உபாகமம் 22 : 1 (ECTA)
உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ. [* விப 23:4- 5 ]
உபாகமம் 22 : 2 (ECTA)
உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன் அதைத் தேடி வரும்பொழுது அதை அவனிடம் திரும்பக் கொடு. [* விப 23:4- 5 ]
உபாகமம் 22 : 3 (ECTA)
உனக்கு அடுத்திருப்பவனிடமிருந்து காணாமல் போன கழுதைக்கோ, ஆடைக்கோ வேறு எந்தப் பொருளுக்கோ அவ்விதமே செய். நீ அவற்றைக் கண்டும் காணாதவன் போல் இருந்துவிடாதே. [* விப 23:4- 5 ]
உபாகமம் 22 : 4 (ECTA)
உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய். [* விப 23:4- 5 ]
உபாகமம் 22 : 5 (ECTA)
ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணியலாகாது. பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது. ஏனெனில், அப்படிச் செய்பவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்கள்.
உபாகமம் 22 : 6 (ECTA)
வழியோரமாய், மரத்திலோ தரையிலோ, குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும், அந்தக் குஞ்சுகள் அல்லது முட்டைகள்மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப் பிடிக்காதே.
உபாகமம் 22 : 7 (ECTA)
தாயைப் போகவிடு. குஞ்சுகளை உனக்கென எடுத்துக்கொள். அப்போது உனக்கு நலமாகும். நீ நெடுநாள் வாழ்வாய்.
உபாகமம் 22 : 8 (ECTA)
நீ புது வீட்டைக் கட்டும்போது உன் வீட்டு மாடியைச் சுற்றிக் கைப்பிடிச் சுவரைக் கட்டு. இல்லையெனில், ஒருவன் மாடியிலிருந்து விழுந்தால், விழுந்தவனின் இரத்தப்பழி உன் வீட்டின்மீது வரும்.
உபாகமம் 22 : 9 (ECTA)
திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே. அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய். [* லேவி 19: 19 ]
உபாகமம் 22 : 10 (ECTA)
மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது. [* லேவி 19: 19 ]
உபாகமம் 22 : 11 (ECTA)
ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே. [* லேவி 19: 19 ]
உபாகமம் 22 : 12 (ECTA)
உன்னை நீ மூடிக்கொள்ளும் மேற்போர்வையின் நான்கு மூலைகளிலும் தொங்கல்களை அமைத்துக்கொள். [* எண் 15:37- 41 ]
உபாகமம் 22 : 13 (ECTA)
பாலுறவுத் தூய்மை பற்றிய சட்டங்கள் ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளை வெறுத்து,
உபாகமம் 22 : 14 (ECTA)
அவள் மீது அவதூறுசொல்லி, அவளது பெயரைக் கெடுத்து, ‘நான் இந்தப்பெண்ணை மணம் முடித்தேன்; ஆனால், அவளோடு உறவுகொண்டபோது, அவள் கன்னியல்ல என்று கண்டுகொண்டேன்’ என்று கூறினால்,
உபாகமம் 22 : 15 (ECTA)
அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, அவளை நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கூட்டி வருவார்கள்.
உபாகமம் 22 : 16 (ECTA)
அப்போது, அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்; அவனோ அவளை வெறுக்கிறான்.
உபாகமம் 22 : 17 (ECTA)
அத்தோடு, ‘உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை’ என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகிறான்; ‘இதோ என் மகளின் கன்னிமைக்கான சான்று’ என்று சொல்லுவான். பின்பு அவர்கள் நகர்த் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள்.
உபாகமம் 22 : 18 (ECTA)
அப்போது அந்நகர்த் தலைவர்கள் அம்மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள்.
உபாகமம் 22 : 19 (ECTA)
பின்னர், அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து, அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறியுள்ளான். அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள். அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது.
உபாகமம் 22 : 20 (ECTA)
ஆனால், அப்பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்மையானால்,
உபாகமம் 22 : 21 (ECTA)
அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று.
உபாகமம் 22 : 22 (ECTA)
ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு, இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.
உபாகமம் 22 : 23 (ECTA)
மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால்,
உபாகமம் 22 : 24 (ECTA)
அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்; அவர்களும் சாவர். அவள் நகரில் இருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாததாலும், அவன் மற்றொருவனின் மனைவியைக் கெடுத்ததாலும் அவர்கள் சாவர். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று.
உபாகமம் 22 : 25 (ECTA)
ஆனால், மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை வயல்வெளியில் ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாகப் பிடித்து அவளோடு உறவுகொண்டால், அவளோடு உறவுகொண்ட அம்மனிதன் மட்டுமே சாகட்டும்.
உபாகமம் 22 : 26 (ECTA)
அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்ய வேண்டாம். சாவுக்கு ஏதுவான பாவம் எதுவும் அவள் செய்யவில்லை. தனக்கு அடுத்திருப்பவனை ஒருவன் தாக்கி அவனைக் கொல்வது போலத்தான் இதுவும்.
உபாகமம் 22 : 27 (ECTA)
ஏனெனில், அவன் அவளை வயல்வெளியில் மேற்கொண்டான். மணமாகியும் கன்னிமை கழியாத அவள் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்ற எவரும் இல்லை.
உபாகமம் 22 : 28 (ECTA)
மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தப்படுத்தி, அவளோடு உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், [* விப 22:16- 17 ]
உபாகமம் 22 : 29 (ECTA)
அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஐம்பது வெள்ளிக்காசுகள் தரவேண்டும். அவன் அவளைக் கெடுத்துவிட்டதால் அவளை மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மணமுறிவு செய்யமுடியாது. [* விப 22:16- 17 ]
உபாகமம் 22 : 30 (ECTA)
எவனும் தன் தந்தையின் மனைவியோடு கூடலாகாது; தன் தந்தையின் படுக்கையை இழிபுபடுத்தலாகாது. * லேவி 18:8; 20:11; இச 27:20..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30