யாத்திராகமம் 26 : 1 (ECTA)
சந்திப்புக் கூடாரம்
(விப 36:8-38) மேலும், திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய். அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
யாத்திராகமம் 26 : 2 (ECTA)
மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம். ஒரு மூடு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்குமாம்.
யாத்திராகமம் 26 : 3 (ECTA)
இவற்றுள் ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும் ஏனைய ஐந்து மூடு திரைகளை ஒன்றாகவும் இணைத்து விட வேண்டும்.
யாத்திராகமம் 26 : 4 (ECTA)
பின்னர், முதல் தொகுப்பின் கடை ஓரத்தில் நீல வண்ணத்துணி வளையங்களை அமைப்பாய், அவ்வாறே அடுத்த தொகுப்பின் கடை ஓரத்திலும் வளையங்களை அமைப்பாய்.
யாத்திராகமம் 26 : 5 (ECTA)
முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஐம்பது. வளையங்கள் எதிரெதிரே இருக்க வேண்டும்.
யாத்திராகமம் 26 : 6 (ECTA)
பொன்னால் கொக்கிகள் ஐம்பது செய்து, அக்கொக்கிகளால் திரைத்தொகுப்புகளை ஒன்றாய் இணைத்துவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமையும்.
யாத்திராகமம் 26 : 7 (ECTA)
திருஉறைவிடத்தின் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு உரோமத்தால் மூடுதிரைகள் செய்வாய். பதினொரு மூடுதிரைகள் செய்யப்பட வேண்டும்.
யாத்திராகமம் 26 : 8 (ECTA)
ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழம். அகலம் நான்கு முழம். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றே.
யாத்திராகமம் 26 : 9 (ECTA)
இவற்றுள் ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும் ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்துவிடு. ஆறு மூடுதிரைகளின் தொகுப்பு கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடிக்கப்பட்டுக் கிடக்கட்டும்.
யாத்திராகமம் 26 : 10 (ECTA)
முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் ஐம்பது வளையங்களை அமைப்பாய். அவ்வாறே ஐம்பது வளையங்களை அடுத்த திரைத்தொகுப்பின் ஓரத்திலும் அமைப்பாய்.
யாத்திராகமம் 26 : 11 (ECTA)
வெண்கலத்தால் ஐம்பது கொக்கிகள் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டிவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து கூடார மூடுதிரை அமையும்.
யாத்திராகமம் 26 : 12 (ECTA)
கூடார மூடுதிரையில் எஞ்சியிருக்கும் பாகம் தொங்கிக்கொண்டிருக்கும். திருஉறைவிடத்தின் பின்புறத்தே பாதித் திரை தொங்கும்.
யாத்திராகமம் 26 : 13 (ECTA)
கூடார மூடுதிரையின் பக்கங்களில் மீந்திருக்கும்பகுதி, திருஉறைவிடத்தின் ஒருபுறம் ஒரு முழமும், மறுபுறம் ஒரு முழமும் தொங்கி மறைக்கும்.
யாத்திராகமம் 26 : 14 (ECTA)
செந்நிறப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும் கூடாரத்திற்கு ஒரு மேல்விரிப்பு செய்வாய்.
யாத்திராகமம் 26 : 15 (ECTA)
திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்களைச் சித்திம்மரத்தால் செய்வாய்.
யாத்திராகமம் 26 : 16 (ECTA)
ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழம். சட்டம் ஒவ்வொன்றின் அகலம் ஒன்றரை முழம்.
யாத்திராகமம் 26 : 17 (ECTA)
சட்டம் ஒன்றுக்கு இரு கொளுத்துகள் வீதம் சட்டத்தோடு சட்டத்தை இணைத்து விடு. அவ்வாறே திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களும் இணைக்கப்பட வேண்டும்.
யாத்திராகமம் 26 : 18 (ECTA)
திருஉறைவிடத்திற்காகச் சட்டங்கள் செய்யுங்கள்; தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி நிற்க வேண்டியவை இருபது சட்டங்கள்.
யாத்திராகமம் 26 : 19 (ECTA)
ஒரு சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருத்துகள், அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருள்கள் என்று இருபது சட்டங்களுக்குக் கீழே நாற்பது வெள்ளிப் பொருத்துகள் வேண்டும்.
யாத்திராகமம் 26 : 20 (ECTA)
திரு உறைவிடத்தின் இரண்டாவது பக்கமாகிய வடதிசையில் இருபது சட்டங்கள் நிற்கும்.
யாத்திராகமம் 26 : 21 (ECTA)
ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு, மறுசட்டத்துக்குக் கீழே இரண்டு என்று அவற்றில் நாற்பது வெள்ளிபாதப் பொருத்துகள் இடம் பெறும்.
யாத்திராகமம் 26 : 22 (ECTA)
திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்குப்பக்கத்திற்கான ஆறு சட்டங்கள் செய்வாய்.
யாத்திராகமம் 26 : 23 (ECTA)
அதனுடன் திருஉறைவிடத்தின் மூலைகளுக்காக இரண்டு சட்டங்களும் செய்வாய்.
யாத்திராகமம் 26 : 24 (ECTA)
அவை ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்படும். இவ்வாறே இரண்டு மூலைகளும் அமையும்.
யாத்திராகமம் 26 : 25 (ECTA)
ஒரு சட்டத்தின் அடியில் இரு பாதப்பொருத்துகள், மறுசட்டத்தினடியில் இரு பாதப்பொருத்துகள் என்று எட்டுச் சட்டங்களுக்குப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகள் வேண்டும்.
யாத்திராகமம் 26 : 26 (ECTA)
சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்கள் செய்வாய். திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும்,
யாத்திராகமம் 26 : 27 (ECTA)
திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே ஐந்தும், மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே ஐந்துமாகக் குறுக்குச் சட்டங்கள் பொருத்துவாய்.
யாத்திராகமம் 26 : 28 (ECTA)
நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், பலகைகளுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செலுத்தப்படவேண்டும்.
யாத்திராகமம் 26 : 29 (ECTA)
சட்டங்களைப் பொன்னால் பொதிவாய்; அவற்றில் குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்காக வளையங்களைப் பொன்னால் செய்; குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிவாய்.
யாத்திராகமம் 26 : 30 (ECTA)
இவ்வாறு, மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட திட்டப்படி திருஉறைவிடத்தை நிறுவுவாய்.
யாத்திராகமம் 26 : 31 (ECTA)
மேலும், ஒரு திருத்தூயகத் தொங்குதிரை செய்யப்பட வேண்டும். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
யாத்திராகமம் 26 : 32 (ECTA)
அதனை நான்கு சித்திம் மரத்தூண்களில் தொங்கவிடுவாய். இவை பொன் வளைவாணிகள் கொண்டவை; பசும்பொன்னால் மூடப்பட்டு நான்கு வெள்ளி பாதப்பொருள்களில் நிற்பவை.
யாத்திராகமம் 26 : 33 (ECTA)
கொக்கிகளில் அந்தத் திரையைத் தொங்கவிடு; அதற்கு உட்புறமாக உடன்படிக்கைப் பேழையை வைப்பாய். இவ்வாறு தொங்குதிரை தூயகத்தையும் திருத்தூயகத்தையும் பிரிக்கும். * எபி 6:19; 9:3-5..
யாத்திராகமம் 26 : 34 (ECTA)
திருத்தூயகத்தில், உடன்படிக்கைப் பேழையின்மேல் இரக்கத்தின் இருக்கையை அமைப்பாய்.
யாத்திராகமம் 26 : 35 (ECTA)
தொங்குதிரைக்கு முன்புறம் ஒரு மேசையையும், மேசைக்கு எதிரே, திருஉறைவிடத்தின் தென்புறம், விளக்குத்தண்டையும் வைப்பாய்; மேசையையோ வடபுறம் வைப்பாய்.
யாத்திராகமம் 26 : 36 (ECTA)
கூடாரத்தின் நுழைவிடத்திற்காக ஒரு தொங்குதிரை செய்வாய். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், பின்னல்வேலை கொண்டதாகச் செய்யப்பட வேண்டும்.
யாத்திராகமம் 26 : 37 (ECTA)
இத்திரையைத் தொங்கவிடுவதற்காக, ஐந்து சித்திம் மரத்தூண்களைச் செய்துவை. இவை பசும்பொன்னால் மூடப்பட்டனவாயும், பசும்பொன் வளைவாணிகள் கொண்டனவாயும், ஐந்து வெண்கலப் பாதப்பொருத்துகளில் நிற்பனவாயும் அமையட்டும்.
❮
❯