அப்போஸ்தலர்கள் 7 : 1 (ECTA)
ஸ்தேவானின் அருளுரை தலைமைக் குரு, “இவையெல்லாம் உண்மைதானா?” என்று கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 7 : 2 (ECTA)
அதற்கு ஸ்தேவான் கூறியது: “சகோதரரே, தந்தையரே, கேளுங்கள். நம் தந்தையாகிய ஆபிரகாம் காரான் நகரில் குடியேறுமுன்பு மெசப்பொத்தாமியாவில் வாழ்ந்து வந்தபோது மாட்சி மிகு கடவுள் அவருக்கு தோன்றி, [* தொநூ 12: 1 ]
அப்போஸ்தலர்கள் 7 : 3 (ECTA)
“நீ உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தாரிடமிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்” என்று கூறினார். [* தொநூ 12: 1 ]
அப்போஸ்தலர்கள் 7 : 4 (ECTA)
அதன்பின் அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டு வெளியேறிக் காரான் நகரில் வந்து அங்கே குடியிருந்தார். அவருடைய தந்தை இறந்தபின்பு, நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்நாட்டுக்குக் கூட்டி வந்து இங்குக் குடிபெயரச் செய்தார். [* தொநூ 11:31; 12: 4 ]
அப்போஸ்தலர்கள் 7 : 5 (ECTA)
இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார். [* தொநூ 12:7; 13:15; 1518; 17: 8 ]
அப்போஸ்தலர்கள் 7 : 6 (ECTA)
மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாட்டில் அந்நியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார். [* தொநூ 15:13, 14 ]
அப்போஸ்தலர்கள் 7 : 7 (ECTA)
‘அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இவ்விடத்துக்கு வந்து என்னை வழிபடுவார்கள்’ என்றும் அவர் உரைத்துள்ளார். [* தொநூ 15:13, 14 ]
அப்போஸ்தலர்கள் 7 : 8 (ECTA)
பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு கொடுத்தார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும், யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர். [* தொநூ 17:10-14; 21:2-4; 25:26; 29:31; 35: 18 ]
அப்போஸ்தலர்கள் 7 : 9 (ECTA)
“பின் நம் குலமுதல்வர்கள் பொறாமை கொண்டு யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுவிட்டனர். ஆனால், கடவுள் அவரோடு இருந்தார். [* தொநூ 37:11,28; 39:2, 21 ]
அப்போஸ்தலர்கள் 7 : 10 (ECTA)
அவருக்கு வந்த அனைத்து இன்னல்களினின்றும் அவர் அவரை விடுவித்தார்; அத்துடன் எகிப்திய அரசரான பார்வோன் பார்வையில் யோசேப்புக்கு அருளையும் ஞானத்தையம் வழங்கினார். அரசர் அவரை எகிப்து நாட்டுக்கும் தன் உடைமை அனைத்துக்கும் ஆளுநராக நியமித்தார். [* தொநூ 41:39- 41 ]
அப்போஸ்தலர்கள் 7 : 11 (ECTA)
பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும் பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன. நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை. [* தொநூ 42:1, 2 ]
அப்போஸ்தலர்கள் 7 : 12 (ECTA)
அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு, முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 13 (ECTA)
இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது, யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று. [* தொநூ 45:1, 16 ]
அப்போஸ்தலர்கள் 7 : 14 (ECTA)
பின்பு, யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர். [* தொநூ 45:9,10,17-18; 46: 27 ]
அப்போஸ்தலர்கள் 7 : 15 (ECTA)
யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர். [* தொநூ 46:1-7; 49: 33 ]
அப்போஸ்தலர்கள் 7 : 16 (ECTA)
அவர்களுடைய உடல்கள் செக்கேமுக்குக் கொண்டு செல்லப்பட்டன; அங்கு, ஆபிரகாம் அமோரின் மைந்தர்களிடம் வெள்ளிக் காசுகளை விலையாக கொடுத்து வாங்கிய கல்லறையில் வைக்கப்பட்டன. [* தொநூ 23:3-6; 33:19; 50:7-13; யோசு 24: 32 ]
அப்போஸ்தலர்கள் 7 : 17 (ECTA)
ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர். [* விப 1:7, 8 ]
அப்போஸ்தலர்கள் 7 : 18 (ECTA)
இறுதியில் எகிப்து நாட்டில் யோசேப்பை அறியாத வேறோர் அரசன் தோன்றினான். [* விப 1:7, 8 ]
அப்போஸ்தலர்கள் 7 : 19 (ECTA)
அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி, நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான். [* விப 1:10,11, 22 ]
அப்போஸ்தலர்கள் 7 : 20 (ECTA)
அக்காலத்தில்தான் மோசே பிறந்தார். கடவுளுக்கு உகந்தவரான அவர் மூன்று மாதம் தந்தை வீட்டில் பேணி வளர்க்கப்பட்டார். [* விப 2: 2 ]
அப்போஸ்தலர்கள் 7 : 21 (ECTA)
பின்பு, வெளியே எறியப்பட்ட அவரை பார்வோனின் மகள் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார். [* விப 2:3- 10 ]
அப்போஸ்தலர்கள் 7 : 22 (ECTA)
மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையும் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.
அப்போஸ்தலர்கள் 7 : 23 (ECTA)
அவருக்கு நாற்பது வயதானபோது, தம் சகோதரர்களாகிய இஸ்ரயேல் மக்களின் நிலைமையைச் சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது. [* விப 2:11- 15 ]
அப்போஸ்தலர்கள் 7 : 24 (ECTA)
அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு, அவருக்குத் துணை நின்று, ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார். [* விப 2:11- 15 ]
அப்போஸ்தலர்கள் 7 : 25 (ECTA)
தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. [* விப 2:11- 15 ]
அப்போஸ்தலர்கள் 7 : 26 (ECTA)
மறுநாள் சிலர் சண்டையிடுவதைக் கண்டு, “நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கூறி அவர்களிடையே அமைதியும் நல்லுறவும் ஏற்படுத்த முயன்றார். [* விப 2:11- 15 ]
அப்போஸ்தலர்கள் 7 : 27 (ECTA)
ஆனால், தீங்கிழைத்தவன் ‘எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்? [* விப 2:11- 15 ]
அப்போஸ்தலர்கள் 7 : 28 (ECTA)
நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்?’ என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான். [* விப 2:11- 15 ]
அப்போஸ்தலர்கள் 7 : 29 (ECTA)
இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி, மிதியான் நாட்டுக்குச் சென்று அந்நியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர். [* விப 2:11- 15 ; விப 18:3, 4. ]
அப்போஸ்தலர்கள் 7 : 30 (ECTA)
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவரின் தூதர் சீனாய் மலை அருகே உள்ள பாலைநிலத்தில் ஒரு முட்புதர் நடுவே தீப்பிழம்பில் தோன்றினார். [* விப 3:1- 10 ]
அப்போஸ்தலர்கள் 7 : 31 (ECTA)
மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார். அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது, [* விப 3:1- 10 ]
அப்போஸ்தலர்கள் 7 : 32 (ECTA)
“உன்னுடைய மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் நானே” என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது. மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை. [* விப 3:1- 10 ]
அப்போஸ்தலர்கள் 7 : 33 (ECTA)
கடவுள் அவரிடம், “உன் கால்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில், நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம். [* விப 3:1- 10 ]
அப்போஸ்தலர்கள் 7 : 34 (ECTA)
எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன். அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்துள்ளேன். உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன். இப்போதே வா” என்றார். [* விப 3:1- 10 ]
அப்போஸ்தலர்கள் 7 : 35 (ECTA)
முன்பு, ‘உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்?’ என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால், அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய தம்தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.
அப்போஸ்தலர்கள் 7 : 36 (ECTA)
அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார்; அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார். [* விப 7:3; 14:21- 33 ]
அப்போஸ்தலர்கள் 7 : 37 (ECTA)
“கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச் சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார்” என்று இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான். [* இச 8:15, 18 ]
அப்போஸ்தலர்கள் 7 : 38 (ECTA)
பாலை நிலத்தில் மக்கள் சபையாகக் கூடியபோது சீனாய் மலையில் தம்மோடு பேசிய தூதருக்கும் நம் மூதாதையருக்கும் இடையே நின்றவர் இவரே. வாழ்வளிக்கும் வார்த்தைகளை நமக்குப் பெற்றுத் தந்தவரும் இவரே. [* விப 19:1-20:17; இச 5:1- 33 ]
அப்போஸ்தலர்கள் 7 : 39 (ECTA)
ஆனால், நம் மூதாதையர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளினர்; எகிப்துக்குத் திரும்பிச் செல்ல உளம் கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 7 : 40 (ECTA)
அவர்கள் ஆரோனை நோக்கி, “எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்தஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர் எங்களுக்கு உருவாக்கிக் கொடும்” என்று கேட்டார்கள். [* விப 32: 1 ]
அப்போஸ்தலர்கள் 7 : 41 (ECTA)
அக்காலத்தில் அவர்கள் ஒரு கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தினார்கள். தாங்களே செய்துகொண்ட சிலைக்குமுன் மகிழ்ந்து கொண்டாடினார்கள். [* விப 32:2- 6 ]
அப்போஸ்தலர்கள் 7 : 42 (ECTA)
ஆகவே, கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்வெளிக் கோள்களை வணங்குமாறு அவர்களை விட்டுவிட்டார். இதைக் குறித்து இறைவாக்கினர் நூலில், ‘இஸ்ரயேல் வீட்டாரே, பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ? [* ஆமோ 5:25- 27 ]
அப்போஸ்தலர்கள் 7 : 43 (ECTA)
நீங்கள் மோளோக்குடைய கூடாரத்தையும், உங்கள் தெய்வமாகிய இரேப்பானுடைய விண்மீனையும் தூக்கிக் கொண்டு சென்றீர்கள். நீங்கள் இந்தச் சிலைகளை வணங்குவதற்கென்றே செய்தீர்கள். எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கும் அப்பால் குடி பெயரச் செய்வேன்’ என்று எழுதப்பட்டுள்ளது. [* ஆமோ 5:25- 27 ]
அப்போஸ்தலர்கள் 7 : 44 (ECTA)
பாலை நிலத்தில் நம் மூதாதையருக்குச் சந்திப்புக் கூடாரம் இருந்தது. கடவுள் மோசேயோடு பேசியபோது அவருக்குக் காண்பித்த மாதிரியின்படி அதனை அமைக்கப்பணித்திருந்தார். [* விப 25:9, 40 ]
அப்போஸ்தலர்கள் 7 : 45 (ECTA)
பின்பு ,நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த வேற்றினத்தாரின் நாடுகளை யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது அவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து பெற்றிருந்த அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர். தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது. [* யோசு 3:14- 17 ]
அப்போஸ்தலர்கள் 7 : 46 (ECTA)
தாவீது கடவுளின் அருளைப் பெற்றிருந்தார். எனவே, அவர் யாக்கோபின் வீட்டார் வழிபடக் கடவுளுக்கு ஓர் உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக் கொண்டார். [* 2 சாமு 7:1-16; 1 குறி 17:1- 14 ]
அப்போஸ்தலர்கள் 7 : 47 (ECTA)
ஆனால், கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே. [* 1 அர 6:1-38; 2 குறி 3:1- 17 ]
அப்போஸ்தலர்கள் 7 : 48 (ECTA)
“உன்னத கடவுளோ மனிதர் கையால் கட்டிய இல்லங்களில் குடியிருப்பதில்லை” என்று இறைவாக்கினர் கூறியது போல,
அப்போஸ்தலர்கள் 7 : 49 (ECTA)
‘விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறிருக்க, எத்தகைய கோயிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? [* எசா 66:1- 2 ]
அப்போஸ்தலர்கள் 7 : 50 (ECTA)
இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின’ என்கிறார் ஆண்டவர். [* எசா 66:1- 2 ]
அப்போஸ்தலர்கள் 7 : 51 (ECTA)
திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். * எசா 63:10..
அப்போஸ்தலர்கள் 7 : 52 (ECTA)
எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 53 (ECTA)
கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.”
அப்போஸ்தலர்கள் 7 : 54 (ECTA)
ஸ்தேவான் மீது கல்லெறிதல் இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 55 (ECTA)
அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,
அப்போஸ்தலர்கள் 7 : 56 (ECTA)
“இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார்.
அப்போஸ்தலர்கள் 7 : 57 (ECTA)
ஆனால், அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 58 (ECTA)
நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 7 : 59 (ECTA)
அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார்.
அப்போஸ்தலர்கள் 7 : 60 (ECTA)
பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.
❮
❯