அப்போஸ்தலர்கள் 5 : 1 (ECTA)
அனனியாவும் சப்பிராவும் அனனியா என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மனைவி சப்பிராவுடன் சேர்ந்து தன்னுடைய நிலத்தை விற்றான்;
அப்போஸ்தலர்கள் 5 : 2 (ECTA)
விற்ற தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தான்.
அப்போஸ்தலர்கள் 5 : 3 (ECTA)
அப்பொழுது பேதுரு, “அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்?
அப்போஸ்தலர்கள் 5 : 4 (ECTA)
அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்ற பின்பும் அந்தப்பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது? பின்பு ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்? நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்” என்று கூறினார். [* இச 23:22, 23 ]
அப்போஸ்தலர்கள் 5 : 5 (ECTA)
அவர் கூறியதைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.
அப்போஸ்தலர்கள் 5 : 6 (ECTA)
இளைஞர்கள் எழுந்து வந்து அவனைத் துணியால் மூடிச் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 7 (ECTA)
ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின் அவன் மனைவி உள்ளே வந்தாள்; நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது.
அப்போஸ்தலர்கள் 5 : 8 (ECTA)
பேதுரு அவளைப் பார்த்து, “நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்” என்று கேட்க, அவள் “ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்” என்று பதிலளித்தாள்.
அப்போஸ்தலர்கள் 5 : 9 (ECTA)
மீண்டும் பேதுரு அவளைப் பார்த்து, “தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ! உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்து விட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள்” என்றார். [* 1 கொரி 10: 9 ]
அப்போஸ்தலர்கள் 5 : 10 (ECTA)
உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 11 (ECTA)
திருச்சபையார் யாவரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையுமே பேரச்சம் ஆட்கொண்டது.
அப்போஸ்தலர்கள் 5 : 12 (ECTA)
அடையாளங்களும் அருஞ்செயல்களும் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 13 (ECTA)
மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும், மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.
அப்போஸ்தலர்கள் 5 : 14 (ECTA)
ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 15 (ECTA)
பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; [* மாற் 6: 56 ]
அப்போஸ்தலர்கள் 5 : 16 (ECTA)
எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர். [* லூக் 4:40, 41 ]
அப்போஸ்தலர்கள் 5 : 17 (ECTA)
திருத்தூதர் துன்புறுத்தப்படுதல் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து
அப்போஸ்தலர்கள் 5 : 18 (ECTA)
திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 19 (ECTA)
ஆனால், இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச் சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று,
அப்போஸ்தலர்கள் 5 : 20 (ECTA)
“நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார்.
அப்போஸ்தலர்கள் 5 : 21 (ECTA)
இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டு வருமாறு ஆள் அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 22 (ECTA)
அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பி வந்து,
அப்போஸ்தலர்கள் 5 : 23 (ECTA)
“நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டோம். ஆனால், கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 24 (ECTA)
இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 25 (ECTA)
அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார்.
அப்போஸ்தலர்கள் 5 : 26 (ECTA)
உடனே காவல்தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.
அப்போஸ்தலர்கள் 5 : 27 (ECTA)
அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி,
அப்போஸ்தலர்கள் 5 : 28 (ECTA)
“நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும், இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார். [* மத் 27: 25 ]
அப்போஸ்தலர்கள் 5 : 29 (ECTA)
அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?
அப்போஸ்தலர்கள் 5 : 30 (ECTA)
நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 5 : 31 (ECTA)
இஸ்ரயேல் மக்களுக்கு மன மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார்.
அப்போஸ்தலர்கள் 5 : 32 (ECTA)
இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 33 (ECTA)
இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 34 (ECTA)
அப்பொழுது கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு,
அப்போஸ்தலர்கள் 5 : 35 (ECTA)
அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
அப்போஸ்தலர்கள் 5 : 36 (ECTA)
சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று.
அப்போஸ்தலர்கள் 5 : 37 (ECTA)
இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.
அப்போஸ்தலர்கள் 5 : 38 (ECTA)
ஆகவே, இப்போது நீங்கள் இம் மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். [* மத் 15:13; லூக் 20: 4 ]
அப்போஸ்தலர்கள் 5 : 39 (ECTA)
அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். [* மத் 15:13; லூக் 20: 4 ]
அப்போஸ்தலர்கள் 5 : 40 (ECTA)
பின்பு, அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர்.
அப்போஸ்தலர்கள் 5 : 41 (ECTA)
இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். * 1 கொரி 4:9,10..
அப்போஸ்தலர்கள் 5 : 42 (ECTA)
அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.
❮
❯