2 சாமுவேல் 8 : 1 (ECTA)
தாவீதின் வெற்றிகள்
(1 குறி 18:1-17)
இதன்பிறகு, தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2 சாமுவேல் 8 : 2 (ECTA)
அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களைத் தரையில் படுக்கச்செய்து நூலால் அளந்து இரு பகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.
2 சாமுவேல் 8 : 3 (ECTA)
மேலும், யூப்பரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அததேசரையும் தாவீது தோற்கடித்தார்.
2 சாமுவேல் 8 : 4 (ECTA)
தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத்தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.
2 சாமுவேல் 8 : 5 (ECTA)
தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அததேசருக்கு உதவ வந்தபோது, அவர்களுள் இருபத்து இரண்டாயிரம் பேரைத் தாவீது கொன்றார்.
2 சாமுவேல் 8 : 6 (ECTA)
பிறகு, தமஸ்கு நகரின் ஆராம் பகுதியில் தாவீது படைத்தளங்களை அமைத்தார். சிரியா நாட்டினர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
2 சாமுவேல் 8 : 7 (ECTA)
அததேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற் கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார்.
2 சாமுவேல் 8 : 8 (ECTA)
அததேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்து, பெரோத்தாயிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.
2 சாமுவேல் 8 : 9 (ECTA)
அததேசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான்.
2 சாமுவேல் 8 : 10 (ECTA)
உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்; ஏனெனில், தோயி அததேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டுவந்தான்.
2 சாமுவேல் 8 : 11 (ECTA)
இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினார்.
2 சாமுவேல் 8 : 12 (ECTA)
அந்நாடுகளாவன: ஏதோம், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர். சோபாவின் மன்னன் அததேசரிடமிருந்து எடுத்த கொள்ளைப் பொருளையும் காணிக்கையாக்கினார்.
2 சாமுவேல் 8 : 13 (ECTA)
தாவீது உப்புக் கணவாயில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்துத் திரும்பியபின் அவருக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று. * திபா 63 தலைப்பு..
2 சாமுவேல் 8 : 14 (ECTA)
அவர் ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்குக் கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.
2 சாமுவேல் 8 : 15 (ECTA)
தாவீது அனைத்து இஸ்ரயேல்மீதும் ஆட்சிபுரிந்து நீதியும் நேர்மையும் விளங்கச் செய்தார்.
2 சாமுவேல் 8 : 16 (ECTA)
செரூயாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபாத்து ஆவணக் காப்பாளராகவும்
2 சாமுவேல் 8 : 17 (ECTA)
அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலராகவும் பணியாற்றினர்.
2 சாமுவேல் 8 : 18 (ECTA)
யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் மேலாளராக இருந்தார். தாவீதின் புதல்வர்கள் குருக்களாக இருந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18