யாத்திராகமம் 28 : 1 (ECTA)
குருக்களின் உடைகள்
(விப 39:1-7) எனக்குக் குருத்துவப்பணி புரிவதற்காக உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோரையும் இஸ்ரயேல் மக்கள் நடுவிலிருந்து அழைத்துவா.
யாத்திராகமம் 28 : 2 (ECTA)
உன் சகோதரன் ஆரோனுக்காக மாண்பும், அழகும் பொருந்திய திருவுடைகள் செய்வாய்.
யாத்திராகமம் 28 : 3 (ECTA)
திறமையால் நான் நிரப்பியுள்ள வல்லுநர்கள் எல்லாரிடமும் சொல்; எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு ஆரோனைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்கள் திருவுடைகள் செய்வார்கள்.
யாத்திராகமம் 28 : 4 (ECTA)
செய்யப்பட வேண்டிய உடைகளாவன; மார்புப்பட்டை, ஏப்போது, அங்கி, கோடிட்ட உள்ளாடை, தலைப்பாகை, இடைக்கச்சை ஆகியவை. இவ்வாறே, எனக்குக் குருத்துவப்பணி புரியும்படி உன் சகோதரன் ஆரோனுக்காகவும் அவன் புதல்வர்களுக்காகவும் திருவுடைகள் செய்யப்படட்டும்.
யாத்திராகமம் 28 : 5 (ECTA)
பொன்னையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி,
யாத்திராகமம் 28 : 6 (ECTA)
பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் கைதேர்ந்த வேலைப்பாடுடன் ஏப்போதை அமைக்கட்டும்.
யாத்திராகமம் 28 : 7 (ECTA)
அதற்கு இரு தோள்பட்டைகள் செய்து அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் அதை இணைத்துவிடு.
யாத்திராகமம் 28 : 8 (ECTA)
ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப் போலவே பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பெறும்.
யாத்திராகமம் 28 : 9 (ECTA)
பன்னிற மணிக்கற்கள் இரண்டு எடுத்து அவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.
யாத்திராகமம் 28 : 10 (ECTA)
அறுவர் பெயர்களை ஒரு கல்லிலும் ஏனைய அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.
யாத்திராகமம் 28 : 11 (ECTA)
கல்வேலைப்பாடாயும், முத்திரைவெட்டுப்போன்றும், இஸ்ரயேல் புதல்வர் பெயர்களை இரண்டு கற்களிலும் பொறித்து, அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்து வைப்பாய்.
யாத்திராகமம் 28 : 12 (ECTA)
இவ்விரு கற்களையும் ஏப்போதின் தோள்பட்டையில் பொருத்திவிடு. இவை இஸ்ரயேல் மக்களின் நினைவுக் கற்களாகும். ஆரோன் அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும் ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாகத் தாங்கி நிற்பான்.
யாத்திராகமம் 28 : 13 (ECTA)
பொன் வேலைப்பாட்டுடன் பதக்கங்கள் செய்.
யாத்திராகமம் 28 : 14 (ECTA)
பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து, சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.
யாத்திராகமம் 28 : 15 (ECTA)
மார்புப் பட்டை
(விப 39:8-21) தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும். அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.
யாத்திராகமம் 28 : 16 (ECTA)
அது இரண்டாக மடிந்ததாயும், நீளம் ஒரு சாண், அகலம் ஒரு சாண் என்று சதுர வடிவமானதாயும் இருக்க வேண்டும். * ‘செரத்து’ என்பது எபிரேய பாடம்.
யாத்திராகமம் 28 : 17 (ECTA)
அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய். முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;
யாத்திராகமம் 28 : 18 (ECTA)
இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;
யாத்திராகமம் 28 : 19 (ECTA)
மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;
யாத்திராகமம் 28 : 20 (ECTA)
நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல் — இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.
யாத்திராகமம் 28 : 21 (ECTA)
இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம், பன்னிரண்டு குலங்கங்களுக்காகப் பன்னிரன்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு முத்திரைபோல் விளங்கும்.
யாத்திராகமம் 28 : 22 (ECTA)
மார்புப் பட்டைமேல் பொருத்த, பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 28 : 23 (ECTA)
மார்புப் பட்டைக்காக இரு பொன் வளையங்களை செய்து, அந்த இரு வளையங்களையும் மார்புப்பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்துவாய்.
யாத்திராகமம் 28 : 24 (ECTA)
இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டிவிடு.
யாத்திராகமம் 28 : 25 (ECTA)
சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டுவாய். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, முன்புறமாய்ப் பொருத்துவாய்.
யாத்திராகமம் 28 : 26 (ECTA)
இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில் உட்புற ஓரங்களில் ஏப்போதை அடுத்து இணைப்பாய்.
யாத்திராகமம் 28 : 27 (ECTA)
மேலும், இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை ஏப்போதின் இரு தோள் பட்டைகளின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் அது இணையுமிடத்தில், ஏப்போதின் பின்னலழகுக் கச்சைக்கு மேலே கோர்த்துவிடு.
யாத்திராகமம் 28 : 28 (ECTA)
பின்னர், மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களோடு, நீல நாடாவால் இணைத்துக் கட்டு. இவ்வாறு மார்புப்பட்டை ஏப்போதின் பின்னலழகுக் கச்சையிலிருந்து அகலாமலும் ஏப்போதின் மேல்படிந்தும் நிற்கும்.
யாத்திராகமம் 28 : 29 (ECTA)
ஆரோன் திருத்தலத்திற்குள் செல்கையில், தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையின் மேலுள்ள இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைத் தம் நெஞ்சின் மேல் தாங்கி நிற்பான். அவை ஆண்டவர் திருமுன் நீங்காத நினைவுச் சின்னமாகத் திகழும்.
யாத்திராகமம் 28 : 30 (ECTA)
தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில், ஊரிமையும் தும்மியையும் இட்டு வைப்பாய். ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில், அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும். இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான். [* எண் 27:21; இச 33:8; எஸ்ரா 2:63; நெகெ 7: 65 ; * கடவுளின் திருவுளத்தை அறிவதற்குக் குருக்கள் பயன்படுத்தும் இரு பொருள்கள்.. ]
யாத்திராகமம் 28 : 31 (ECTA)
குருக்களின் பிற உடைகள்
(விப 39:22-31) ஏப்போதின் அங்கி முழுவதும் நீல நிறத்தில் செய்வாய்.
யாத்திராகமம் 28 : 32 (ECTA)
அதில் தலை நுழைய ஒரு திறப்பும், அதனைச் சுற்றி, மேலாடைகளின் திறப்பில் அமைவது போன்று, நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரையும், அமைந்திருக்கட்டும். ஆக, அது கிழியாதிருக்கும்.
யாத்திராகமம் 28 : 33 (ECTA)
அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.
யாத்திராகமம் 28 : 34 (ECTA)
ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல், பின்னும் ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று அங்கியின் விளிம்பெங்கும் அமைத்திடு.
யாத்திராகமம் 28 : 35 (ECTA)
திருப்பணி புரிகையில் ஆரோன் இதனை அணிந்திருக்க வேண்டும். இதனால் அவன் ஆண்டவர் திருமுன் தூயகத்தில் நுழைகையிலும் வெளி வருகையிலும் அதன் ஒலி கேட்கும். இல்லையெனில் அவன் சாவான்.
யாத்திராகமம் 28 : 36 (ECTA)
பசும் பொன்னால் ஒரு பட்டம் செய்து, அதன் மேல் “ஆண்டவருக்கு அர்ப்பணம்” என்று முத்திரைபோல் பொறித்து வைத்து,
யாத்திராகமம் 28 : 37 (ECTA)
அதனை ஒரு நீல நாடாவால் தலைப்பாகைமேல் இணைத்துக்கட்டு; தலைப்பாகையின் முன்புறம் அது நிற்கும்.
யாத்திராகமம் 28 : 38 (ECTA)
அது ஆரோனின் நெற்றிமேல் நிற்கட்டும். இஸ்ரயேல் மக்களைப் புனிதமாக்கும் திருப்பொருள்கள், அவர்கள் அளிக்கும் புனிதப் படையல்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை ஆரோன் சுமந்து கொள்ளவும். இதனால் யாவும் ஆண்டவர் திருமுன் ஏற்கப் பெறவும், அது எப்போதும் அவன் நெற்றிமேல் நிற்கட்டும்.
யாத்திராகமம் 28 : 39 (ECTA)
மேலும், மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி செய்யவேண்டும். தலைப்பாகையையும் மெல்லிய நார்ப்பட்டால் நெய்வாய். பின்னல் வேலைப்பாட்டுடன் ஓர் இடைக்கச்சையையும் செய்வாய்.
யாத்திராகமம் 28 : 40 (ECTA)
ஆரோனின் புதல்வர்களுக்குத் தேவையான அங்கிகளும், இடைக் கச்சைகளும், தலைப்பாகைகளும் மாண்பும் அழகும் பொருந்தியனவாய் செய்யப்படட்டும்.
யாத்திராகமம் 28 : 41 (ECTA)
இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய். அவர்களுக்கு அருள்பொழிவு செய்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய். அவர்கள் எனக்கு குருத்துவப்பணி புரிவார்கள்.
யாத்திராகமம் 28 : 42 (ECTA)
அவர்களின் பிறந்தமேனி மறைவதற்காக இடுப்பு முதல் தொடைகள் வரை நீண்டிருக்கும் அளவில் மெல்லிய நார்ப்பட்டால் கால்சட்டைகள் செய்வர்.
யாத்திராகமம் 28 : 43 (ECTA)
சந்திப்புக்கூடாரத்திற்குப் போகும்போதும், தூயதலத்தில் பணிபுரியுமாறு பலிபீடத்தை அணுகும்போதும், ஆரோனும் அவன் புதல்வர்களும் இவற்றை அணிந்திருப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் குற்றத்துக்குள்ளாகிச் சாவார்கள். அவனுக்கும், அவனுக்குப்பின் அவன் வழிமரபினர்க்கும், மாறாத கட்டளை இது.
❮
❯