எஸ்தர் 3 : 1 (ECTA)
யூதரை அழிக்க ஆமானின் திட்டம் இந்நிகழ்ச்சிக்குப்பின் மன்னர் அகஸ்வேர் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி, அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார்.
எஸ்தர் 3 : 2 (ECTA)
மன்னரின் ஆணைப்படி, அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர். ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை.
எஸ்தர் 3 : 3 (ECTA)
அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், '‘நீ ஏன் மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை?'’ என வினவினர்.
எஸ்தர் 3 : 4 (ECTA)
ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும் மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.
எஸ்தர் 3 : 5 (ECTA)
மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.
எஸ்தர் 3 : 6 (ECTA)
மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை. அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க ஆமான் வழிதேடினான்.
எஸ்தர் 3 : 7 (ECTA)
அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைக் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் ‘பூர்’ என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டு விழுந்தது.
எஸ்தர் 3 : 8 (ECTA)
ஆமான் அகஸ்வேரிடம், ‘‘உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் நியமங்களின் படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.
எஸ்தர் 3 : 9 (ECTA)
இது மன்னருக்கு நலமெனப்பட்டால் அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நானூறு ‘டன்’* வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன்'’ என்று கூறினான். * ‘பதினாயிரம் தாலந்து’ என்பது எபிரேய பாடம்..
எஸ்தர் 3 : 10 (ECTA)
அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மாதத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.
எஸ்தர் 3 : 11 (ECTA)
மன்னர் ஆமானிடம், “வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்குச் செய்’’ என்றார்.
எஸ்தர் 3 : 12 (ECTA)
உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்தும் அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.
எஸ்தர் 3 : 13 (ECTA)
அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பட்டன.
எஸ்தர் 3 : 14 (ECTA)
இம்மடலின் நகல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.
எஸ்தர் 3 : 15 (ECTA)
விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற, சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர். சூசான் நகரே கலங்கிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15