யாத்திராகமம் 14 : 1 (ECTA)
செங்கடலைக் கடத்தல் ஆண்டவர் மோசேயிடம்,
யாத்திராகமம் 14 : 2 (ECTA)
“இஸ்ரயேல் மக்கள் திரும்பிச் சென்று மிக்தோலுக்கும் பாகால் செபோனின் அருகிலுள்ள கடலுக்கும் இடையே அமைந்த பிககிரோத்துக்கு எதிரே கடல் அருகில் பாளையம் இறங்கும்படி அவர்களிடம் சொல்.
யாத்திராகமம் 14 : 3 (ECTA)
பார்வோன் இஸ்ரயேல் மக்களைக் குறித்து, பாலைநிலம் குறுக்கிட்டதால் அவர்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பார்கள் என்று கருதுவான்.
யாத்திராகமம் 14 : 4 (ECTA)
பார்வோனின் மனத்தை நான் இறுகிப்போகச் செய்வேன்; அவனும் அவர்களைத் துரத்திக்கொண்டே வருவான். அப்போது பார்வோனையும் அவன் படைகளையும் வென்று நான் மாட்சியுறுவேன். நானே ஆண்டவர் என எகிப்தியரும் உணர்ந்து கொள்வர்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.
யாத்திராகமம் 14 : 5 (ECTA)
மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது. “நாம் இப்படிச் செய்து விட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?” என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.
யாத்திராகமம் 14 : 6 (ECTA)
எனவே, அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
யாத்திராகமம் 14 : 7 (ECTA)
தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்.
யாத்திராகமம் 14 : 8 (ECTA)
ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்; அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.
யாத்திராகமம் 14 : 9 (ECTA)
பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கியிருந்த அவர்களை நெருங்கினர்.
யாத்திராகமம் 14 : 10 (ECTA)
பார்வோன் நெருங்கி வந்து கொண்டிருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்.
யாத்திராகமம் 14 : 11 (ECTA)
அவர்கள் மோசேயை நோக்கி, “எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே!
யாத்திராகமம் 14 : 12 (ECTA)
‘எங்களை விட்டுவிடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்’ என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில், பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்’ என்றனர்.
யாத்திராகமம் 14 : 13 (ECTA)
மோசே மக்களை நோக்கி, “அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை.
யாத்திராகமம் 14 : 14 (ECTA)
ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்” என்றார்.
யாத்திராகமம் 14 : 15 (ECTA)
ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.
யாத்திராகமம் 14 : 16 (ECTA)
கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.
யாத்திராகமம் 14 : 17 (ECTA)
நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.
யாத்திராகமம் 14 : 18 (ECTA)
பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.
யாத்திராகமம் 14 : 19 (ECTA)
இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது.
யாத்திராகமம் 14 : 20 (ECTA)
அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.
யாத்திராகமம் 14 : 21 (ECTA)
மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.
யாத்திராகமம் 14 : 22 (ECTA)
வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். * கொரி 10:1-2; எபி 11:29..
யாத்திராகமம் 14 : 23 (ECTA)
எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.
யாத்திராகமம் 14 : 24 (ECTA)
பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.
யாத்திராகமம் 14 : 25 (ECTA)
அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், “இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.
யாத்திராகமம் 14 : 26 (ECTA)
ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார்.
யாத்திராகமம் 14 : 27 (ECTA)
மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.
யாத்திராகமம் 14 : 28 (ECTA)
திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.
யாத்திராகமம் 14 : 29 (ECTA)
ஆனால், இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.
யாத்திராகமம் 14 : 30 (ECTA)
இவ்வாறு, ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.
யாத்திராகமம் 14 : 31 (ECTA)
எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும், அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31