அப்போஸ்தலர்கள் 16 : 1 (ECTA)
பவுல், சீலா ஆகியோருடன் திமொத்தேயு செல்லுதல் பின்பு, பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப்பெண். தந்தையோ கிரேக்கர்.
அப்போஸ்தலர்கள் 16 : 2 (ECTA)
திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர்.
அப்போஸ்தலர்கள் 16 : 3 (ECTA)
பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில், அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 4 (ECTA)
அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப்பிடிக்குமாறு கூறினார்.
அப்போஸ்தலர்கள் 16 : 5 (ECTA)
இவ்வாறு, திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.
அப்போஸ்தலர்கள் 16 : 6 (ECTA)
துரோவாவில் கண்ட காட்சி பின்பு, ஆசியாவில்* இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். * ஆசியா என்பது உரோமை மாநிலங்களுள் ஒன்று. . இது இன்றைய துருக்கி நாட்டின் ஒரு பகுதி ஆகும்.
அப்போஸ்தலர்கள் 16 : 7 (ECTA)
அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.
அப்போஸ்தலர்கள் 16 : 8 (ECTA)
எனவே, அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 9 (ECTA)
பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, “நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்டினார்.
அப்போஸ்தலர்கள் 16 : 10 (ECTA)
இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.
அப்போஸ்தலர்கள் 16 : 11 (ECTA)
லீதியாவின் மனமாற்றம் பின்பு, நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்;
அப்போஸ்தலர்கள் 16 : 12 (ECTA)
அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சிலநாள்கள் தங்கியிருந்தோம்.
அப்போஸ்தலர்கள் 16 : 13 (ECTA)
ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.
அப்போஸ்தலர்கள் 16 : 14 (ECTA)
அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
அப்போஸ்தலர்கள் 16 : 15 (ECTA)
அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், “நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.
அப்போஸ்தலர்கள் 16 : 16 (ECTA)
பிலிப்பி நகரில் சிறையிடப்படுதல் ஒரு நாள் நாங்கள் இறைவேண்டல் செய்யும் இடத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது குறி சொல்லும் ஆவியைத் தம்முள் கொண்ட அடிமைப்பெண் ஒருவர் எங்களுக்கு எதிரே வந்தார். அவர் குறி சொல்லி அதனால் தம்மை அடிமையாக வைத்திருப்பவர்களுக்கு மிகுதியான வருவாய் கிடைக்கச்செய்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 16 : 17 (ECTA)
அவர் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இவர்கள் உன்னத கடவுளின் பணியாளர்கள்; மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்” என்று உரக்கக் கூறினார்.
அப்போஸ்தலர்கள் 16 : 18 (ECTA)
பல நாள்கள் அவர் அவ்வாறு செய்து வந்தார். பவுல் எரிச்சல் கொண்டு அவர் பக்கம் திரும்பி, “நீ இவரைவிட்டுப் போகுமாறு இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று அந்த ஆவியிடம் கூறினார். அந்நேரமே அது அவரைவிட்டுச் சென்று விட்டது.
அப்போஸ்தலர்கள் 16 : 19 (ECTA)
அவரை அடிமையாக வைத்திருந்தவர்கள் இதைக் கண்டு தங்களுடைய வருவாய்க்கான வாய்ப்பெல்லாம் போய்விட்டதே என்று எண்ணிப் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளிக்குத் தம் ஆட்சியாளரிடம் இழுத்துச் சென்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 20 (ECTA)
அவர்கள் தலைமை நடுவர்கள் முன் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி, “இவர்கள் யூதர்கள்; நமது நகரில் கலகம் விளைவிக்கிறார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 21 (ECTA)
உரோமையராகிய நாம் ஏற்றுக் கொள்ளவோ செயல்படுத்தவோ தகாத முறைமைகளை இவர்கள் அறிவிக்கிறார்கள்” என்றனர்.
அப்போஸ்தலர்கள் 16 : 22 (ECTA)
உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். [* பிலி 1:30; 1 தெச 2: 2 ]
அப்போஸ்தலர்கள் 16 : 23 (ECTA)
அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக்கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். [* 2 கொரி 11: 25 ]
அப்போஸ்தலர்கள் 16 : 24 (ECTA)
இவ்வாறு, கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.
அப்போஸ்தலர்கள் 16 : 25 (ECTA)
நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். [* கொலோ 3: 16 ]
அப்போஸ்தலர்கள் 16 : 26 (ECTA)
திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன.
அப்போஸ்தலர்கள் 16 : 27 (ECTA)
சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார்.
அப்போஸ்தலர்கள் 16 : 28 (ECTA)
பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, “நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார்.
அப்போஸ்தலர்கள் 16 : 29 (ECTA)
சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார்.
அப்போஸ்தலர்கள் 16 : 30 (ECTA)
அவர்களை வெளியே அழைத்து வந்து, “பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 16 : 31 (ECTA)
அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 32 (ECTA)
பின்பு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 33 (ECTA)
அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 34 (ECTA)
அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.
அப்போஸ்தலர்கள் 16 : 35 (ECTA)
பொழுது விடிந்ததும் தலைமை நடுவர்கள் காவல் அதிகாரிகளை அனுப்பி அவர்களை விடுவிக்குமாறு கூறினார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 36 (ECTA)
சிறைக் காவலர் பவுலிடம் இச்செய்தியை அறிவித்தார்; “தலைமை நடுவர்கள் உங்களை விடுதலை செய்யுமாறு சொல்லியனுப்பியுள்ளார்கள். எனவே, இப்போது நீங்கள் அமைதியுடன் புறப்பட்டுப் போங்கள்” என்றார்.
அப்போஸ்தலர்கள் 16 : 37 (ECTA)
அதற்குப் பவுல், “நாங்கள் உரோமைக் குடி மக்கள். முறையான தீர்ப்பு இன்றியே அவர்கள் எங்களைப் பொதுமக்கள் முன் நையப் புடைத்துச் சிறையில் தள்ளினார்கள். இப்போது எங்களை யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பார்க்கிறார்களா? அது நடக்காது. அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துச் செல்லட்டும்” என்று கூறினார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 38 (ECTA)
காவல் அதிகாரிகள் இச்செய்தியைத் தலைமை நடுவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் உரோமைக் குடிமக்கள் என்று கேட்டதும் அந்த நடுவர்கள் அஞ்சினார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 39 (ECTA)
உடனே அவர்கள் வந்து அவர்களிடம் மன்னிப்புக் கோரி, தங்கள் நகரைவிட்டுப் போகுமாறு வேண்டிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 16 : 40 (ECTA)
அவர்கள் சிறையிலிருந்து வெளியேறி, லீதியாவின் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கு சகோதரர் சகோதரிகளைக் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்திய பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40