யாத்திராகமம் 33 : 1 (ECTA)
ஆண்டவரின் கட்டளை ஆண்டவர் மோசேயை நோக்கி, “எகிப்து நாட்டிலிருந்து நீ நடத்தி வந்த மக்களுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோருடன் அவர்கள் வழிமரபினருக்குத் தருவதாக நான் வாக்களித்த அந்த நாட்டிற்குச் செல். [* தொநூ 12:7; 26:3; 28: 13 ]
யாத்திராகமம் 33 : 2 (ECTA)
நான் ஒரு தூதரை உனக்குமுன் அனுப்பிக் கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரைத் துரத்தி விடுவேன்.
யாத்திராகமம் 33 : 3 (ECTA)
பாலும் தேனும் பொழியும் நாட்டுக்குப் போங்கள். நான் உங்களோடு வரப்போவதில்லை. ஏனெனில், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், ஆதலால், வழியில் நான் உங்களை அழித்தொழிக்க நேரிடும்” என்றார்.
யாத்திராகமம் 33 : 4 (ECTA)
இத்துயரச் செய்தியைக் கேட்டபோது மக்கள் அழுது புலம்பினர். யாருமே அணிகலன்கள் அணிந்துகொள்ளவில்லை.
யாத்திராகமம் 33 : 5 (ECTA)
ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம், “நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், நொடிப்பொழுதில் நான் உங்களிடையே வந்து, உங்களை அழித்தொழிக்கப்போகிறேன். உடனடியாக உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும் என இஸ்ரயேல் மக்களுக்கு அறிவி” என்று கூறியிருந்தார்.
யாத்திராகமம் 33 : 6 (ECTA)
அவ்வாறே, இஸ்ரயேல் மக்கள் ஓரேபு மலையை விட்டுப் புறப்பட்டபின் தங்கள் அணிகலன்களை அணியவே இல்லை.
யாத்திராகமம் 33 : 7 (ECTA)
சந்திப்புக் கூடாரம் மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.
யாத்திராகமம் 33 : 8 (ECTA)
மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்றுகொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர்.
யாத்திராகமம் 33 : 9 (ECTA)
மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார்.
யாத்திராகமம் 33 : 10 (ECTA)
கூடார நுழை வாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழை வாயிலில் நின்றுகொண்டே மக்கள் அனைவரும் வணங்கித்தொழுவர்.
யாத்திராகமம் 33 : 11 (ECTA)
ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டகலாமல் இருப்பார்.
யாத்திராகமம் 33 : 12 (ECTA)
ஆண்டவரின் வாக்குறுதி மோசே ஆண்டவரிடம், “‘இம்மக்களை நடத்திச்செல்’ என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. ‘பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்’ என்றும் ‘நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்’ என்றும் கூறியுள்ளீர்.
யாத்திராகமம் 33 : 13 (ECTA)
இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும். உம்மை இதனால் அறிந்துகொள்வேன். உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன். மேலும், இந்த இனம் உம்மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்” என்றார்.
யாத்திராகமம் 33 : 14 (ECTA)
அதற்கு ஆண்டவர், “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்று கூற,
யாத்திராகமம் 33 : 15 (ECTA)
மோசே அவரிடம், “உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்.
யாத்திராகமம் 33 : 16 (ECTA)
நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?” என்றார்.
யாத்திராகமம் 33 : 17 (ECTA)
அதற்கு ஆண்டவர் மோசேயிடம், “நீ கூறியபடியே நான் செய்வேன். ஏனெனில், நீ என் பார்வையில் தயைபெற்றுள்ளாய். மேலும் பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்” என்றார்.
யாத்திராகமம் 33 : 18 (ECTA)
அப்போது மோசே, “உம்மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்” என்று கூற,
யாத்திராகமம் 33 : 19 (ECTA)
அவர், “என் நிறை அழகை உன்முன் கடந்து போகச் செய்து ஆண்டவர் என்ற பெயரை உன்முன் அறிவிப்பேன். யார்யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றார். * உரோ 9:15..
யாத்திராகமம் 33 : 20 (ECTA)
மேலும் அவர், “என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது” என்றார்.
யாத்திராகமம் 33 : 21 (ECTA)
பின்பு, ஆண்டவர் “இதோ, எனக்கருகில் ஓர் இடம். இங்கிருக்கும் பாறையின் மேல் நீ நின்று கொள்.
யாத்திராகமம் 33 : 22 (ECTA)
என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்.
யாத்திராகமம் 33 : 23 (ECTA)
பின்பு, நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23