உபாகமம் 16 : 1 (ECTA)
பாஸ்காத் திருவிழா
(விப 12:1-20) ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 2 (ECTA)
தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராகிய கடவுளுக்குப் பாஸ்காப் பலிசெலுத்து. [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 3 (ECTA)
அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே. எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய். அது துயரத்தின் அப்பம். ஏனெனில், நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய். [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 4 (ECTA)
உன் எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது. நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது. [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 5 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம். [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 6 (ECTA)
ஆனால் அவர்தம் பெயர் அதில் நிலைக்கும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில், நீ பாஸ்காப்பலியைச் செலுத்து, கதிரவன் மறையும் மாலை வேளையில், நீ எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த நேரத்தில், பலி செலுத்து. [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 7 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அதை நெருப்பில் வாட்டி உண்பாய். விடியற் காலையில் உன் கூடாரத்திற்குத் திரும்பிச் செல்வாய். [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 8 (ECTA)
ஆறு நாள்களுக்கு நீ புளிப்பற்ற அப்பத்தை உண்பாய். ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்காகத் திருப்பேரவை கூடும். அன்று நீ வேலை ஏதும் செய்யாதே. [* லேவி 23:5-8; எண் 28:16- 25 ]
உபாகமம் 16 : 9 (ECTA)
அறுவடை விழா
(விப 34:22; லேவி 23:15-21) நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள். விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு. [* எண் 28:26- 31 ]
உபாகமம் 16 : 10 (ECTA)
அதன்பின், உன் கடவுளாகிய ஆண்டவருக்கென வாரங்களின் விழாவைக் கொண்டாடு. அவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கைகளால் அவருக்குத் தன்னார்வக் காணிக்கைகளைச் செலுத்து. [* எண் 28:26- 31 ]
உபாகமம் 16 : 11 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் தம்பெயர் விளங்குமாறு தெரிந்தெடுக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் ஆண் ஊழியர்களும், பெண் ஊழியர்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அந்நியனும் ,அநாதைகளும், கைம்பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மகிழ்வீர்களாக. [* எண் 28:26- 31 ]
உபாகமம் 16 : 12 (ECTA)
நீ எகிப்தில் அடிமையாய் இருந்தாய் என்பதை நினைவிலிருத்தி, இந்த முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. [* எண் 28:26- 31 ]
உபாகமம் 16 : 13 (ECTA)
கூடார விழா
(லேவி 23:33-43) உன் களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய். [* எண் 29:12- 38 ]
உபாகமம் 16 : 14 (ECTA)
நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அந்நியனும், அநாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள். [* எண் 29:12- 38 ]
உபாகமம் 16 : 15 (ECTA)
உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய். [* எண் 29:12- 38 ]
உபாகமம் 16 : 16 (ECTA)
ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.
உபாகமம் 16 : 17 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!
உபாகமம் 16 : 18 (ECTA)
நீதி வழங்கும் முறை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
உபாகமம் 16 : 19 (ECTA)
நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையூட்டு வாங்காதே. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும். [* விப 23:6-8; லேவி 19: 15 ]
உபாகமம் 16 : 20 (ECTA)
நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்.
உபாகமம் 16 : 21 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நீ எழுப்பவிருக்கும் பீடத்தின் அருகில் அசேராக் கம்பங்களை ஊன்ற வேண்டாம். [* விப 34: 13 ]
உபாகமம் 16 : 22 (ECTA)
சிலைத் தூண்களையும் நிறுத்தாதே. ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவற்றை வெறுக்கிறார். * லேவி 26:1..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22