அப்போஸ்தலர்கள் 10 : 1 (ECTA)
பேதுருவும் கொர்னேலியுவும் செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர்.
அப்போஸ்தலர்கள் 10 : 2 (ECTA)
அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்; மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்; இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர்.
அப்போஸ்தலர்கள் 10 : 3 (ECTA)
ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில் அவர் ஒரு காட்சி கண்டார். அதில் கடவுளுடைய தூதர் அவரிடம் வந்து “கொர்னேலியு” என்று அழைப்பது தெளிவாகத் தெரிந்தது.
அப்போஸ்தலர்கள் 10 : 4 (ECTA)
அவர் வானதூதரை உற்றுப்பார்த்து, “ஆண்டவரே, என்ன?” என்று அச்சத்தோடு கேட்டார். அதற்குத் தூதர், “உமது வேண்டல்களும் இரக்கச் செயல்களும் கடவுள் திருமுன் சென்றடைந்துள்ளன; அவற்றை அவர் நினைவில் கொண்டுள்ளார்.
அப்போஸ்தலர்கள் 10 : 5 (ECTA)
இப்போது யோப்பா நகருக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்.
அப்போஸ்தலர்கள் 10 : 6 (ECTA)
தோல் பதனிடும் சீமோன் என்பவரின் வீட்டில் அவர் விருந்தினராய் தங்கியிருக்கிறார். அவர் வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார்.
அப்போஸ்தலர்கள் 10 : 7 (ECTA)
தம்மோடு பேசிய வானதூதர் சென்றதும் அவர் தம் வீட்டு வேலையாள்களுள் இருவரையும் தம் நம்பிக்கைக்குரிய இறைப்பற்றுள்ள படைவீரர் ஒருவரையும் கூப்பிட்டு,
அப்போஸ்தலர்கள் 10 : 8 (ECTA)
நடந்தவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லி அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினார்.
அப்போஸ்தலர்கள் 10 : 9 (ECTA)
அவர்கள் வழிநடந்து மறுநாள் அந்த நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பேதுரு இறைவனிடம் வேண்ட வீட்டின் மேல்தளத்துக்குச் சென்றார். அப்போது மணி பன்னிரண்டு.
அப்போஸ்தலர்கள் 10 : 10 (ECTA)
அவருக்குப் பசி உண்டாயிற்கு. அவர் உணவருந்த விரும்பினார். உணவு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானார்;
அப்போஸ்தலர்கள் 10 : 11 (ECTA)
வானம் திறந்திருப்தையும், பெரிய நான்கு கப்பற்பாய் போன்றதொரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டுத் தரையில் இறக்கப்படுவதையும் கண்டார்.
அப்போஸ்தலர்கள் 10 : 12 (ECTA)
நடப்பன, தரையில் ஊர்வன, வானில் பறப்பன அனைத்தும் அதில் இருந்தன.
அப்போஸ்தலர்கள் 10 : 13 (ECTA)
அப்போது “பேதுரு, எழுந்திடு! இவற்றைக்கொன்று சாப்பிடு” என்று ஒரு குரல் கேட்டது.
அப்போஸ்தலர்கள் 10 : 14 (ECTA)
அதற்கு மறுமொழியாகப் பேதுரு, “வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதையும் நான் ஒருபோதும் உண்டதேயில்லை” என்றுரைத்தார். [* எசே 4: 14 ]
அப்போஸ்தலர்கள் 10 : 15 (ECTA)
இரண்டாம் முறையாக அக்குரல், “தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே” என்று ஒலித்தது. [* தொநூ 1: 31 ]
அப்போஸ்தலர்கள் 10 : 16 (ECTA)
இப்படி மும்முறை நடந்தவுடன் அந்த விரிப்பு வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போஸ்தலர்கள் 10 : 17 (ECTA)
தாம் கண்ட காட்சியின் பொருள் என்ன என்பது பற்றிப் பேதுரு தமக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தபோது, கொர்னேலியு அனுப்பிய ஆள்கள் சீமோன் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கதவருகில் வந்து நின்று,
அப்போஸ்தலர்கள் 10 : 18 (ECTA)
பேதுரு என்னும் பெயருடைய சீமோன் என்பவர் இங்குத் தங்கியிருக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டனர்.
அப்போஸ்தலர்கள் 10 : 19 (ECTA)
பேதுரு இக்காட்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது தூய ஆவியார் அவரிடம், “இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்;
அப்போஸ்தலர்கள் 10 : 20 (ECTA)
நீ கீழே இறங்கித் தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு புறப்பட்டுச் செல். ஏனெனில், நான்தான் அவர்களை அனுப்பியுள்ளேன்” என்றார்.
அப்போஸ்தலர்கள் 10 : 21 (ECTA)
பேதுரு கீழே இறங்கி அவர்களிடம், “நீங்கள் தேடுபவர் நான்தான். நீங்கள் வந்த காரணம் என்ன?” என்று கேட்டார்.
அப்போஸ்தலர்கள் 10 : 22 (ECTA)
அதற்கு அவர்கள், “நூற்றுவர் தலைவரான கொர்னேலியு ஒரு நேர்மையாளர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்; யூதமக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்; உம்மைத் தம் வீட்டுக்கு வரவழைத்து நீர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று தூய வானதூதர் அவருக்கு வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 10 : 23 (ECTA)
அப்போது பேதுரு அவர்களை உள்ளே அழைத்துச் சென்று விருந்தோம்பினார். மறுநாள் அவர் அவர்களுடன் புறப்பட்டுப் போனார். யோப்பாவிலுள்ள சகோதரர் சிலரும் அவரோடு சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 10 : 24 (ECTA)
அடுத்த நாள் அவர் செசரியா நகரைச் சென்றடைந்தார். கொர்னேலியு தம் உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போஸ்தலர்கள் 10 : 25 (ECTA)
பேதுரு உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.
அப்போஸ்தலர்கள் 10 : 26 (ECTA)
பேதுரு, “எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்” என்று கூறி அவரை எழுப்பினார். [* திப 14:15; திவெ 19: 10 ]
அப்போஸ்தலர்கள் 10 : 27 (ECTA)
அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார். அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு
அப்போஸ்தலர்கள் 10 : 28 (ECTA)
அவர்களைப் பார்த்து, “ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது” எனக் கடவுள் எனக்குக் காட்டினார். [* திப 15: 9 ]
அப்போஸ்தலர்கள் 10 : 29 (ECTA)
ஆகவே, நீங்கள் என்னை வரவழைத்தபோது மறுப்புக் கூறாமல் வந்தேன். இப்போது சொல்லும்; எதற்காக என்னை வரவழைத்தீர்?” என்று வினவினார்.
அப்போஸ்தலர்கள் 10 : 30 (ECTA)
அதற்கு கொர்னேலியு கூறியது: “மூன்று நாள்களுக்குமுன் இதே நேரத்தில், அதாவது பிற்பகல் மூன்று மணிக்கு என் வீட்டில் நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது பளபளப்பான ஆடையணிந்த ஒருவர் என்முன் வந்து நின்றார்.
அப்போஸ்தலர்கள் 10 : 31 (ECTA)
அவர் என்னிடம், “கொர்னேலியு, உம் வேண்டுதலைக் கடவுள் கேட்டருளினார். உம் இரக்கச் செயல்களை அவர் நினைவிற் கொண்டார்.
அப்போஸ்தலர்கள் 10 : 32 (ECTA)
ஆகவே, நீர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பிப் பேதுரு என்னும் பெயருடைய சீமோனை வரவழையும். அவர் தோல் பதனிடுபவராகிய சீமோன் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். அவ்வீடு கடலோரத்தில் உள்ளது” என்றார்.
அப்போஸ்தலர்கள் 10 : 33 (ECTA)
எனவேதான், உடனே உமக்கு ஆள் அனுப்பினேன். நீரும் இங்கு வந்தது நல்லது. ஆண்டவர் பணித்த அனைத்தையும் இப்போதும் உம் வழியாகக் கேட்பதற்கு நாங்கள் யாவரும் கடவுள் திருமுன் கூடியிருக்கிறோம்.”
அப்போஸ்தலர்கள் 10 : 34 (ECTA)
கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுருவின் உரை அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். [* இச 10:17; உரோ 2:11; 1 பேது 1: 17 ]
அப்போஸ்தலர்கள் 10 : 35 (ECTA)
எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
அப்போஸ்தலர்கள் 10 : 36 (ECTA)
இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். * எசா 52:7..
அப்போஸ்தலர்கள் 10 : 37 (ECTA)
திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும்.
அப்போஸ்தலர்கள் 10 : 38 (ECTA)
கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.
அப்போஸ்தலர்கள் 10 : 39 (ECTA)
யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 10 : 40 (ECTA)
ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.
அப்போஸ்தலர்கள் 10 : 41 (ECTA)
ஆயினும், அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
அப்போஸ்தலர்கள் 10 : 42 (ECTA)
மேலும், வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.
அப்போஸ்தலர்கள் 10 : 43 (ECTA)
அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்” என்றார்.
அப்போஸ்தலர்கள் 10 : 44 (ECTA)
பிற இனத்தவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுதல் பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது.
அப்போஸ்தலர்கள் 10 : 45 (ECTA)
பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்;
அப்போஸ்தலர்கள் 10 : 46 (ECTA)
ஏனென்றால், அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 10 : 47 (ECTA)
பேதுரு, “நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?” என்று கூறி,
அப்போஸ்தலர்கள் 10 : 48 (ECTA)
இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.
❮
❯