2 சாமுவேல் 15 : 1 (ECTA)
அப்சலோம் கலகம் செய்தல் அதற்குப் பின்னர், அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.
2 சாமுவேல் 15 : 2 (ECTA)
அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாயிலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்புக் கேட்க வந்தால், அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, “நீ எந்நகரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்பான். அவன், “உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குலத்தினின்றும் வருகிறேன்” என்று பதில் சொல்லுவான்.
2 சாமுவேல் 15 : 3 (ECTA)
அப்போது அப்சலோம், “உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால், அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.
2 சாமுவேல் 15 : 4 (ECTA)
நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால், வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதி வழங்குவேன்” என்பான்.
2 சாமுவேல் 15 : 5 (ECTA)
யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனைத் தழுவி முத்தமிடுவான்.
2 சாமுவேல் 15 : 6 (ECTA)
அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டான்.
2 சாமுவேல் 15 : 7 (ECTA)
நான்கு* ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம்,” நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும். * ‘நாற்பது’ என்பது எபிரேய பாடம்..
2 சாமுவேல் 15 : 8 (ECTA)
உமது அடியான், சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்தபோது, ‘ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன்’ என்று ஒரு நேர்ச்சை செய்தேன்” என்றான்.
2 சாமுவேல் 15 : 9 (ECTA)
“நலமாய்ச் சென்று வா” என்று அரசர் அவனிடம் கூற, அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான்.
2 சாமுவேல் 15 : 10 (ECTA)
பின் அப்சலோம் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் “நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் ‘அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார்’ என்று முழங்குங்கள்” என்று சொல்லியனுப்பினான்.
2 சாமுவேல் 15 : 11 (ECTA)
எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர்; வஞ்சகமின்றி, இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமுடன் சென்றனர்.
2 சாமுவேல் 15 : 12 (ECTA)
அப்சலோம் பலி செலுத்தியபோது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.
2 சாமுவேல் 15 : 13 (ECTA)
தாவீது எருசலேமினின்று தப்பியோடல் அப்போது தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, “அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்” என்று கூறினான்.
2 சாமுவேல் 15 : 14 (ECTA)
தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், “வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில், அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்” என்றார்.
2 சாமுவேல் 15 : 15 (ECTA)
அதற்கு அரச அலுவலர், “எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம்” என்று அரசரிடம் கூறினர்.
2 சாமுவேல் 15 : 16 (ECTA)
அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால், வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார்.
2 சாமுவேல் 15 : 17 (ECTA)
அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள்.
2 சாமுவேல் 15 : 18 (ECTA)
அவர்தம் அனைத்து அலுவலரும் அவர்முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர்பின் வந்த அறுநூறு பேர் — கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் — அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.
2 சாமுவேல் 15 : 19 (ECTA)
அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச்சென்று அரசனோடு தங்கு. ஏனெனில், நீ ஓர் அந்நியன்; நாடு கடத்தப்பட்டவன்.
2 சாமுவேல் 15 : 20 (ECTA)
நீ நேற்று வந்தவன்; இன்று நான் உன்னை எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன், திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக” என்று கூறினார்.
2 சாமுவேல் 15 : 21 (ECTA)
இத்தாய் அதற்கு மறுமொழியாக, “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர்மேல் ஆணை! வாழ்வாகட்டும், சாவாகட்டும். என் தலைவராம் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியானும் இருப்பான்” என்று அரசரிடம் கூறினான்.
2 சாமுவேல் 15 : 22 (ECTA)
தாவீது இத்தாயிடம், ‘சரி’ முன்னே செல்’ என்று சொல்ல, கித்தியனான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.
2 சாமுவேல் 15 : 23 (ECTA)
மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று. அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.
2 சாமுவேல் 15 : 24 (ECTA)
இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் உடன்படிதக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும்வரை கீழே வைத்திருந்தனர். அபியத்தார் அங்கே வந்தார்.
2 சாமுவேல் 15 : 25 (ECTA)
அரசர் சாதோக்கை நோக்கி,“‘கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்குக் கருணைகிடைத்தால், அவர் என்னைத் திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.
2 சாமுவேல் 15 : 26 (ECTA)
‘உன் மீது எனக்கு விருப்பமில்லை’ என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்பப்படியே எனக்குச் செய்யட்டும்” என்று கூறினார்.
2 சாமுவேல் 15 : 27 (ECTA)
மேலும், அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, “நீரும் திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள்.
2 சாமுவேல் 15 : 28 (ECTA)
நான் பாலைநிலத்தின் எல்லைப் பகுதிகளில், உன்னிடமிருந்து எனக்குச் செய்தி வரும்வரை காத்திருப்பேன்” என்றார்.
2 சாமுவேல் 15 : 29 (ECTA)
அவ்வாறே, சாதோக்கும் அபியத்தாரும் கடவுளின் பேழையோடு எருசலேம் திரும்பி, அங்கேயே தங்கிவிட்டார்கள்.
2 சாமுவேல் 15 : 30 (ECTA)
தாவீது அழுதுகொண்டே ஒலிவமலை ஏறிச்சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடிருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச் சென்றனர்.
2 சாமுவேல் 15 : 31 (ECTA)
அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபாலும் ஒருவன் என்று கூறப்பட்டபோது, தாவீது, “ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன். அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக!” என்றார்.
2 சாமுவேல் 15 : 32 (ECTA)
மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழுதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான்.
2 சாமுவேல் 15 : 33 (ECTA)
தாவீது அவனிடம், “நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய்.
2 சாமுவேல் 15 : 34 (ECTA)
ஆனால், நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம், “அரசே, உம் அடியான் யான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்ததுபோல இனி உமக்கும் பணியாளனாக இருப்பேன்” எனச் சொல்லி, எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.
2 சாமுவேல் 15 : 35 (ECTA)
அங்குக் குரு சாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் எடுத்துச் சொல்.
2 சாமுவேல் 15 : 36 (ECTA)
அவர்களோடு அவர்களின் இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்குச் சொல்லியனுப்பு” என்று கூறினார்.
2 சாமுவேல் 15 : 37 (ECTA)
தாவீதின் நண்பன் ஊசாய் நகருக்குள் சென்று கொண்டிருந்தபோது, அப்சலோம் எருசலேமுக்குள் நுழைந்தான்.
❮
❯