உபாகமம் 34 : 1 (ECTA)
மோசேயின் இறப்பு அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார்.
உபாகமம் 34 : 2 (ECTA)
மேலும், நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்;
உபாகமம் 34 : 3 (ECTA)
மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார்.
உபாகமம் 34 : 4 (ECTA)
அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால், நீ அங்கு போகமாட்டாய்’. [* தொநூ 12:7; 26:3; 28: 13 ]
உபாகமம் 34 : 5 (ECTA)
எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.
உபாகமம் 34 : 6 (ECTA)
மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால், இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.
உபாகமம் 34 : 7 (ECTA)
மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை.
உபாகமம் 34 : 8 (ECTA)
மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.
உபாகமம் 34 : 9 (ECTA)
நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.
உபாகமம் 34 : 10 (ECTA)
ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை. * விப 33:11..
உபாகமம் 34 : 11 (ECTA)
ஏனெனில், எகிப்து நாட்டில், பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார்.
உபாகமம் 34 : 12 (ECTA)
இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12