உபாகமம் 10 : 1 (ECTA)
பத்துக் கட்டளைகளை மோசே மீண்டும் பெறுதல்
(விப 34:1-10) அந்நாளில் ஆண்டவர் என்னை நோக்கி, ‘முன்னவைப்போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி என்னிடம் வா. மரத்தால் ஆன பேழையையும் உனக்காகச் செய்துகொள்.
உபாகமம் 10 : 2 (ECTA)
நீ உடைத்துப் போட்ட முன்னைய பலகைகளில் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளிலும் எழுதுவேன். நீ அவற்றைப் பேழையில் வை’ என்றார்.
உபாகமம் 10 : 3 (ECTA)
எனவே, சித்திம் மரத்தாலான ஒரு பேழையைச் செய்தேன். முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். அவ்விரு கற்பலகைகளையும் என் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறினேன்.
உபாகமம் 10 : 4 (ECTA)
சபை கூடிய நாளில், மலையில் நெருப்பினின்று, உங்களுக்குக் கூறிய பத்துக்கட்டளைகளை முன்பு எழுதியது போலவே ஆண்டவர் அப்பலகைகளில் எழுதினார். பின்னர், அவர் அவற்றை என்னிடம் கொடுத்தார்.
உபாகமம் 10 : 5 (ECTA)
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்திருந்த பேழையில் பலகைகளை வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை அங்கே உள்ளன.
உபாகமம் 10 : 6 (ECTA)
அதன்பின், இஸ்ரயேல் மக்கள் பெனயாக்கானுக்கு அருகிலுள்ள பெயரோத்திலிருந்து மோசேராவுக்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் எலயாசர் அவருக்குப் பதிலாக குரு ஆனார். [* எண் 20:28; 33: 38 ]
உபாகமம் 10 : 7 (ECTA)
அங்கிருந்து அவர்கள் குத்கோதாவுக்கும் தொடர்ந்து பாய்ந்தோடும் ஆறுகள் உள்ள யோற்றுபாத்தாவுக்கும் பயணம் செய்தார்கள்.
உபாகமம் 10 : 8 (ECTA)
அந்நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார். [* எண் 3:5- 8 ]
உபாகமம் 10 : 9 (ECTA)
எனவேதான், லேவியர்க்குத் தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை; உரிமைச் சொத்தும் இல்லை; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லி இருப்பதுபோல, ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.
உபாகமம் 10 : 10 (ECTA)
முதன்முறை போன்றே நான் நாற்பது பகலும் நாற்பது இரவும் மலைமீது தங்கியிருந்தேன். மீண்டும் ஒருமுறை ஆண்டவர் என் மன்றாட்டைக் கேட்டார். உங்களை அழிப்பதை ஆண்டவர் விரும்பவில்லை. [* விப 34: 28 ]
உபாகமம் 10 : 11 (ECTA)
ஆண்டவர் என்னிடம், ‘நீ எழுந்து மக்களுக்குமுன் புறப்பட்டுச் செல். நான் அவர்களுக்கு அளிப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்குள் சென்று அதை அவர்கள் உடைமையாக்கிக்கொள்ளட்டும்’ என்றார்.
உபாகமம் 10 : 12 (ECTA)
கடவுள் எதிர்பார்ப்பவை எனவே, இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து,
உபாகமம் 10 : 13 (ECTA)
உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?
உபாகமம் 10 : 14 (ECTA)
விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன.
உபாகமம் 10 : 15 (ECTA)
இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார்.
உபாகமம் 10 : 16 (ECTA)
ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்.
உபாகமம் 10 : 17 (ECTA)
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. [* 1 திமொ 6:15; திவெ 17:14; 19:16; திப 10:34; உரோ 2:11; கலா 2:6; எபே 6: 9 ]
உபாகமம் 10 : 18 (ECTA)
அநாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அந்நியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.
உபாகமம் 10 : 19 (ECTA)
அந்நியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியராய் இருந்தீர்கள்.
உபாகமம் 10 : 20 (ECTA)
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள்.
உபாகமம் 10 : 21 (ECTA)
அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே.
உபாகமம் 10 : 22 (ECTA)
உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார். * தொநூ 15:5; 22:17; 46:27..
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22