எபேசியர் 3 : 1 (ECTA)
பிற இனத்தாருக்கு பவுல் ஆற்றிய திருப்பணி இதன் காரணமாக, பிற இனத்தவராகிய உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவின் பொருட்டுப் பவுலாகிய நான் கைதியாக இருக்கிறேன்.
எபேசியர் 3 : 2 (ECTA)
உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
எபேசியர் 3 : 3 (ECTA)
அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
எபேசியர் 3 : 4 (ECTA)
அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்து கொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். [* கொலோ 1:26, 27 ]
எபேசியர் 3 : 5 (ECTA)
அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. [* கொலோ 1:26, 27 ]
எபேசியர் 3 : 6 (ECTA)
நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். [* கொலோ 1:26, 27 ]
எபேசியர் 3 : 7 (ECTA)
கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன். * 2 கொரி 3:6; 1 தெச 2:4..
எபேசியர் 3 : 8 (ECTA)
(8-9) கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப்பற்றிய நற்செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது.
எபேசியர் 3 : 10 (ECTA)
அதன்மூலம் பலவகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது.
எபேசியர் 3 : 11 (ECTA)
இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார்.
எபேசியர் 3 : 12 (ECTA)
கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.
எபேசியர் 3 : 13 (ECTA)
ஆகவே, உங்கள் பொருட்டு நான் படும் துன்பங்களைக் கண்டு நீங்கள் மனந்தளர்ந்து போகாதபடி உங்களை வேண்டுகிறேன். அத்துன்பங்களே உங்களுக்குப் பெருமையாக அமையும்.
எபேசியர் 3 : 14 (ECTA)
கிறிஸ்துவின் அன்பு (14-15) இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்.
எபேசியர் 3 : 16 (ECTA)
அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக!
எபேசியர் 3 : 17 (ECTA)
நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!
எபேசியர் 3 : 18 (ECTA)
(18-19) இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!
எபேசியர் 3 : 20 (ECTA)
(20-21) நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21