஏப்போதின் தோள்பட்டைமேல் அவற்றை இஸ்ரயேல் புதல்வரின் நினைவுக் கற்களாக ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பொருத்தினர்.
யாத்திராகமம் 39 : 8 (ECTA)
மார்புப் பட்டை செய்தல்
(விப 28:15-30) மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது. அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.
யாத்திராகமம் 39 : 9 (ECTA)
மார்புப்பட்டை ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் என்று சதுர வடிவமானதாயும் இரண்டாக மடிந்ததாயும் அமைந்தது.
யாத்திராகமம் 39 : 10 (ECTA)
அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதித்தனர்; முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;
யாத்திராகமம் 39 : 11 (ECTA)
இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;
யாத்திராகமம் 39 : 12 (ECTA)
மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;
யாத்திராகமம் 39 : 13 (ECTA)
நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல். இவையாவும் பொன்னிழைப் பின்புலத்தில் பதிக்கப்பட்டன.
யாத்திராகமம் 39 : 14 (ECTA)
இந்த கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம் பன்னிரண்டு பெயர்களும் முத்திரை பொறிப்பதுபோல் வெட்டப்பட்டன.
யாத்திராகமம் 39 : 15 (ECTA)
மார்புப் பட்டைமேல் பொருத்துவதற்காகப் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்தனர்.
யாத்திராகமம் 39 : 16 (ECTA)
மேலும், பொன் பதக்கங்கள் இரண்டும் பொன் வளையங்கள் இரண்டும் செய்தனர். பின்னர் அந்த இரு வளையங்களை மார்புப் பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்தி,
யாத்திராகமம் 39 : 17 (ECTA)
இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டினர்.
யாத்திராகமம் 39 : 18 (ECTA)
சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டினர். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, அதன் முன்புறமாய் பொருத்தினர்.
யாத்திராகமம் 39 : 19 (ECTA)
இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில், உட்புற ஓரங்களில், ஏப்போதை அடுத்து இணைத்தனர்.
யாத்திராகமம் 39 : 20 (ECTA)
மேலும், இரு பொன் வளையங்கள் செய்து அவற்றை ஏப்போதின் இரு தோள்பட்டைகளில் முன்பக்கம், கீழ்ப்பகுதியில், அது இணையும் இடத்தில் ஏப்போதின் பின்னலழகுடைய இடைக் கச்சைக்கு மேலே கோர்த்துவிட்டனர்.
யாத்திராகமம் 39 : 21 (ECTA)
பின்னர், மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களுடன் நீல நாடாவால் இணைத்தனர். இவ்வாறு மார்புப் பட்டை ஏப்போதின் பின்னலழகு இடைக்கச்சையிலிருந்து அகலாமல் ஏப்போதின் மேல் படிந்து நிற்கும். இதுவும் ஆண்டவர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 39 : 22 (ECTA)
குருக்களுக்கான பிற உடைகள் செய்தல்
(விப 28:31-43) அவர் ஏப்போதின் அங்கி முழுவதையும் நீல நிறத்தில் நெசவு வேலைப்பாட்டுடன் செய்தார்.
யாத்திராகமம் 39 : 23 (ECTA)
அந்த அங்கியின் திறப்பைச் சுற்றிலும், மேலாடைகள் திறப்பில் அமைவது போன்று நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரை அமைக்கப்பட்டது. இதனால் அங்கி கிழியாதிருக்கும்.
யாத்திராகமம் 39 : 24 (ECTA)
அங்கியின் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் மாதுளைத் தொங்கல் செய்து விடப்பட்டது. * ‘இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது செக்கேலும்’ என்பது எபிரேய பாடம்.
யாத்திராகமம் 39 : 25 (ECTA)
பசும்பொன்னால் மணிகள் செய்து அம் மணிகளை அங்கியின் விளிம்பெங்கும் உள்ள மாதுளைத் தொங்கல்களுக்கு இடையே இட்டனர். [* விப 30:11- 16 ; ‘நூறு தாலந்தும் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேலும்’ என்பது எபிரேய பாடம். ]
யாத்திராகமம் 39 : 26 (ECTA)
ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல்; பின்னும் ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று திருப்பணி அங்கியின் விளிம்பெங்கும் அமைந்திருந்தன. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது. [* விப 30:11- 16 ; மத் 17: 24. ; ‘பெக்கா’ என்பது எபிரேய பாடம். ]
யாத்திராகமம் 39 : 27 (ECTA)
ஆரோனுக்காகவும் அவர் புதல்வருக்காகவும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி தைக்கப்பட்டது. * ‘நூறு தாலந்து’ என்பது எபிரேய பாடம்.
யாத்திராகமம் 39 : 28 (ECTA)
மெல்லிய நார்ப்பட்டால் தலைப்பாகையும் தொப்பிகளும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் குறுங்கால்சட்டைகளும் செய்யப்பட்டன. * ‘ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்து செக்கேல்’ என்பது எபிரேய பாடம்.
யாத்திராகமம் 39 : 29 (ECTA)
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் இடைக்கச்சை செய்யப்பட்டது. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது. * ‘எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு செக்கேலும்’ என்பது எபிரேய பாடம்..
யாத்திராகமம் 39 : 30 (ECTA)
புனித மணிமுடிக்கான பட்டத்தைப் பசும் பொன்னால் செய்து, அதன் மேல் “ஆண்டவருக்கு அர்ப்பணம்” என்று முத்திரைபோல் பொறித்து வைத்தனர்.
யாத்திராகமம் 39 : 31 (ECTA)
அது ஒரு நீல நாடாவால் தலைப்பாகையின் மேல் இணைக்கப்பட்டது. இதுவும் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
யாத்திராகமம் 39 : 32 (ECTA)
கூடாரவேலை நிறைவுபெறுதல்
(விப 35:10-19) சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட வேலையெல்லாம் முடிவடைந்தது. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே இஸ்ரயேல் மக்கள் செய்து முடித்திருந்தனர்.
யாத்திராகமம் 39 : 33 (ECTA)
மோசேயிடம் கொண்டுவரப்பட்டவை; திருஉறைவிடக் கூடாரம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்.
யாத்திராகமம் 39 : 34 (ECTA)
செந்நிறமாகப் பதனிட்ட செம்மறிக்கிடாய்த் தோல்விரிப்புகள், வெள்ளாட்டுத் தோல்விரிப்புகள், திருத்தூயகத் தொங்குதிரை,
யாத்திராகமம் 39 : 35 (ECTA)
உடன்படிக்கைப் பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை,
யாத்திராகமம் 39 : 36 (ECTA)
மேசை, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
யாத்திராகமம் 39 : 37 (ECTA)
பசும்பொன் விளக்குத்தண்டு, அதில் வரிசையாக அமைந்த அகல்கள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், விளக்குக்கான எண்ணெய்,
யாத்திராகமம் 39 : 38 (ECTA)
பொன் பீடம், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார நுழைவாயிலின் தொங்குதிரை,
யாத்திராகமம் 39 : 39 (ECTA)
வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், அதன் தண்டுகள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
யாத்திராகமம் 39 : 40 (ECTA)
முற்றத்தின் தொங்குதிரைகள், அதன் தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலுக்கான தொங்குதிரை, பூண்கள், முளைகள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத் திருப்பணிக்குத் தேவையான அனைத்துத் துணைக்கலன்கள்,
யாத்திராகமம் 39 : 41 (ECTA)
தூயகத்தில் பணிபுரிவதற்கான அழகுறப் பின்னப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் குருத்துவப் பணி புரிவதற்கான திருவுடைகள் ஆகியவை.
யாத்திராகமம் 39 : 42 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் நுணுக்கமாகச் செய்து முடித்திருந்தனர்.
யாத்திராகமம் 39 : 43 (ECTA)
மோசே எல்லா வேலைகளையும் பார்வையிட்டார். ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே அவை யாவும் செய்யப்பட்டிருந்தன. மோசே அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
❮
❯