உபாகமம் 26 : 1 (ECTA)
அறுவடைக் காணிக்கைகள் உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது,
உபாகமம் 26 : 2 (ECTA)
அந்த நாட்டின் நிலத்து முதற்பலன் அனைத்தையும் எடுத்துக்கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயர் விளங்குமாறு தேர்ந்து கொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோ. [* விப 23: 19 ]
உபாகமம் 26 : 3 (ECTA)
அன்றைய நாளில் அங்கு பணியில் இருக்கும் குருவிடம் சென்று அவரை நோக்கி, ‘எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் வந்து சேர்ந்துள்ளேன் என எம் கடவுளாகிய ஆண்டவர்முன் இன்று அறிக்கையிடுகிறேன்’ என்று சொல்.
உபாகமம் 26 : 4 (ECTA)
அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார்.
உபாகமம் 26 : 5 (ECTA)
நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: ‘நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அந்நியராய் இருந்தார். ஆனால், அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.
உபாகமம் 26 : 6 (ECTA)
எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர்.
உபாகமம் 26 : 7 (ECTA)
அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார்.
உபாகமம் 26 : 8 (ECTA)
தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
உபாகமம் 26 : 9 (ECTA)
அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.
உபாகமம் 26 : 10 (ECTA)
எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்’ என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.
உபாகமம் 26 : 11 (ECTA)
பின்னர், நீயும் லேவியரும், உன்னோடு உள்ள அந்நியரும், கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த அனைத்து நன்மைகளை முன்னிட்டு அக்களியுங்கள்.
உபாகமம் 26 : 12 (ECTA)
பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டாகிய மூன்றாம் ஆண்டில், அவ்வாண்டின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை, லேவியருக்கும், அந்நியருக்கும், அநாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர். [* இச 14:28- 29 ]
உபாகமம் 26 : 13 (ECTA)
அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அந்நியருக்கும், அநாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை.
உபாகமம் 26 : 14 (ECTA)
எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை; தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை; இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன்.
உபாகமம் 26 : 15 (ECTA)
நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக’.
உபாகமம் 26 : 16 (ECTA)
ஆண்டவரின் சொந்த மக்கள் இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.
உபாகமம் 26 : 17 (ECTA)
ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும் உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவி கொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.
உபாகமம் 26 : 18 (ECTA)
நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும், * விப 19:5; இச 4:20; 7:6; 14:2; தீத் 2:14; 1 பேது 2:9..
உபாகமம் 26 : 19 (ECTA)
அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19