யாத்திராகமம் 19 : 1 (ECTA)
சீனாய் மலையருகில் இஸ்ரயேலர் எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தைச் சென்றடைந்தனர்.
யாத்திராகமம் 19 : 2 (ECTA)
இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர்.
யாத்திராகமம் 19 : 3 (ECTA)
ஆனால், மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார். அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, “யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்லவேண்டியது — இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது — இதுவே:
யாத்திராகமம் 19 : 4 (ECTA)
“நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
யாத்திராகமம் 19 : 5 (ECTA)
நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். [* இச 4:20; 7:6; 14:2; 26:18; தீத் 2: 14 ; 1பேது 2: 9. ]
யாத்திராகமம் 19 : 6 (ECTA)
மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை” என்றார். [* 1பேது 2: 9 ; திவெ 1:6; 5: 10. ]
யாத்திராகமம் 19 : 7 (ECTA)
மோசே வந்து, மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
யாத்திராகமம் 19 : 8 (ECTA)
மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்” என்று மறுமொழி கூறினர். மக்களின் பதிலை மோசே ஆண்டவரிடம் சமர்ப்பித்தார்.
யாத்திராகமம் 19 : 9 (ECTA)
ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார் மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார்.
யாத்திராகமம் 19 : 10 (ECTA)
ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து. அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும்.
யாத்திராகமம் 19 : 11 (ECTA)
இவ்வாறு, மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கிவருவார்.
யாத்திராகமம் 19 : 12 (ECTA)
மலையைச் சுற்றிலும் மக்களுக்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு. உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி. [* எபி 12:18- 20 ]
யாத்திராகமம் 19 : 13 (ECTA)
அத்தகையவரை யாரும் கையால் தொடாமல், கல்லால் எறிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும். அப்படிப்பட்ட கால் நடையோ மனிதரோ சாகவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள்* மலைமேல் ஏறிவரட்டும்” என்றார். [* எபி 12:18- 20 ; ‘அவர்கள்’ என்பது எபிரேய மூலம்.. ]
யாத்திராகமம் 19 : 14 (ECTA)
மோசே மலையை விட்டிறங்கி மக்களிடம் சென்றார். மக்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்களும் தம் துணிகளைத் துவைத்துக் கொண்டார்கள்.
யாத்திராகமம் 19 : 15 (ECTA)
அவர் மக்களை நோக்கி, “மூன்றாம் நாளுக்காகத் தயாராக இருங்கள். மனைவியோடு கூடாதிருங்கள்” என்றார்.
யாத்திராகமம் 19 : 16 (ECTA)
மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். [* திவெ 4: 5 ; இச 4:11- 12. ]
யாத்திராகமம் 19 : 17 (ECTA)
கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். [* இச 4:11- 12 ]
யாத்திராகமம் 19 : 18 (ECTA)
சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில், ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. [* இச 4:11- 12 ]
யாத்திராகமம் 19 : 19 (ECTA)
எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.
யாத்திராகமம் 19 : 20 (ECTA)
ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார்.
யாத்திராகமம் 19 : 21 (ECTA)
ஆண்டவர் மோசேயை நோக்கி, “இறங்கிச் செல். மக்கள் ஆண்டவரைப் பார்க்க விரும்பி எல்லை மீறி வராதபடியும், அவ்வாறு வந்து பலர் சாகாதபடியும் அவர்களை எச்சரிக்கை செய்.
யாத்திராகமம் 19 : 22 (ECTA)
அவ்வாறே ஆண்டவரை அணுகிச் செல்லும் குருக்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில், ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்று சொன்னார்.
யாத்திராகமம் 19 : 23 (ECTA)
மோசே ஆண்டவரிடம், “சீனாய் மலைமேல் மக்கள் ஏறிவரமாட்டார்கள். ஏனெனில், ‘மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து’ என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்” என்றார்.
யாத்திராகமம் 19 : 24 (ECTA)
ஆண்டவர் அவரை நோக்கி, “நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா. குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக எல்லை மீற வேண்டாம்; இல்லையெனில், ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்” என்றார்.
யாத்திராகமம் 19 : 25 (ECTA)
மோசே கீழே இறங்கி, மக்களிடம் இதுபற்றிக் கூறினார்.
❮
❯