அப்போஸ்தலர்கள் 6 : 1 (ECTA)
திருத்தொண்டர்களை நியமித்தல் அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 2 (ECTA)
எனவே, பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. [* விப 18:17- 23 ]
அப்போஸ்தலர்கள் 6 : 3 (ECTA)
ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். [* 1 திமொ 3:8- 10 ]
அப்போஸ்தலர்கள் 6 : 4 (ECTA)
நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.
அப்போஸ்தலர்கள் 6 : 5 (ECTA)
திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து
அப்போஸ்தலர்கள் 6 : 6 (ECTA)
அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். [* 1 திமொ 4: 14 ]
அப்போஸ்தலர்கள் 6 : 7 (ECTA)
கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 8 (ECTA)
ஸ்தேவான் கைது செய்யப்படல் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 6 : 9 (ECTA)
அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக்கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவனோடு வாதாடத் தொடங்கினர்.
அப்போஸ்தலர்கள் 6 : 10 (ECTA)
ஆனால், அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. * லூக் 24:15..
அப்போஸ்தலர்கள் 6 : 11 (ECTA)
பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 6 : 12 (ECTA)
அவ்வாறே, அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்து வந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்;
அப்போஸ்தலர்கள் 6 : 13 (ECTA)
மேலும், பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசி வருகிறான்” என்று கூறினார்கள்.
அப்போஸ்தலர்கள் 6 : 14 (ECTA)
மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 6 : 15 (ECTA)
தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15