அப்போஸ்தலர்கள் 18 : 1 (ECTA)
கொரிந்து நகரில் பவுல் இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 2 (ECTA)
அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், “யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 18 : 3 (ECTA)
கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார். [* 1 கொரி 4: 11 ]
அப்போஸ்தலர்கள் 18 : 4 (ECTA)
ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 5 (ECTA)
சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; ‘இயேசுவே மெசியா' என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 6 (ECTA)
அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, “உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்” என்று கூறினார்;
அப்போஸ்தலர்கள் 18 : 7 (ECTA)
அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்து யுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக் கூடத்தை அடுத்து இருந்தது.
அப்போஸ்தலர்கள் 18 : 8 (ECTA)
தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். [* 1 கொரி 1: 14 ]
அப்போஸ்தலர்கள் 18 : 9 (ECTA)
இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே.
அப்போஸ்தலர்கள் 18 : 10 (ECTA)
ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்” என்று சொன்னார். [* 1 கொரி 2: 3 ]
அப்போஸ்தலர்கள் 18 : 11 (ECTA)
அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 12 (ECTA)
கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளாராக இருந்த போது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக் கொண்டு வந்து,
அப்போஸ்தலர்கள் 18 : 13 (ECTA)
“இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 18 : 14 (ECTA)
பவுல் பேச வாயெடுத்த போது கல்லியோ அவர்களை நோக்கி, “யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன்.
அப்போஸ்தலர்கள் 18 : 15 (ECTA)
ஆனால், இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை” என்று கூறி,
அப்போஸ்தலர்கள் 18 : 16 (ECTA)
அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார்.
அப்போஸ்தலர்கள் 18 : 17 (ECTA)
உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக் கூடத்தலைவரான சொஸ்தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால், கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை.
அப்போஸ்தலர்கள் 18 : 18 (ECTA)
பவுல் அந்தியோக்கியா திரும்புதல் பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, தம் நேர்த்திக் கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக்கொண்டு, அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார். [* எண் 6:18; திப 21:27, 28 ]
அப்போஸ்தலர்கள் 18 : 19 (ECTA)
அவர்கள் எபேசு வந்தடைந்தபோது அவர் அவர்களை விட்டுப் பிரிந்து தொழுகைக் கூடம் சென்று யூதரோடு விவாதித்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 20 (ECTA)
அவர்கள் அவரை இன்னும் நீண்ட காலம் தங்களோடு இருக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். ஆனால், அவர் அதற்கு இணங்கவில்லை.
அப்போஸ்தலர்கள் 18 : 21 (ECTA)
அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, “கடவுள் விரும்பினால் நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வருவேன்” என்று கூறி எபேசிலிருந்து கப்பலேறினார்;
அப்போஸ்தலர்கள் 18 : 22 (ECTA)
பின்னர் அவர் செசரியா வந்து அங்கிருந்து எருசலேம் போய்த் திருச்சபையாரை வாழ்த்திய பின் அந்தியோக்கியா சென்றார்.
அப்போஸ்தலர்கள் 18 : 23 (ECTA)
- மூன்றாம் தூதுரைப் பயணம் - சிறிது காலம் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.
அப்போஸ்தலர்கள் 18 : 24 (ECTA)
எபேசில் அப்பொல்லோ கற்பித்தல் அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். * 1 கொரி 1:12..
அப்போஸ்தலர்கள் 18 : 25 (ECTA)
ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப்பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால், அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 26 (ECTA)
அவர் தொழுகைக் கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர்.
அப்போஸ்தலர்கள் 18 : 27 (ECTA)
அவர் அக்காயாவுக்குப் போக விரும்பிய போது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 28 (ECTA)
ஏனெனில், அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, “இயேசுவே மெசியா” என மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.
❮
❯