2 சாமுவேல் 2 : 1 (ECTA)
தாவீது யூதாவின் அரசராதல் இதன்பின் தாவீது, “நான் யூதாவின் நகர்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லட்டுமா?” என்று ஆண்டவரிடம் கேட்டார். “செல்” என்றார் ஆண்டவர். “எங்குச் செல்லலாம்?” என்று மீண்டும் தாவீது வினவ, “எபிரோன்” என்று ஆண்டவர் பதிலளித்தார்.
2 சாமுவேல் 2 : 2 (ECTA)
ஆகவே, தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்குச் சென்றார். [* 1 சாமு 25:42- 43 ]
2 சாமுவேல் 2 : 3 (ECTA)
தம்மோடு இருந்த ஆள்களையும் அவர்களின் குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர்.
2 சாமுவேல் 2 : 4 (ECTA)
யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராகத் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். “யாபோசு-கிலயாதின் ஆள்கள் தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று அவர்கள் தாவீதிடம் கூறினர். [* 1 சாமு 31:11- 13 ]
2 சாமுவேல் 2 : 5 (ECTA)
யாபேசு-கிலயாதின் ஆள்களுக்குத் தாவீது தூதனுப்பி, “நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக!
2 சாமுவேல் 2 : 6 (ECTA)
ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் உண்மையும் காட்டுவாராக! நீங்கள் இவ்வாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்.
2 சாமுவேல் 2 : 7 (ECTA)
வலிமை பெற்று வீரர்களாகத் திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்; எனினும், யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர்” என்று கூறினார்.
2 சாமுவேல் 2 : 8 (ECTA)
இஸ்பொசேத்தை இஸ்ரயேலின் அரசராய் ஏற்படுத்தல் இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று
2 சாமுவேல் 2 : 9 (ECTA)
கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப்ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான்.
2 சாமுவேல் 2 : 10 (ECTA)
சவுலின் மகன் இஸ்பொசேத்து இஸ்ரயேல்மீது அரசாளத் தொடங்கியபோது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டுகள் அவன் அரசனாக இருந்தான். ஆனால், யூதா குலமோ தாவீதைப் பின்பற்றியது.
2 சாமுவேல் 2 : 11 (ECTA)
தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சிபுரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே.
2 சாமுவேல் 2 : 12 (ECTA)
யூதா, இஸ்ரயேலிடையே போர் நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசேத்தின் பணியாளர்களும் மகனயிமிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர்.
2 சாமுவேல் 2 : 13 (ECTA)
செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்பட்டுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர்.
2 சாமுவேல் 2 : 14 (ECTA)
“இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள்போர் செய்யட்டும்” என்று அப்னேர் யோவாபிடம் கூறினான். “அவர்கள் அவ்வாறே செய்யட்டும்” என்று யோவாபும் கூறினான்.
2 சாமுவேல் 2 : 15 (ECTA)
பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளருள் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.
2 சாமுவேல் 2 : 16 (ECTA)
ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம்* என்று அழைத்தனர். * ‘வாள்களின் வயல்கள்’ என்பது பொருள்..
2 சாமுவேல் 2 : 17 (ECTA)
போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது. அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.
2 சாமுவேல் 2 : 18 (ECTA)
அங்கே செரூயாவின் புதல்வர் — யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான்போல் வேகமாக ஓடக் கூடியவன்.
2 சாமுவேல் 2 : 19 (ECTA)
அசாவேல் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.
2 சாமுவேல் 2 : 20 (ECTA)
அப்னேர் பின்னால் திரும்பி, “அசாவேல்! நீயா?’ என்று கேட்டான். “நானே தான்” என்று அவன் பதில் கூறினான்.
2 சாமுவேல் 2 : 21 (ECTA)
“உன் வலமோ இடமோ விலகி இளைஞருள் ஒருவனைப் பிடித்து, அவன் உடைமைகளைப் பிடுங்கிக்கொள்” என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால், அசாவேலுக்கு அவனைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிடமனம் இல்லை.
2 சாமுவேல் 2 : 22 (ECTA)
“என்னைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிடு. நான் ஏன் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு என் முகத்தைக் காட்டுவேன்?” என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான்.
2 சாமுவேல் 2 : 23 (ECTA)
ஆனால், அசாவேல் அதைக் கேளாமல் தொடர்ந்தான். ஆகவே, அப்னேர் தன் ஈட்டி முனையால் அவனை வயிற்றில் குத்த, அது அவனைப் பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.
2 சாமுவேல் 2 : 24 (ECTA)
பின் யோவாபும் அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக இருக்கும் அம்மா மலையை அவர்கள் வந்தடைந்தபோது கதிரவன் மறைந்துகொண்டிருந்தான்.
2 சாமுவேல் 2 : 25 (ECTA)
அப்போது பென்யமினின் ஆள்கள் அப்னேருக்குப்பின் ஒரே படையாகத் திரண்டு ஒரு குன்றின் உச்சியில் நின்றனர்.
2 சாமுவேல் 2 : 26 (ECTA)
அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, “வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் என நீ அறியாயா? தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் திரும்பிச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ?”’ என்று கூறினான்.
2 சாமுவேல் 2 : 27 (ECTA)
அதற்கு யோவாபு, “வாழும் கடவுள் மேல் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள்” என்று கூறி,
2 சாமுவேல் 2 : 28 (ECTA)
எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்குமேல் அவர்கள் இஸ்ரயேலைப் பின்தொடரவில்லை. போரிடவுமில்லை.
2 சாமுவேல் 2 : 29 (ECTA)
அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் பயணம் செய்து மகனயிமை அடைந்தனர்.
2 சாமுவேல் 2 : 30 (ECTA)
யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின், தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திரட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளருள் பத்தொன்பது பேரைக் காணவில்லை.
2 சாமுவேல் 2 : 31 (ECTA)
தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர்.
2 சாமுவேல் 2 : 32 (ECTA)
அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32