தானியேல் 6 : 1 (ECTA)
சிங்கக் குகையில் தானியேல் (1b) தன் நாடு முழுவதும் வரி வசூலிப்பதற்கென்று நூற்றிருபது தண்டல்காரரைத் தாரியு நியமித்தான்.
தானியேல் 6 : 2 (ECTA)
இத்தண்டல்காரரைக் கண்காணிப்பதற்கென்று மூன்று மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான். அரசனுக்கு எவ்வித இழப்பும் நேரிடாவண்ணம் இம் மூவரிடமும் அத்தண்டல்காரர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும்.
தானியேல் 6 : 3 (ECTA)
இம்மூவருள் தானியேலும் ஒருவர். இவர் மற்ற மேற்பார்வையாளரையும் தண்டல்காரரையும்விடச் சிறந்து விளங்கினார்; ஏனெனில், வியத்தகு ஆவி அவரிடத்தில் இருந்தது. தன் அரசின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான்.
தானியேல் 6 : 4 (ECTA)
ஆனால் மற்ற மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட வகை தேடினார்கள். அவரிடத்தில் குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவற்றையும் ஊழலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவர் நேர்மையாய் நடந்துகொண்டார். அவரிடம் எவ்விதத் தவறும் ஊழலும் காணப்படவில்லை.
தானியேல் 6 : 5 (ECTA)
அப்பொழுது அவர்கள், “இந்தத் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் தவிர வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது” என்றார்கள்.
தானியேல் 6 : 6 (ECTA)
(6-7) எனவே, இந்த மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் தங்களுக்குள் கூடிப்பேசி அரசனிடம் வந்து அவனிடம், “தாரியு அரசரே! நீர் நீடூழி வாழ்க! அதிகாரிகள், தண்டல்காரர்கள், அமைச்சர், ஆளுநர் ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் கூறுவது: முப்பது நாள் வரையில் அரசராகிய தங்களிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித் தடையுத்தரவு போடவேண்டும்.
தானியேல் 6 : 7 (ECTA)
தானியேல் 6 : 8 (ECTA)
ஆகையால், அரசரே! இப்பொழுதே அச்சட்டத்தை இயற்றித் தடையுத்தரவில் கையெழுத்திடும்; அப்பொழுதுதான் மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல, இச்சட்டமும் மாறாதிருக்கும்” என்றார்கள்.
தானியேல் 6 : 9 (ECTA)
அவ்வாறே தாரியு அரசன் சட்டத்தில் கையொப்பமிட்டுத் தடையுத்தரவு பிறப்பித்தான்.
தானியேல் 6 : 10 (ECTA)
தானியேல் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன. தமது வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்துவார்.
தானியேல் 6 : 11 (ECTA)
முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள்.
தானியேல் 6 : 12 (ECTA)
உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, “அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?” என்றார்கள். அதற்கு அரசன், “ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பதுபோல், இதுவும் மாறாததே” என்றான்.
தானியேல் 6 : 13 (ECTA)
உடனே அவர்கள் அரசனை நோக்கி, “யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்” என்றார்கள்.
தானியேல் 6 : 14 (ECTA)
ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.
தானியேல் 6 : 15 (ECTA)
ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்” என்றனர்.
தானியேல் 6 : 16 (ECTA)
ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றான்.
தானியேல் 6 : 17 (ECTA)
அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்தரையிட்டான்.
தானியேல் 6 : 18 (ECTA)
பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டகன்றது.
தானியேல் 6 : 19 (ECTA)
பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான்.
தானியேல் 6 : 20 (ECTA)
தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக்குரலில் அவன் தானியேலை நோக்கி, “தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?’ என்று உரக்கக் கேட்டான்.
தானியேல் 6 : 21 (ECTA)
அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசரே! நீர் நீடூழி வாழ்க!
தானியேல் 6 : 22 (ECTA)
என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே! என்று மறுமொழி கொடுத்தார்.
தானியேல் 6 : 23 (ECTA)
எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார்.
தானியேல் 6 : 24 (ECTA)
பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன.
தானியேல் 6 : 25 (ECTA)
அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவர்க்கும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் அறிக்கை விடுத்தான்.
தானியேல் 6 : 26 (ECTA)
“உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை.ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்;
அவரது ஆட்சி என்றும் அழிவற்றது;
அவரது அரசுரிமைக்கு முடிவே இராது.
தானியேல் 6 : 27 (ECTA)
தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்ப வரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!”
தானியேல் 6 : 28 (ECTA)
இவ்வாறு, தானியேல் தாரியுவின் ஆட்சிக் காலத்திலும், பாரசீகனான சைரசு மன்னனின் ஆட்சிக் காலத்திலும் சீரும் சிறப்புமாய் இருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28