2 சாமுவேல் 1 : 1 (ECTA)
சவுலின் இறப்பைத் தாவீது அறிதல் சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார்.
2 சாமுவேல் 1 : 2 (ECTA)
மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
2 சாமுவேல் 1 : 3 (ECTA)
“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான்.
2 சாமுவேல் 1 : 4 (ECTA)
“என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான்.
2 சாமுவேல் 1 : 5 (ECTA)
“சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்?” என்று தன்னிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.
2 சாமுவேல் 1 : 6 (ECTA)
அதற்கு அந்த இளைஞன், “நான் தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1- 6 ]
2 சாமுவேல் 1 : 7 (ECTA)
அவர் தம் பின்னால் திரும்பிய போது என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். ‘இதோ இருக்கிறேன்’ என்று நான் கூறினேன். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1- 6 ]
2 சாமுவேல் 1 : 8 (ECTA)
‘யார் நீ?’ என்று அவர் என்னை வினவ, ‘நான் ஓர் அமலேக்கியன்’ என்று பதிலளித்தேன். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1- 6 ]
2 சாமுவேல் 1 : 9 (ECTA)
‘என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில், மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால், என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் என்னிடம் கூறினார். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1- 6 ]
2 சாமுவேல் 1 : 10 (ECTA)
நான் அவர்மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில், விழுந்தபின்பு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என நான் அறிவேன். அவரது தலையில் இருந்த மகுடத்தையும் கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, என் தலைவராகிய உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறினார். [* 1 சாமு 31:1-6; 1 குறி 10:1- 6 ]
2 சாமுவேல் 1 : 11 (ECTA)
தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.
2 சாமுவேல் 1 : 12 (ECTA)
சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத்தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.
2 சாமுவேல் 1 : 13 (ECTA)
தாவீது தமக்குச் செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று மீண்டும் வினவ, “நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்” என்று மறுமொழி கூறினான்.
2 சாமுவேல் 1 : 14 (ECTA)
“ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்?” என்று தாவீது அவனைக் கேட்டார்.
2 சாமுவேல் 1 : 15 (ECTA)
பின்பு, தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டு” என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.
2 சாமுவேல் 1 : 16 (ECTA)
“உன் இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என்று உன் வாயே உனக்கு எதிராகச் சான்று சொல்லிவிட்டது” என்று தாவீது அவனை நோக்கிக் கூறினார்.
2 சாமுவேல் 1 : 17 (ECTA)
சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம் பிறகு, தாவீது சவுலையும் அவருடைய மகன் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று பாடினார்.
2 சாமுவேல் 1 : 18 (ECTA)
“யூதாவின் மக்களுக்கும் இது கற்பிக்கப்பட வேண்டும் என்று யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள ‘வில்லின் பாடல்’: [* யோசு 10:13.. ]
2 சாமுவேல் 1 : 19 (ECTA)
‘இஸ்ரயேல்! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கின்றது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!
2 சாமுவேல் 1 : 20 (ECTA)
காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்; அஸ்கலோன் வீதிகளில் இதை அறிவிக்க வேண்டாம்; ஏனெனில், பெலிஸ்தியரின் புதல்வியர் அகமகிழக்கூடாது; விருத்தசேதனமற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக் கூடாது.
2 சாமுவேல் 1 : 21 (ECTA)
கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக! வயல்கள் முதற்கனிகளைத் தராதிருப்பனவாக! ஏனெனில், வீரர்களின் கேடயங்கள் தீட்டுப்பட்டனவே! சவுலின் கேடயமும் எண்ணெயால் இனி மெருகு பெறாதே!
2 சாமுவேல் 1 : 22 (ECTA)
வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின்வாங்கியது இல்லை! சவுலின் வாள் வெறுமையாய்த் திரும்பியதும் இல்லை!
2 சாமுவேல் 1 : 23 (ECTA)
சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!
2 சாமுவேல் 1 : 24 (ECTA)
இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!
2 சாமுவேல் 1 : 25 (ECTA)
போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!
2 சாமுவேல் 1 : 26 (ECTA)
சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!
2 சாமுவேல் 1 : 27 (ECTA)
மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழிந்தன!”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27