2 பேதுரு 3 : 1 (ECTA)
4.ஆண்டவருடைய வருகை அன்பார்ந்தவர்களே, இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுவது இரண்டாம் திருமுகம். இத்திருமுகங்கள் வழியாக ஒருசிலவற்றை நினைவுறுத்தி, உங்கள் நேர்மையான மனத்தைத் தூண்டி எழுப்புகிறேன்.
2 பேதுரு 3 : 2 (ECTA)
தூய இறைவாக்கினர்கள் முன்னுரைத்த வாக்குகளையும் ஆண்டவரும் மீட்பருமானவர் உங்கள் திருத்தூதர் மூலமாகத் தந்த கட்டளையையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
2 பேதுரு 3 : 3 (ECTA)
நீங்கள் முதலாவது தெரிந்துகொள்ளவேண்டியது இதுவே: இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை எள்ளிநகையாடுவர். [* யூதா 18 ]
2 பேதுரு 3 : 4 (ECTA)
அவர்கள், “அவரது வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர்; ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கிறதே” என்று சொல்லுவார்கள்.
2 பேதுரு 3 : 5 (ECTA)
பழங்காலத்திலிருந்தே கடவுளுடைய வார்த்தையால் விண்ணுலகும் மண்ணுலகும் தோன்றின. மண்ணுலகம் நீரிலிருந்தும் நீராலும் நிலைபெற்றிருந்தது என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்.
2 பேதுரு 3 : 6 (ECTA)
அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால் அப்போதிருந்த உலகம் அழிவுற்றது.
2 பேதுரு 3 : 7 (ECTA)
இப்போதுள்ள விண்ணுலகும் மண்ணுலகும் அதே வார்த்தையினாலே தீக்கிரையாவதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இறைப்பற்றில்லாதோர் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாள் வரையிலும் அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.
2 பேதுரு 3 : 8 (ECTA)
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.
2 பேதுரு 3 : 9 (ECTA)
ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.
2 பேதுரு 3 : 10 (ECTA)
ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். <b> /b> ‘தீக்கிரையாகும்’ என்னும் சொல் பல முக்கிய பாடங்களில் ‘வெளியாக்கப்படும்’ எனக் காணப்படுகிறது..
2 பேதுரு 3 : 11 (ECTA)
இவை யாவும் அழிந்துபோகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்!
2 பேதுரு 3 : 12 (ECTA)
கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்.
2 பேதுரு 3 : 13 (ECTA)
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
2 பேதுரு 3 : 14 (ECTA)
ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.
2 பேதுரு 3 : 15 (ECTA)
நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள். நம் அன்பார்ந்த சகோதரர் பவுலும் தமக்கு அருளப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறுதான் உங்களுக்கு எழுதியுள்ளார்.
2 பேதுரு 3 : 16 (ECTA)
தம்முடை திருமுகங்களில் இவை பற்றிப் பேசும் போதெல்லாம் இவ்வாறே அவர் சொல்லுகிறார். அவருடைய திருமுகங்களில் புரிந்துகொள்வதற்குக் கடினமானவை சில உண்டு. கல்வி அறிவில்லாதவர்களும் உறுதியற்றவர்களும் மறைநூலின் மற்றப் பகுதிகளுக்குப் பொருள் திரித்துக் கூறுவதுபோல் இவற்றுக்கும் கூறுகின்றனர்; அதனால் தங்களுக்கே அழிவை வருவித்துக் கொள்கின்றனர்.
2 பேதுரு 3 : 17 (ECTA)
அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள்.
2 பேதுரு 3 : 18 (ECTA)
நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18