உபாகமம் 32 : 1 (ECTA)
வானங்களே! நான் பேசுவேன்; செவிகொடுப்பீர்: பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள்.
உபாகமம் 32 : 2 (ECTA)
பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக!
உபாகமம் 32 : 3 (ECTA)
நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்; நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன்.
உபாகமம் 32 : 4 (ECTA)
அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்!
உபாகமம் 32 : 5 (ECTA)
அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்; அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்!
உபாகமம் 32 : 6 (ECTA)
ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா?
உபாகமம் 32 : 7 (ECTA)
பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார்! உன் தந்தையிடம் கேள்; அவர் உனக்கு அறிவிப்பார்; பெரியோரிடம் கேள்; அவர்கள் உனக்குச்சொல்வர்.
உபாகமம் 32 : 8 (ECTA)
உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார். [* திப 17: 26 ]
உபாகமம் 32 : 9 (ECTA)
ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே!
உபாகமம் 32 : 10 (ECTA)
பாழ்வெளியில் அவர் அவனைக் கண்டார்; வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்; அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்; கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.
உபாகமம் 32 : 11 (ECTA)
கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின் மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்,
உபாகமம் 32 : 12 (ECTA)
ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.
உபாகமம் 32 : 13 (ECTA)
பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்; வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்; கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்; கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான்.
உபாகமம் 32 : 14 (ECTA)
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்.
உபாகமம் 32 : 15 (ECTA)
ஆனால், கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது; எசுரூன்* கொழுத்துப் பருத்து முரடனானான்; தனைப் படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்; தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான். * இஸ்ரயேலின் மறுபெயர்; எபிரேயத்தில், ‘நேரியவன்’ என்பது பொருள்..
உபாகமம் 32 : 16 (ECTA)
வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்; அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர்.
உபாகமம் 32 : 17 (ECTA)
இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்; அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர். [* 1 கொரி 10: 20 ]
உபாகமம் 32 : 18 (ECTA)
‘உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்’. [* திப 17: 26 ]
உபாகமம் 32 : 19 (ECTA)
தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார்.
உபாகமம் 32 : 20 (ECTA)
அவர் உரைத்தார்; எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.
உபாகமம் 32 : 21 (ECTA)
இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். [* 1 கொரி 10:22; உரோ 10: 19 ]
உபாகமம் 32 : 22 (ECTA)
எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்; கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்; பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்; மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும்.
உபாகமம் 32 : 23 (ECTA)
தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்; என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன்.
உபாகமம் 32 : 24 (ECTA)
பசியினால் அவர்கள் வாடுவர்; கொள்ளை நோயால் மாய்வர்; கொடிய வாதைகளால் மடிவர்; விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்; புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர்.
உபாகமம் 32 : 25 (ECTA)
வெளியிலே வாள்; உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர்.
உபாகமம் 32 : 26 (ECTA)
நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
உபாகமம் 32 : 27 (ECTA)
ஆயினும், ‘எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!’ என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன்.
உபாகமம் 32 : 28 (ECTA)
அவர்கள் புத்தி கெட்ட மக்கள்; அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.
உபாகமம் 32 : 29 (ECTA)
அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்!
உபாகமம் 32 : 30 (ECTA)
ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ?
உபாகமம் 32 : 31 (ECTA)
அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.
உபாகமம் 32 : 32 (ECTA)
அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்; கொமோராவின் வயல் வெளியிலிருந்து வருவதாகும்; அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்; அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை.
உபாகமம் 32 : 33 (ECTA)
அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது; விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது.
உபாகமம் 32 : 34 (ECTA)
இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவூலங்களில் முத்திரையிடப் பட்டுள்ளது அன்றோ?
உபாகமம் 32 : 35 (ECTA)
பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன; உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்; அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன. [* உரோ 12:19; எபி 10: 30 ]
உபாகமம் 32 : 36 (ECTA)
அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும் போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார். [* திபா 135: 14 ]
உபாகமம் 32 : 37 (ECTA)
அப்பொழுது அவர் உரைப்பார்: அவர்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?
உபாகமம் 32 : 38 (ECTA)
அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்கள் உனது புகலிடம் ஆகட்டுமே!
உபாகமம் 32 : 39 (ECTA)
நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே; குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார்.
உபாகமம் 32 : 40 (ECTA)
ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன்.
உபாகமம் 32 : 41 (ECTA)
மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன்.
உபாகமம் 32 : 42 (ECTA)
கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்; என் வாள் சதையை உண்ணச் செய்வேன்.
உபாகமம் 32 : 43 (ECTA)
வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்; அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்; அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார். [* உரோ 15:10; திவெ 19: 2 ]
உபாகமம் 32 : 44 (ECTA)
மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள்.
உபாகமம் 32 : 45 (ECTA)
மோசேயின் இறுதி மொழிகள் இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது;
உபாகமம் 32 : 46 (ECTA)
உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
உபாகமம் 32 : 47 (ECTA)
இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
உபாகமம் 32 : 48 (ECTA)
அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது: [* எண் 27:12-14; இச 2:23- 27 ]
உபாகமம் 32 : 49 (ECTA)
மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே. [* எண் 27:12-14; இச 2:23- 27 ]
உபாகமம் 32 : 50 (ECTA)
உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய். [* எண் 27:12-14; இச 2:23- 27 ]
உபாகமம் 32 : 51 (ECTA)
ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை. [* எண் 27:12-14; இச 2:23- 27 ]
உபாகமம் 32 : 52 (ECTA)
எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய். [* எண் 27:12-14; இச 2:23- 27 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52