எபேசியர் 4 : 1 (ECTA)
3.கிறிஸ்தவப் புதுவாழ்வுகிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை ஆதலால், ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.
எபேசியர் 4 : 2 (ECTA)
முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, [* கொலோ 3:12, 13 ]
எபேசியர் 4 : 3 (ECTA)
அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.
எபேசியர் 4 : 4 (ECTA)
நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே.
எபேசியர் 4 : 5 (ECTA)
அவ்வாறே, ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே.
எபேசியர் 4 : 6 (ECTA)
எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
எபேசியர் 4 : 7 (ECTA)
கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது.
எபேசியர் 4 : 8 (ECTA)
ஆகையால்தான், ‘அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்’ என்று மறைநூல் கூறுகிறது. [* திபா 68: 18 ]
எபேசியர் 4 : 9 (ECTA)
“ஏறிச் சென்றார்” என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா?
எபேசியர் 4 : 10 (ECTA)
கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.
எபேசியர் 4 : 11 (ECTA)
அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
எபேசியர் 4 : 12 (ECTA)
திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.
எபேசியர் 4 : 13 (ECTA)
அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.
எபேசியர் 4 : 14 (ECTA)
ஆகவே, இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழி நடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச்செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக்கூடாது.
எபேசியர் 4 : 15 (ECTA)
மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.
எபேசியர் 4 : 16 (ECTA)
அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது. [* கொலோ 2: 19 ]
எபேசியர் 4 : 17 (ECTA)
பழைய வாழ்வும் புதிய வாழ்வும் ஆதலால், நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே; பிற இனத்தவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள்.
எபேசியர் 4 : 18 (ECTA)
அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது. அவர்களது பிடிவாத உள்ளத்தின் விளைவாய் ஏற்பட்ட அறியாமையின் காரணத்தால் அவர்கள் கடவுள் தரும் வாழ்வுக்குப் புறம்பானவர்களாக இருக்கிறார்கள்.
எபேசியர் 4 : 19 (ECTA)
அவர்கள் உள்ளம் மரத்துப்போய்ப் பேராசை கொண்டு, ஒழுக்கக் கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் தங்களைக் காமவெறிக்கும் உட்படுத்தினார்கள்.
எபேசியர் 4 : 20 (ECTA)
ஆனால், நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல.
எபேசியர் 4 : 21 (ECTA)
உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது.
எபேசியர் 4 : 22 (ECTA)
எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். [* கொலோ 3: 9 ]
எபேசியர் 4 : 23 (ECTA)
உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்.
எபேசியர் 4 : 24 (ECTA)
கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். [* கொலோ 3: 10 ]
எபேசியர் 4 : 25 (ECTA)
புதிய வாழ்வுக்கான விதிமுறைகள் ஆகவே, பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில், நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம். [* செக் 8: 16 ]
எபேசியர் 4 : 26 (ECTA)
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். [* திபா 4: 4 ]
எபேசியர் 4 : 27 (ECTA)
அலகைக்கு இடம் கொடாதீர்கள்.
எபேசியர் 4 : 28 (ECTA)
திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும். மாறாக, தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் பொருள் இருக்கும் வகையில், தாங்களே தங்கள் “கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.
எபேசியர் 4 : 29 (ECTA)
கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.
எபேசியர் 4 : 30 (ECTA)
கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.
எபேசியர் 4 : 31 (ECTA)
மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.
எபேசியர் 4 : 32 (ECTA)
ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். * கொலோ 3:13..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32