2 சாமுவேல் 13 : 1 (ECTA)
அம்னோன்-தாமார் பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள்மீது மோகம் கொண்டிருந்தான்.
2 சாமுவேல் 13 : 2 (ECTA)
அம்னோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால், அவளிடம் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
2 சாமுவேல் 13 : 3 (ECTA)
அம்னோனுக்கு யோனதாபு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் தாவீதின் சகோதரனான சிமயியின் மகன். யோனதாபு சூழ்ச்சி மிக்கவன்.
2 சாமுவேல் 13 : 4 (ECTA)
“இளவரசே! நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரோ?’ என்று கேட்க, அதற்கு அம்னோன், “என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன்” என்று அவனிடம் கூறினான்.
2 சாமுவேல் 13 : 5 (ECTA)
யோனதாபு அவனிடம் “உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர்போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் ‘என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும்; என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன்’ எனச் சொல்லும்" என்று யோனதாபு அவனுக்கு ஆலோசனை கூறினான்.
2 சாமுவேல் 13 : 6 (ECTA)
அவ்வாறே, அம்னோன் படுத்துக்கொண்டு நோயுற்றவன்போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காணவந்த போது, அம்னோன் அவரிடம், “தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண் முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன்” எனக் கூறினான்.
2 சாமுவேல் 13 : 7 (ECTA)
தாவீது வீட்டுக்கு ஆளனுப்பி தாமாரை வரச்சொல்லி, “உடனே உன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்று அவனுக்கு உணவு தயார் செய்” என்றார்.
2 சாமுவேல் 13 : 8 (ECTA)
தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்து பிசைந்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள்.
2 சாமுவேல் 13 : 9 (ECTA)
பிறகு, அவள் பாத்திரத்தைக்கொண்டு வந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல்” என்று அம்னோன் கேட்க, எல்லாரும் அவனை விட்டுச் சென்றனர்.
2 சாமுவேல் 13 : 10 (ECTA)
“உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன்” என்று அம்னோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.
2 சாமுவேல் 13 : 11 (ECTA)
அவன் உண்பதற்காக அவற்றை அவள் எடுத்துக்கொண்டு அவனருகே சென்றபோது அவன் அவளைப் பிடித்து இழுத்து, “என் சகோதரியே! வா, என்னோடு படு” என்றான்.
2 சாமுவேல் 13 : 12 (ECTA)
“வேண்டாம் சகோதரனே! என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில், இஸ்ரயேலில் இவ்வாறு நடப்பதில்லை. இந்த மடமையைச் செய்யாதே.
2 சாமுவேல் 13 : 13 (ECTA)
எனது அவமானத்தை நான் எப்படிப் போக்குவேன்? நீயும் இஸ்ரயேலில் மதிக்கெட்ட ஒருவனாக இருப்பாய். தயைகூர்ந்து அரசரிடமே கேள். அவர் என்னை உனக்குக் கொடுக்க மறுக்கமாட்டார்” என்று அவள் அவனிடம் கெஞ்சினாள்.
2 சாமுவேல் 13 : 14 (ECTA)
அவனோ அவளது குரலுக்கு செவிகொடுக்கவில்லை. அவளை விட வலிமைமிக்கவனாக இருந்ததால், அவன் அவளைக் கற்பழித்தான்.
2 சாமுவேல் 13 : 15 (ECTA)
அதன்பிறகு, அம்னோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள்மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து, “எழுந்து சென்று விடு” என்று அவளிடம் கூறினான்.
2 சாமுவேல் 13 : 16 (ECTA)
அவளோ, “வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது” என்று கதறினாள். ஆனால், அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.
2 சாமுவேல் 13 : 17 (ECTA)
தனக்குப் பணிவிடை செய்துவந்த இளைஞனை அவன் அழைத்து, “இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று; அவள் சென்றதும் கதவைத் தாழிடு” என்று கூறினான்.
2 சாமுவேல் 13 : 18 (ECTA)
பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.
2 சாமுவேல் 13 : 19 (ECTA)
தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினாள்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலைமீது கைவைத்து அழுதுகொண்டே சென்றாள்.
2 சாமுவேல் 13 : 20 (ECTA)
அப்பொழுது, அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம், “இதை உனக்குச் செய்தது அம்னோனா? என் சகோதரி! இப்போது நீ அமைதியாய் இரு. அவன் உன் சகோதரன்! இதை மனதில் வைக்காதே” என்று கூறினான். தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் ஆறுதலின்றி வாழ்ந்தாள்.
2 சாமுவேல் 13 : 21 (ECTA)
நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.
2 சாமுவேல் 13 : 22 (ECTA)
அப்சலோம் அம்னோனுடன் நல்லதோ தீயதோ ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில், தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்காக அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.
2 சாமுவேல் 13 : 23 (ECTA)
அப்சலோம் பழி தீர்த்தல் ஈராண்டுகள் கழிந்தபிறகு அப்சலோம் எப்ராயின் அருகே பாகால் ஆட்சோரில் ஆடுகளுக்கு முடிகத்தரித்தான். அப்போது அப்சலோம் இளவரசர் அனைவரையும் அழைத்திருந்தான்.
2 சாமுவேல் 13 : 24 (ECTA)
அப்சலோம் அரசரிடம் வந்து, “இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிகத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள்” என்றான்.
2 சாமுவேல் 13 : 25 (ECTA)
அரசர் அப்சலோமிடம், ‘என் மகன் அப்சலோம்! வேண்டாம், நாம் அனைவரும் செல்ல வேண்டாம். உனக்கு நாங்கள் சுமையாக இருக்க வேண்டாம்” என்று கூறினார். அவன் அவரை வலியுறுத்தியும் அவர் செல்ல விரும்பாமல், அவனுக்கு ஆசியளித்தார்.
2 சாமுவேல் 13 : 26 (ECTA)
பின் அப்சலோம், “இல்லாவிடில் என் சகோதரன் அம்னோன் எங்களோடு செல்லட்டும்” என்று கேட்க, அரசர், “அவன் உன்னோடு ஏன் செல்ல வேண்டும்?” என்று அவனிடம் வினவினார்.
2 சாமுவேல் 13 : 27 (ECTA)
அவன் அவரை வற்புறுத்தியதால் அம்னோனையும் இளவரசர் அனைவரையும் அவனோடு அரசர் அனுப்பி வைத்தார்.
2 சாமுவேல் 13 : 28 (ECTA)
அப்சலோம் தம் பணியாளரிடம், “அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்; ‘அம்னோனைத் தாக்குங்கள்’ என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்” என்று கூறினான்.
2 சாமுவேல் 13 : 29 (ECTA)
அப்சலோமின் பணியாளர் அவன் கட்டளையிட்டவாறே அம்னோனுக்குச் செய்தார்கள். இளவரசர் அனைவரும் அவரவர் தம் கழுதைகளில் ஏறித் தப்பி ஓடினர்.
2 சாமுவேல் 13 : 30 (ECTA)
அவர்கள் திரும்பிச் செல்கையில் அப்சலோம் இளவரசர் அனைவரையும் கொன்றதாகவும் அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை என்றும் தாவீதுக்குச் செய்தி கிடைத்தது.
2 சாமுவேல் 13 : 31 (ECTA)
அரசர் எழுந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்றுகொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.
2 சாமுவேல் 13 : 32 (ECTA)
தாவீதின் சகோதரன் சிமயாவின் மகன் யோனதாபு, “உம் புதல்வர்களாகிய இளவரசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்கள் என்று என் தலைவர் நினைக்க வேண்டாம். ஏனெனில், அம்னோன் மட்டுமே இறந்துள்ளான். தன் சகோதரி தாமார் கற்பழிக்கப்பட்ட நாளிலிருந்து அப்சலோம் தன் எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான்.
2 சாமுவேல் 13 : 33 (ECTA)
ஆகவே, என் தலைவராம் அரசர், இளவரசர் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில், அம்னோன் மட்டுமே இறந்துள்ளான்” என்று கூறினான்.
2 சாமுவேல் 13 : 34 (ECTA)
இதற்கிடையில் அப்சலோம் ஓட்டம் பிடித்தான். அப்போது அரண்மனைக் காவலன் தன் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது, இதோ, திரளான மக்கள் மலையோரமாகப் பின்னால் இருந்த சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.
2 சாமுவேல் 13 : 35 (ECTA)
அப்போது யோனதாபு அரசரிடம், “பாருங்கள், இளவரசர் வந்துவிட்டனர்; நான் சொன்னது போலவே நிகழ்ந்துவிட்டது” என்றான்.
2 சாமுவேல் 13 : 36 (ECTA)
அவன் பேசி முடிக்கும்போது இளவரசரும் வந்து, ஓலமிட்டு அழுதனர். அரசரும் பணியாளர் அனைவரும் வெகுவாய்ப் புலம்பி அழுதனர்.
2 சாமுவேல் 13 : 37 (ECTA)
தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார். * 2 சாமு 3:3..
2 சாமுவேல் 13 : 38 (ECTA)
கெசூருக்குத் தப்பி ஓடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.
2 சாமுவேல் 13 : 39 (ECTA)
அம்னோனின் மறைவு பற்றிய கவலை நீங்கியபின், அரசர் தாவீது அப்சலோமைக் காணும் ஏக்கத்தில் இருந்தார்.
❮
❯