அப்போஸ்தலர்கள் 26 : 1 (ECTA)
அகிரிப்பா முன் பவுல் தம் நிலையை விளக்குதல் அகிரிப்பா பவுலை நோக்கி, “நீர் உம் வழக்கை எடுத்துரைக்க அனுமதிக்கிறேன்” என்று கூறினார். உடனே பவுல் தமது கையை உயர்த்தித் தம் நிலையை விளக்கத் தொடங்கினார்;
அப்போஸ்தலர்கள் 26 : 2 (ECTA)
“அகிரிப்பா அரசே! யூதர் எனக்கு எதிராகச் சாட்டும் அனைத்துக் குற்றங்களையும் பொறுத்த மட்டில் என் நிலையை இன்று உமக்குமுன் நான் விளக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்று கருதுகிறேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 3 (ECTA)
ஏனெனில், யூதருடைய முறைமைகளையும் அவர்களுடைய சிக்கல்களையும் குறித்து நீர் நன்கு அறிந்தவர். ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 4 (ECTA)
நான் இளமை முதல் என் இனத்தாரிடையே எருசலேமில் எப்படி வாழ்ந்து வந்தேன் என்பதை யூதரனைவரும் தொடக்கமுதல் அறிவர்.
அப்போஸ்தலர்கள் 26 : 5 (ECTA)
நான் நமது சமயத்தில் மிகவும் கண்டிப்பான பரிசேயக் கட்சி முறைப்படி வாழ்ந்து வந்தேன் என்பதும் தொடக்கமுதல் அவர்களுக்கே தெரியும்; விரும்பினால் அவர்களே அதற்கு சான்று கூறலாம். [* திப 8:3; பிலி 3: 5 ]
அப்போஸ்தலர்கள் 26 : 6 (ECTA)
நம் மூதாதையருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதியை நான் எதிர்நோக்குவதால் தான் இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 7 (ECTA)
இந்த வாக்குறுதி நிறைவேறும் என்று எதிர்நோக்கி நம் பன்னிரு குலத்தினரும் கடவுளை அல்லும் பகலும் ஆர்வத்துடன் வழிபடுகின்றனர். அரசே! இந்த எதிர்நோக்கை நானும் கொண்டுள்ளதால் யூதர்கள் என்மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 26 : 8 (ECTA)
கடவுள் இறந்தோரை உயிர்த்தெழச் செய்கிறார் என்பதை இங்கிருக்கும் நீங்கள் ஏன் நம்ப முடியாத ஒன்றாகக் கருதுகிறீர்கள்?
அப்போஸ்தலர்கள் 26 : 9 (ECTA)
நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். [* திப 8:3; 22:4, 5 ]
அப்போஸ்தலர்கள் 26 : 10 (ECTA)
இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றேன். அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன். [* திப 8:3; 22:4, 5 ]
அப்போஸ்தலர்கள் 26 : 11 (ECTA)
கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் கட்டாயப்படுத்தினேன்; தொழுகைக் கூடங்களிலும் அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். மேலும், நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று, அங்குள்ளோர்மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன். [* திப 8:3; 22:4, 5 ]
அப்போஸ்தலர்கள் 26 : 12 (ECTA)
பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல் “இந்நோக்கத்துடன் நான் தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் அனுமதியும் பெற்றுக் கொண்டு தமஸ்குவுக்குச் சென்றேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 13 (ECTA)
போகும் வழியில் நடுப்பகல் வேளையில், அரசே! கதிரவனை விட அதிகமாகச் சுடர் வீசிய ஒளி ஒன்று வானிலிருந்து தோன்றி என்னையும் என்னோடு வந்தவர்களையும் சுற்றி ஒளிர்ந்ததை நான் கண்டேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 14 (ECTA)
நாங்களனைவரும் தரையில் விழுந்தோம். எபிரேய மொழியில், ‘சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்’ என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 15 (ECTA)
அதற்கு நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்க அவர், ‘நீ துன்புறுத்தும் இயேசு நானே.
அப்போஸ்தலர்கள் 26 : 16 (ECTA)
எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப்பற்றியும் சான்று பகர வேண்டும். [* எசே 2:1, 3 ]
அப்போஸ்தலர்கள் 26 : 17 (ECTA)
உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்; பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன். [* எசே 2:1, 3 ]
அப்போஸ்தலர்கள் 26 : 18 (ECTA)
நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்; என்னிடம் நம்பிக்கை கொண்டு தங்களைத் தூயோராக்கிக் கொண்டவர்களோடு உரிமைப்பேறு அடைவார்கள்’ என்றார். [* எசா 42:7, 16 ]
அப்போஸ்தலர்கள் 26 : 19 (ECTA)
பவுல் யூதருக்கும் வேற்றினத்தாருக்கும் சான்று பகருதல் “ஆகையால் அகிரிப்பா அரசே! அந்த விண்ணகக் காட்சிக்கு நான் கீழ்ப் படிந்தேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 20 (ECTA)
ஆகவே, முதலில் தமஸ்குவிலும் பின் எருசலேமிலும் யூதயோவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்வோரிடமும் பிற இனத்தாரிடமும் சென்று அவர்கள் மனம் மாறி கடவுளிடம் திரும்ப வேண்டுமென்றும், மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் அவர்கள் காட்டவேண்டும் என்றும் அறிவித்தேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 21 (ECTA)
இதன் காரணமாக யூதர்கள் கோவிலில் என்னைக் கைது செய்து கொல்ல முயன்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 26 : 22 (ECTA)
ஆயினும், கடவுளின் உதவிபெற்று, இந்நாள் வரை இறைவாக்கினரும் மோசேயும் நடக்கவிருப்பதாகக் கூறியதையே நானும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சான்றாகக் கூறி வருகிறேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 23 (ECTA)
அதாவது, மெசியா துன்பப்படுவார்; எனினும், இறந்த அவர்முதலில் உயிர்த்தெழுந்து நம் மக்களும் பிற இனத்தாரும் ஒளி பெறுவர் என அவர்களுக்கு அறிவிப்பார் என்று அவர்கள் கூறியதையே நானும் கூறி வருகிறேன்.” * எசா 42:6; 49:6..
அப்போஸ்தலர்கள் 26 : 24 (ECTA)
அகிரிப்பா நம்பிக்கை கொள்ளுமாறு பவுல் வேண்டுதல் இவ்வாறு, பவுல் தம் நிலையை விளக்கிக் கொண்டிருந்தபோது, பெஸ்து உரத்த குரலில், “பவுலே! உனக்குப் பித்துப் பிடித்துவிட்டது; அதிகப்படிப்பு உன்னைப் பைத்தியக்காரனாக மாற்றிவிட்டது” என்றார்.
அப்போஸ்தலர்கள் 26 : 25 (ECTA)
அதற்குப் பவுல், “மாண்புமிகு பெஸ்துவே! எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை. நான் உண்மையோடும் அறிவுத்தெளிவோடும் பேசுகிறேன்.
அப்போஸ்தலர்கள் 26 : 26 (ECTA)
அரசர் இவற்றை அறிவார். ஆகவே, நான் துணிவோடு அவர்முன் பேசுகின்றேன். இவற்றில் எதுவும் அவரது கவனத்தில் படாமல் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், இவை ஏதோ ஒரு மூலையில் நடந்தவையல்ல.
அப்போஸ்தலர்கள் 26 : 27 (ECTA)
அகிரிப்பா அரசே, இறைவாக்கினர் கூறியவற்றை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
அப்போஸ்தலர்கள் 26 : 28 (ECTA)
அகிரிப்பா பவுலை நோக்கி, “இவ்வளவு குறுகிய காலத்துக்குள் என்னைக் கிறிஸ்தவனாக்கி விடலாம் என நம்புகிறீரா?” என்றார்.
அப்போஸ்தலர்கள் 26 : 29 (ECTA)
அதற்குப் பவுல், “குறுகிய காலத்திலாயிருந்தாலும் சரி, நெடுங்காலத்திலாயிருந்தாலும் சரி, நீர் மட்டுமல்ல, இன்று நான் கூறுவதைக் கேட்கிற அனைவரும் என்னைப் போலாக வேண்டும்; ஆனால், இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்; இதுவே கடவுளிடம் எனது வேண்டுதல்” என்றார்.
அப்போஸ்தலர்கள் 26 : 30 (ECTA)
பின்பு அரசரும் ஆளுநரும் பெர்னிக்கியும் அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 26 : 31 (ECTA)
அவர்கள் அங்கிருந்து சென்றபோது, “இவர் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் செய்யவில்லையே” என ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 26 : 32 (ECTA)
அகிரிப்பா பெஸ்துவிடம், “இவர் சீசரே தம்மை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிராவிட்டால் இவரை விடுவித்திருக்கலாம்” என்று கூறினார்.
❮
❯