உபாகமம் 21 : 1 (ECTA)
துப்புத் துலங்காத கொலைகள் குறித்த விதிமுறைகள் நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால்,
உபாகமம் 21 : 2 (ECTA)
உன் தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்களாக.
உபாகமம் 21 : 3 (ECTA)
கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர்.
உபாகமம் 21 : 4 (ECTA)
பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர்.
உபாகமம் 21 : 5 (ECTA)
அப்பொழுது, தனக்கு ஊழியம் செய்யவும், ஆண்டவர் பெயரால் ஆசி வழங்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியின் புதல்வர்களாகிய குருக்கள் முன்வர வேண்டும். ஏனெனில், அவர்களது வாக்கின்படியே எல்லா வழக்குகளும் எல்லாத் தடியடிகளும் தீர்க்கப்படவேண்டும்.
உபாகமம் 21 : 6 (ECTA)
அப்போது கொலையுண்டவனுக்கு மிக அருகில் உள்ள நகர்த் தலைவர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கில் கழுத்து முறிக்கப்பட்ட கிடாரியின் மீது அவர்கள் கைகளைக் கழுவி,
உபாகமம் 21 : 7 (ECTA)
உரத்துச் சொல்ல வேண்டியது: ‘எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தியதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.
உபாகமம் 21 : 8 (ECTA)
ஆண்டவரே, நீர் மீட்ட உம் மக்களாகிய இஸ்ரயேலை மன்னித்தருளும். குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தினபழியை உம்மக்கள் இஸ்ரயேல்மேல் சுமத்தாதேயும். இரத்தப் பழியிலிருந்து அவர்களை விடுவித்தருளும்.’
உபாகமம் 21 : 9 (ECTA)
இவ்வாறு, குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தின பழியை உன்னிடமிருந்து நீக்கி விடுவாய். ஏனெனில், ஆண்டவரின் முன்னிலையில் நேரியதைச் செய்துள்ளாய்.
உபாகமம் 21 : 10 (ECTA)
போர்ப் பெண்கைதிகளைக் குறித்த விதிமுறைகள் உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய்.
உபாகமம் 21 : 11 (ECTA)
அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,
உபாகமம் 21 : 12 (ECTA)
அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.
உபாகமம் 21 : 13 (ECTA)
அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்; அவள் உனக்கு மனைவியாவாள்.
உபாகமம் 21 : 14 (ECTA)
அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.
உபாகமம் 21 : 15 (ECTA)
தலைச்சனின் பங்கு குறித்த விதிமுறை இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின்,
உபாகமம் 21 : 16 (ECTA)
அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது.
உபாகமம் 21 : 17 (ECTA)
வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில், அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி. தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும்.
உபாகமம் 21 : 18 (ECTA)
கீழ்ப்படியாத மகனைக் குறித்த விதிமுறை ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால்,
உபாகமம் 21 : 19 (ECTA)
தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர்.
உபாகமம் 21 : 20 (ECTA)
‘எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்; எங்கள் சொல் கேட்பதில்லை; பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்’ என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.
உபாகமம் 21 : 21 (ECTA)
உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்; அவனும் செத்தொழிவான். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று. அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர்.
உபாகமம் 21 : 22 (ECTA)
பிற சட்டங்கள் சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு,
உபாகமம் 21 : 23 (ECTA)
ஆனால், அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில், தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே. * கலா 3:13..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23