ஆமோஸ் 8 : 1 (ECTA)
பழக்கூடையின் காட்சி தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன்.
ஆமோஸ் 8 : 2 (ECTA)
அவர், ‘ஆமோஸ்! என்ன காண்கிறாய்?’ என்று கேட்டார்; நான், ‘கனிந்த பழங்கள் உள்ள கூடை’ என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்; “என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது; இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.
ஆமோஸ் 8 : 3 (ECTA)
அந்நாளில் கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்; கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் தூக்கி யெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!’ என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆமோஸ் 8 : 4 (ECTA)
இஸ்ரயேலின் வீழ்ச்சி “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்;
ஆமோஸ் 8 : 5 (ECTA)
‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச்* சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; [* "ஏப்பா" என்பது எபிரேய பாடம். ; "செக்கேல்" என்பது எபிரேய பாடம்.. ]
ஆமோஸ் 8 : 6 (ECTA)
வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’
ஆமோஸ் 8 : 7 (ECTA)
ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
ஆமோஸ் 8 : 8 (ECTA)
இதனை முன்னிட்டு நாடு நடுநடுங்காதா? அதில் வாழ்வோர் அனைவரும் புலம்பமாட்டாரா? நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமெனச் சுழற்றியெறியப்படாதா? எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா?
ஆமோஸ் 8 : 9 (ECTA)
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்.
ஆமோஸ் 8 : 10 (ECTA)
உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்; எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன், ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவதுபோல நீங்களும் புலம்புமாறு செய்வேன்; அதன் முடிவு கசப்புமிக்க நாளாய் இருக்கும்.”
ஆமோஸ் 8 : 11 (ECTA)
தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.
ஆமோஸ் 8 : 12 (ECTA)
ஒரு கடல் முதல் மறு கடல்வரை, வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள்.
ஆமோஸ் 8 : 13 (ECTA)
அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.
ஆமோஸ் 8 : 14 (ECTA)
சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, “தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!” எனவும் “பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!” எனவும் சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்; மீண்டும் எழவே மாட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14