உபாகமம் 1 : 1 (ECTA)
யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே.
உபாகமம் 1 : 2 (ECTA)
காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
உபாகமம் 1 : 3 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாற்பதாவது ஆண்டின் பதினொன்றாம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.
உபாகமம் 1 : 4 (ECTA)
"எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனையும், எதிரேயி அருகே அசித்தரோத்தில் வாழ்ந்த பாசானின் அரசன் ஓகையும் முறியடித்த பின்னர்,
உபாகமம் 1 : 5 (ECTA)
யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில், பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார். அவர் கூறியது;
உபாகமம் 1 : 6 (ECTA)
"ஆண்டவராகிய நம் கடவுள் ஓரேபில் நமக்கு உரைத்தது; "இந்த மலைப்பகுதியில் நீங்கள் நெடுநாள் தங்கிவிட்டீர்கள்.
உபாகமம் 1 : 7 (ECTA)
புறப்படுங்கள், எமோரியரின் மலைப்பகுதி நோக்கிப் பயணமாகுங்கள். சமவெளியிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்கிலும், நெகேபிலும், கடற்கரையோரங்களிலும் வாழும் எல்லா மக்களிடமும் செல்லுங்கள். கானானிய நாட்டுக்கும், லெபனோனுக்கும், யூப்பிரத்தீசு பேராறு வரைக்கும் செல்லுங்கள்.
உபாகமம் 1 : 8 (ECTA)
இதோ! அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.
உபாகமம் 1 : 9 (ECTA)
அப்பொழுது நான் உங்களுக்குக் கூறியது; "என்னால் தனியாளாக உங்களைத் தாங்க முடியாது.
உபாகமம் 1 : 10 (ECTA)
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பலுகச் செய்துள்ளார். இதோ, இப்பொழுது நீங்கள் விண்மீன்களைப் போல் பெருந்திரளாய் உள்ளீர்கள்.
உபாகமம் 1 : 11 (ECTA)
உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக! வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
உபாகமம் 1 : 12 (ECTA)
உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா?
உபாகமம் 1 : 13 (ECTA)
உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்.
உபாகமம் 1 : 14 (ECTA)
நீங்களும் எனக்கு மறுமொழியாக, "செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று!" என்றீர்கள்.
உபாகமம் 1 : 15 (ECTA)
எனவே, ஞானமும் நற்பெயரும் கொண்ட உங்கள் குலத் தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன்; அவர்களை ஆயிரவர் தலைவராக, நூற்றுவர் தலைவராக, ஐம்பதின்மர் தலைவராக, பதின்மர் தலைவராக, மற்றும் உங்கள் ஒவ்வொரு குலத்தின் அலுவலர்களாக ஏற்படுத்தினேன்.
உபாகமம் 1 : 16 (ECTA)
மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, "உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அன்னியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள்.
உபாகமம் 1 : 17 (ECTA)
விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்; உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல் செவிகொடுங்கள்; எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது. உங்களால் தீர்க்க இயலாததை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் வழக்கைக் கேட்பேன்" என்றேன்.
உபாகமம் 1 : 18 (ECTA)
இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்நேரத்தில் நான் உங்களுக்குக் கட்டளையாகக் கூறினேன்.
உபாகமம் 1 : 19 (ECTA)
பின்னர் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்களே கண்டு அஞ்சிய பெரும் பாலை நிலம் முழுவதும், எமோரியரின் மலைப்பாதை வழி நடந்து, காதேசுபர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம்.
உபாகமம் 1 : 20 (ECTA)
அங்கு, நான் உங்களை நோக்கி, "நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் எமோரியரின் மலை நாட்டுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள்;
உபாகமம் 1 : 21 (ECTA)
இதோ, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தந்துள்ள நாட்டைப் பாருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு அளித்த வாக்கிற்கிணங்க நீங்கள் போய் அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அஞ்சவேண்டாம். கலக்கமுற வேண்டாம்" என்றேன்.
உபாகமம் 1 : 22 (ECTA)
அப்பொழுது, நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, "நமக்கு முன் ஆள்களை அனுப்புவோம், அவர்கள் நமக்காக அந்த நாட்டை ஆய்ந்து பார்ப்பார்கள், நாம் அதனுள் செல்லவேண்டிய பாதையைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய நகர்களைக் குறித்தும் அவர்கள் செய்தியுடன் நம்மிடம் திரும்புவார்கள்" என்றீர்கள்.
உபாகமம் 1 : 23 (ECTA)
அது நல்லதாக எனக்குத் தோன்றியது. உங்களிலிருந்து குலத்துக்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தேன்.
உபாகமம் 1 : 24 (ECTA)
அவர்கள் புறப்பட்டு, மலையில் ஏறி, எசுக்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று, அதை உளவு பார்த்தனர்.
உபாகமம் 1 : 25 (ECTA)
மேலும், அவர்கள் அந்த நாட்டின் கனிகளில் சிலவற்றைப் பறித்து நம்மிடம் கொணர்ந்து, "நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருப்பது நல்ல நாடு" என்று நமக்குச் செய்தி சொன்னார்கள்.
உபாகமம் 1 : 26 (ECTA)
ஆயினும், நீங்கள் முன்னேறிச் செல்ல மறுத்தீர்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள்.
உபாகமம் 1 : 27 (ECTA)
உங்கள் கூடாரங்களில் நீங்கள் முறுமுறுத்து, "ஆண்டவர் நம்மை வெறுத்ததால், நம்மை அழிக்கும்படி, எமோரியரிடம் கையளிப்பதற்காக, எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரச் செய்துள்ளார்.
உபாகமம் 1 : 28 (ECTA)
நாம் எங்கே போவது? நம்மைவிட வலிமையிலும் உயரத்திலும் மிகுந்த மக்களையும், அவர்களுடைய வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும், மற்றும் ஏனாக்கின் புதல்வர்களையும் அங்கு கண்டோம் என்று சொல்லி நம் சகோதரர்கள் நம் உள்ளங்களைக் கலங்கடித்தார்களே" என்று கூறினீர்கள்.
உபாகமம் 1 : 29 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொன்னேன்; "நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.
உபாகமம் 1 : 30 (ECTA)
உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார்.
உபாகமம் 1 : 31 (ECTA)
பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே!
உபாகமம் 1 : 32 (ECTA)
ஆயினும் இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை.
உபாகமம் 1 : 33 (ECTA)
பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே!"
உபாகமம் 1 : 34 (ECTA)
ஆகையால், உங்கள் முறையீட்டுக் குரலைக் கேட்டுக் கடுஞ்சினமுற்று ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியதாவது;
உபாகமம் 1 : 35 (ECTA)
"உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட தலைமுறையின் மனிதருள் எவனும் காணப் போவதில்லை.
உபாகமம் 1 : 36 (ECTA)
எப்புன்னேயின் மகனாகிய காலேபு மட்டும் அதைக் காண்பான். அவன் நடந்து வந்த நாட்டை அவனுக்கும் அவன் புதல்வருக்கும் நான் கொடுப்பேன். ஏனெனில் அவன் ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினான்.
உபாகமம் 1 : 37 (ECTA)
அன்றியும், உங்கள் பொருட்டு ஆண்டவர் என்மீதும் சினம் கொண்டு, நீயும் அங்கு போகமாட்டாய்.
உபாகமம் 1 : 38 (ECTA)
நூனின் மகனும் உன் ஊழியனுமாகிய யோசுவா அங்குச் செல்வான். நீ அவனை உறுதிப்படுத்து. ஏனெனில், அவன் இஸ்ரயேல் அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறுசெய்வான்.
உபாகமம் 1 : 39 (ECTA)
இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர். அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
உபாகமம் 1 : 40 (ECTA)
நீங்களோ புறப்பட்டு, செங்கடல் நெடுஞ்சாலை வழியே பாலை நிலத்துக்குப் பயணமாகுங்கள்" என்றார்.
உபாகமம் 1 : 41 (ECTA)
உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, "நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம்" என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள்.
உபாகமம் 1 : 42 (ECTA)
அப்பொழுது ஆண்டவர் என்னிடம், "நீங்கள் போக வேண்டாம்; போர்புரியவும் வேண்டாம்; உங்கள் பகைவர் உங்களை முறியடிப்பார்; ஏனெனில் நான் உங்கள் நடுவே இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல்" என்றார்.
உபாகமம் 1 : 43 (ECTA)
நானும் உங்களுக்கு அதையே சொன்னேன். நீங்களோ கேட்கவில்லை. மாறாக, நீங்கள் செருக்குற்று ஆண்டவரின் வாக்கை மீறி மலைமீது ஏறினீர்கள்.
உபாகமம் 1 : 44 (ECTA)
அந்த மலைப் பகுதிவாழ் எமோரியர் உங்களுக்கு எதிராகப் புறப்பட்டு, தேனீக்கள் போல் உங்களைத் துரத்தியடித்தனர். சேயிர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தனர்.
உபாகமம் 1 : 45 (ECTA)
அப்பொழுது, நீங்கள் திரும்பி வந்து ஆண்டவர்முன் அழுதீர்கள். ஆனால், ஆண்டவர் உங்கள் குரலைக் கேட்கவில்லை, உங்களுக்காகச் செவி சாய்க்கவும் இல்லை.
உபாகமம் 1 : 46 (ECTA)
இவ்வாறு நீங்கள் வெகு நாள்கள் காதேசில் தங்க நேர்ந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46

BG:

Opacity:

Color:


Size:


Font: