2 பேதுரு 2 : 1 (ECTA)
3.போலி இறைவாக்கினர்களும் போலிப் போதகர்களும் முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்; தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்; விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள்.
2 பேதுரு 2 : 2 (ECTA)
அவர்களுடைய காமவெறியைப் பலர் பின்பற்றுவார்கள். அவர்களால் உண்மை நெறி பழிப்புக்குள்ளாகும்.
2 பேதுரு 2 : 3 (ECTA)
பேராசை கொண்ட அவர்கள் கட்டுக் கதைகளைச் சொல்லி உங்கள் பணத்தைச் சுரண்டுவர். பழங்காலத்திலிருந்தே அவர்களுக்குத் தண்டனை தயாராய் உள்ளது. அழிவு அவர்களுக்காக விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
2 பேதுரு 2 : 4 (ECTA)
பாவம் செய்த வான தூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை. விலங்கிட்டுக் காரிருள் நகரில் தள்ளித் தீர்ப்புக்காக அவர்களை அவர் அடைத்து வைத்திருக்கிறார்.
2 பேதுரு 2 : 5 (ECTA)
பண்டைய உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை; நீதியைப் பற்றி அறிவித்து வந்த நோவா உள்பட எட்டுப் பேரைக் காப்பாற்றினார்; இறைப்பற்றில்லாத உலகின்மீது அவர் வெள்ளப் பெருக்கை வருவித்தார்; [* தொநூ 6:1-7: 24 ]
2 பேதுரு 2 : 6 (ECTA)
சோதோம், கொமோரா என்னும் நகரங்களையும் தண்டித்தார்; இறைப்பற்றில்லாதோரின் அழிவு எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவற்றை எரித்துச் சாம்பலாக்கினார்; [* தொநூ 19: 24 ]
2 பேதுரு 2 : 7 (ECTA)
கட்டுப்பாடற்றுக் காமவெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்திய நேர்மையான லோத்தை விடுவித்தார். [* தொநூ 19:1- 16 ]
2 பேதுரு 2 : 8 (ECTA)
அந்த நேர்மையான மனிதர் அவர்களிடையே வாழ்ந்தபோது நாள்தோறும் அவர் கண்ட, கேட்ட ஒழுங்குமீறிய செயல்கள் அவருடைய நேர்மையான உள்ளத்தை வேதனையுறச் செய்தன.
2 பேதுரு 2 : 9 (ECTA)
இறைப்பற்று உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்கவும் நேர்மையற்றவர்களைத் தண்டனைக்குள்ளாக்கி இறுதித் தீர்ப்பு நாள்வரை வைத்திருக்கவும் ஆண்டவருக்குத் தெரியும்.
2 பேதுரு 2 : 10 (ECTA)
குறிப்பாக, கெட்ட இச்சைகள் கொண்டு ஊனியல்பின்படி நடப்பவர்களையும் அதிகாரத்தைப் புறக்கணிப்பவர்களையும் அவர் தண்டிப்பார். இவர்கள் துணிச்சலுள்ளவர்கள், அகந்தையுள்ளவர்கள்; மேன்மை பொருந்தியவர்களைப் பழித்துரைக்க அஞ்சாதவர்கள்.
2 பேதுரு 2 : 11 (ECTA)
இவர்களைவிட மிகுதியான ஆற்றலும் வல்லமையும் கொண்டுள்ள வானதூதர்கள்கூட அவர்களை ஆண்டவர் முன்னிலையில் பழித்துரைத்துக் கண்டனம் செய்வதில்லை.
2 பேதுரு 2 : 12 (ECTA)
ஆனால், இவர்கள் பிடிபடவும் கொல்லப்படவுமே தோன்றிய, இயல்புணர்ச்சியினால் உந்தப்படும் பகுத்தறிவற்ற விலங்குகளைப் போன்றவர்கள்; தாங்கள் அறியாதவற்றைப் பழிக்கிறார்கள்; அவ்விலங்குகள் அழிவுறுவதுபோலவே இவர்களும் அழிவார்கள்;
2 பேதுரு 2 : 13 (ECTA)
தாங்கள் இழைத்த தீவினைக்குக் கைம்மாறாகத் தீவினையே அடைவார்கள்; பட்டப் பகலில் களியாட்டத்தில் ஈடுபடுவதே இன்பம் எனக் கருதுகிறார்கள். உங்களோடு விருந்துண்ணும் இவர்கள் தங்கள் ஏமாற்று வழிகளில் களிப்படைகிறார்கள். உங்களை மாசுபடுத்திக் கறைப்படுத்துகிறார்கள்.
2 பேதுரு 2 : 14 (ECTA)
இவர்களது கண்கள் கற்புநெறியிழந்த பெண்களையே நாடுகின்றன; பாவத்தை விட்டு ஓய்வதேயில்லை. இவர்கள் மனவுறுதி அற்றவர்களை மயக்கித் தம்வயப்படுத்துகிறார்கள். பேராசையில் ஊறிய உள்ளம் கொண்ட இவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள்.
2 பேதுரு 2 : 15 (ECTA)
இவர்கள் நேரிய வழியை விட்டகன்று அலைந்து திரிந்தார்கள்; பெயோரின் மகன் பிலயாமின்* வழியைப் பின்பற்றினார்கள். அந்தப் பிலயாம் கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பினார். [* எண் 22:4- 35 ; கிரேக்கத்தில் ‘பொசோரின் மகன் பாலாம்’ என்றுள்ளது.. ]
2 பேதுரு 2 : 16 (ECTA)
அவர் தம் ஒழுங்குமீறிய செயலுக்காகக் கடிந்து கொள்ளப்பட்டார். பேச இயலாத கழுதை மனிதமுறையில் பேசி அந்த இறைவாக்கினரின் மதிகெட்ட செயலைத் தடுத்தது. [* எண் 22:4- 35 ]
2 பேதுரு 2 : 17 (ECTA)
இவர்கள் நீரற்ற ஊற்றுகள்; புயலால் அடித்துச் செல்லப்படும் மேகங்கள். காரிருளே இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2 பேதுரு 2 : 18 (ECTA)
நெறிதவறி நடப்போரிடமிருந்து இப்போதுதான் தப்பியவர்களை, இவர்கள் வரம்புமீறிப் பெருமையடித்து வீண்பேச்சுப் பேசி, ஊனியல்பின் இச்சைகளாலும், காமவெறியாலும் மயக்கி வயப்படுத்துகின்றனர்;
2 பேதுரு 2 : 19 (ECTA)
அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக வாக்களிக்கின்றனர்; ஆனால், தாங்களே அழிவுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். ஏனெனில், ஒவ்வொருவரும் தம்மை ஆட்கொண்டிருப்பவற்றிற்கு அடிமைகளாய் இருக்கிறார்கள்.
2 பேதுரு 2 : 20 (ECTA)
நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள் மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னைய நிலை முன்னையை நிலையைவிடக் கேடுள்ளதாயிருக்கும்.
2 பேதுரு 2 : 21 (ECTA)
அவர்கள் நீதிநெறியை அறிந்தபின் தங்களுக்கு அருளப்பட்ட தூய கட்டளையைக் கடைப்பிடியாமல் விட்டு விலகுவதைவிட, அதை அறியாமலே இருந்திருந்தால், நலமாயிருக்கும்.
2 பேதுரு 2 : 22 (ECTA)
“நாய் தான் கக்கினதைத் தின்னத்
திரும்பி வரும்”
என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும். மேலும், “பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும்” என்பதும் ஒரு நீதிமொழி. [* நீமொ 26: 11 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22