உபாகமம் 2 : 1 (ECTA)
பாலைநிலத்தில் கழிந்த ஆண்டுகள் பின்னர், ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம். [* எண் 21: 4 ]
உபாகமம் 2 : 2 (ECTA)
அப்பொழுது ஆண்டவர் என்னிடம் உரைத்தது;
உபாகமம் 2 : 3 (ECTA)
நீங்கள் நெடுங்காலமாக இந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளீர்கள்; இப்போது வடக்கு நோக்கிச் செல்லுங்கள்.
உபாகமம் 2 : 4 (ECTA)
மேலும், மக்களுக்கு நீ கட்டளையிட வேண்டியது; சேயிர் வாழ் ஏசாவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லையைக் கடக்கப் போகின்றீர்கள். அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள். எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். [* தொநூ 36: 8 ]
உபாகமம் 2 : 5 (ECTA)
அவர்களோடு தகராறு செய்ய வேண்டாம். ஏனெனில், அவர்களுடைய நாட்டில் ஓரடி நிலம்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். ஏனெனில், ஏசாவுக்கு சேயிர் மலை நாட்டை உடைமையாகக் கொடுத்துள்ளேன்.
உபாகமம் 2 : 6 (ECTA)
நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்கு உணவு வாங்கி உண்பீர்கள். அவ்வாறே, நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்குத் தண்ணீர் வாங்கிக் குடிப்பீர்கள்.
உபாகமம் 2 : 7 (ECTA)
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை.
உபாகமம் 2 : 8 (ECTA)
அதன்பிறகு, நாம் சேயிர்வாழ் நம் சகோதரராகிய ஏசாவின் மக்களிடமிருந்து புறப்பட்டு, அராபா வழியாய் ஏலாத்துக்கும், எட்சியோன்கெபேருக்கும் சென்றோம். மீண்டும் புறப்பட்டு மோவாபுப் பாலைநிலம் வழியாகச் சென்றோம்.
உபாகமம் 2 : 9 (ECTA)
அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், 'நீ மோவாபைத் துன்புறுத்தாமலும் அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அவர்களது நாட்டை உனக்கு உடைமையாகக் கொடுக்க மாட்டேன். மாறாக, ஆர்பகுதிகளை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன். [* தொநூ 19: 37 ]
உபாகமம் 2 : 10 (ECTA)
முற்காலத்தில் ஏமியர் அங்குக் குடியிருந்தனர். அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுதி உடையவர்கள்.
உபாகமம் 2 : 11 (ECTA)
அவர்கள் ஏனாக்கியர்போல் அரக்கர்கள் எனக் கருதப்பட்டனர். மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைக்கின்றனர்.
உபாகமம் 2 : 12 (ECTA)
முற்காலத்தில் ஓரியர் சேயிரில் குடியிருந்தனர். ஆண்டவர் தங்களுக்கு உடைமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேல் செய்ததுபோல், ஏசாவின் மக்களும் ஓரியரைத் தங்கள் முன்னின்று வெளியேற்றி அழித்து அவர்கள் இடத்தில் குடியேறினர்.-
உபாகமம் 2 : 13 (ECTA)
இப்பொழுது, எழுந்து, செரேது ஓடையைக் கடந்து செல்லுங்கள்’ என்றார். நாமும் செரேது ஓடையைக் கடந்து சென்றோம்.
உபாகமம் 2 : 14 (ECTA)
நாம் காதேசு - பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அதற்குள் அந்தத் தலைமுறையின் போர்வீரர் அனைவரும், ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியபடியே, பாளையத்தினின்று அடியோடு அழிந்தொழிந்தனர். [* எண் 14:28- 35 ]
உபாகமம் 2 : 15 (ECTA)
உண்மையாகவே, அவர்கள் அனைவரும் அடியோடு அழிந்தொழியும்வரை ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராய் இருந்தது.
உபாகமம் 2 : 16 (ECTA)
மக்களுள் போர்வீரராய் இருந்த எல்லோரும் முற்றிலும் இறந்தனர்.
உபாகமம் 2 : 17 (ECTA)
பின்னர், ஆண்டவர் என்னிடம் கூறியது:
உபாகமம் 2 : 18 (ECTA)
‘இன்று நீ ஆர் நகரைத் தாண்டி மோவாபின் எல்லையைக் கடந்து செல்வாய்.
உபாகமம் 2 : 19 (ECTA)
அப்பொழுது அம்மோனின் புதல்வரை நெருங்கி வருவாய். நீ அவர்களைத் துன்புறுத்தாமலும், அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அம்மோனியரின் நாட்டை உனக்கு உடமையாகக் கொடுக்கமாட்டேன். மாறாக, அதை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்’.- * தொநூ 19:38..
உபாகமம் 2 : 20 (ECTA)
ஏனெனில், அதுவும் அரக்கர்களின் நிலம் எனக் கருதப்பட்டது. முற்காலத்தில் அங்கு அரக்கர்கள் குடியிருந்தனர். அம்மோனியர் அவர்களை ‘சம்சுமியர்’ என்று அழைக்கின்றனர்.
உபாகமம் 2 : 21 (ECTA)
அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுந்தவர்கள். ஆனால், ஆண்டவர் அவர்களை அம்மோனியர் முன்னிலையில் அழித்தார். அம்மோனியரும் அவர்களை வெளியேற்றித் தங்கள் முன்னின்று அழித்து அவர்களது இடத்தில் குடியேறினர்.
உபாகமம் 2 : 22 (ECTA)
இது ஆண்டவர் சேயிர்வாழ் ஏசாவின் மக்களுக்குச் செய்ததற்கு ஒப்பாகும். ஆண்டவர் ஓரியரை அழித்தார். ஏசாவின் மக்கள் ஓரியரை வெளியேற்றிவிட்டு அவர்கள் இடத்தில் இன்றுவரை வாழ்கின்றனர்.
உபாகமம் 2 : 23 (ECTA)
அதுபோல் கட்சேரிம் தொடங்கி ஆசா வரை வாழ்ந்த அவ்வியரை கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்கள் இடத்தில் குடியேறினர்.-
உபாகமம் 2 : 24 (ECTA)
‘இப்பொழுது, எழுந்து பயணமாகுங்கள். அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள். இதோ, எமோரியனும் எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன். அதை உடைமையாக்கிக் கொள்ளுமாறு, அவனோடு போரிடுங்கள்.
உபாகமம் 2 : 25 (ECTA)
உன்னைப்பற்றிய திகிலும் அச்சமும் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களினங்கள் மீதும் உண்டாகுமாறு இன்று செய்வேன். அவர்கள் உன்னைப் பற்றிக் கேள்வியுற்று நடுங்கி, உன் பொருட்டுப் பதைபதைப்பர்’.
உபாகமம் 2 : 26 (ECTA)
மன்னன் சீகோனை இஸ்ரயேல் தோற்கடித்தல்
(எண் 21:21-30)
அப்பொழுது நான் கெதமோத்துப் பாலைநிலத்திலிருந்து எஸ்போனின் மன்னனாகிய சீகோனிடம் தூதரை அனுப்பி நல்லுறவுச் செய்தியுடன் சொன்னது:
உபாகமம் 2 : 27 (ECTA)
‘நாங்கள் உமது நாட்டின் நெடுஞ்சாலை வழியே கடந்து செல்ல அனுமதி கொடும். வலமோ இடமோ திரும்பாமல், நெடுஞ்சாலையில் மட்டும் நாங்கள் செல்வோம்.
உபாகமம் 2 : 28 (ECTA)
நீர் எமக்கு உணவை விலைக்குத் தாரும். நாங்கள் உண்போம். எமக்கு நீரை விலைக்குத் தாரும், நாங்கள் பருகுவோம். நாங்கள் கால்நடையாய்க் கடந்து போக மட்டும் அனுமதி கொடும்.
உபாகமம் 2 : 29 (ECTA)
சேயிர் வாழ் ஏசாவின் மக்களும், ஆர் நகர் வாழ் மோவாபியரும் எமக்கு அனுமதி கொடுத்தது போல், யோர்தானைக் கடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்க இருக்கிற நாட்டில் சேர்வதற்கு அனுமதி கொடும்.’
உபாகமம் 2 : 30 (ECTA)
ஆனால், எஸ்போனின் மன்னன் சீகோன் தன் நாட்டின் வழியே கடந்து செல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இன்றும் இருப்பதுபோல் அவனை உங்கள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவன் மனத்தைக் கடினப்படுத்தியிருந்தார்; அவன் இதயத்தையும் கல்லாக்கியிருந்தார்.
உபாகமம் 2 : 31 (ECTA)
அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘இதோ, சீகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். அவனது நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுமாறு அதைக் கைப்பற்றத் தொடங்கு’ என்றார்.
உபாகமம் 2 : 32 (ECTA)
சீகான் தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு யாகசுவில் போரிடப் புறப்பட்டு வந்தான்.
உபாகமம் 2 : 33 (ECTA)
நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நம் கையில் ஒப்படைத்தார். நாம் அவனையும் அவன் புதல்வரையும் அவன் குடிமக்கள் அனைவரையும் முறியடித்தோம்.
உபாகமம் 2 : 34 (ECTA)
அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எவரையுமே தப்பவிடாமல் அழித்தொழித்தோம்.
உபாகமம் 2 : 35 (ECTA)
கால்நடைகளையும், நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.
உபாகமம் 2 : 36 (ECTA)
அர்னோன் ஓடையின் ஓரத்தில் உள்ள அரோயேரும், ஓடையை ஒட்டியுள்ள நகர் தொடங்கி, கிலயாது வரைக்கும் நம்மை எதிர்க்கக் கூடிய அரண்சூழ் நகர் எதுவுமே இருந்ததில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் எல்லாவற்றையும் நம் கையில் ஒப்படைத்தார்.
உபாகமம் 2 : 37 (ECTA)
ஆனால், நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட இடங்கள் அனைத்தையும், அம்மோனியரின் நாட்டையும், யாபோக்கு ஓடைக் கரையிலுள்ள ஊர்களையும் மலை நாட்டு நகர்களையும் நீங்கள் அணுகவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37