ஆமோஸ் 7 : 1 (ECTA)
வெட்டுக்கிளிகளின் காட்சி தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
ஆமோஸ் 7 : 2 (ECTA)
நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான்“இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்; யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகிறான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா!” என்றேன்.
ஆமோஸ் 7 : 3 (ECTA)
ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்; ‘இது நிகழாது,’ என்றார் தலைவராகிய ஆண்டவர்.”
ஆமோஸ் 7 : 4 (ECTA)
நெருப்பின் காட்சி தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “தலைவராகிய ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பாக நெருப்பு மழையை வருவித்தார்; அந்த நெருப்பு ஆழ்கடலை வற்றச் செய்து நிலத்தையும் விழுங்கிக் கொண்டிருந்தது.
ஆமோஸ் 7 : 5 (ECTA)
நான்,‘தலைவராகிய ஆண்டவரே, இதை நிறுத்தியருளும்; உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்; யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகின்றான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா!’ என்றேன்.
ஆமோஸ் 7 : 6 (ECTA)
ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்; ‘இதுவும் நிகழாது,’ என்றார் தலைவராகிய ஆண்டவர்.”
ஆமோஸ் 7 : 7 (ECTA)
தூக்குநூல் குண்டின் காட்சி ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “தூக்கு நூல் குண்டின் துணைகொண்டு கட்டப்பட்ட ஒரு மதில் அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்கு நூல் குண்டு இருந்தது.
ஆமோஸ் 7 : 8 (ECTA)
‘ஆமோஸ்! நீ காண்பதென்ன?’ என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், ‘அது தூக்கு நூல் குண்டு’ என்றேன். தலைவர் தொடர்ந்து சொன்னார்: ‘தூக்கு நூல் குண்டை என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில் தொங்கவிடப் போகிறேன்; இனி நான் அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை’. [* யோபு 9:1; 38: 31 ]
ஆமோஸ் 7 : 9 (ECTA)
ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும்; இஸ்ரயேலின் புனித இடங்கள் பாலைவெளி ஆக்கப்படும்; எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்.”
ஆமோஸ் 7 : 10 (ECTA)
ஆமோசும் அமட்சியாவும் பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான்.
ஆமோஸ் 7 : 11 (ECTA)
அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், ‘எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்’ என்று ஆமோஸ் சொல்லுகிறான்.”
ஆமோஸ் 7 : 12 (ECTA)
பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.
ஆமோஸ் 7 : 13 (ECTA)
பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.
ஆமோஸ் 7 : 14 (ECTA)
ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.
ஆமோஸ் 7 : 15 (ECTA)
ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.
ஆமோஸ் 7 : 16 (ECTA)
எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: ‘இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே; ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே’ என்று நீ சொல்கிறாய்!
ஆமோஸ் 7 : 17 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்; உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்; உன் நிலபுலம் பங்கு போட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்; இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17