2 இராஜாக்கள் 9 : 1 (ECTA)
ஏகூ அரசனாதல் அப்பொழுது இறைவாக்கினர் எலிசா இறைவாக்கினரின் குழுவைச் சார்ந்த ஒருவனை அழைத்து, “உன் இடையை வரிந்துகட்டி உன் கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இராமோத்து கிலயாதுக்குச் செல்.
2 இராஜாக்கள் 9 : 2 (ECTA)
அங்குச் சென்றதும் நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூவைத் தேடிக் கண்டுபிடி. அவனை அணுகி, அவனுடைய தோழர்களினின்று அவனைத் தனியே கூப்பிட்டு ஓர் உள்ளறைக்கு அழைத்துச் செல்.
2 இராஜாக்கள் 9 : 3 (ECTA)
அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனை நோக்கி, ‘ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்’ என்று சொல்லி, அவன் மேல் எண்ணெய் வார்ப்பாய். அங்கே நில்லாது கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்துவிடு” என்றார்.
2 இராஜாக்கள் 9 : 4 (ECTA)
அவ்வாறே, இறைவாக்கினனான அவ்விளைஞன் இராமோத்து கிலயாதுக்குச் சென்றான்.
2 இராஜாக்கள் 9 : 5 (ECTA)
அவன் அங்கு வந்ததும் படைத்தலைவர்கள் அமர்ந்திருந்ததைக் கண்டான். அவன் “தளபதியே! உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்” என்றான். அதற்கு ஏகூ, “எங்களுள் யாரிடம்?” என்று கேட்டான். அதற்கு அவன், “தளபதியே! உம்மிடம்தான்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 6 (ECTA)
எனவே, ஏகூ எழுந்து மாளிகைக்குள் சென்றான். இளைஞனோ அவனது தலையின்மேல் எண்ணெய் வார்த்து, இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: ‘ஆண்டவராகிய நான் என் மக்களாகிய இஸ்ரயேலுக்கு அரசனாக உன்னைத் திருப்பொழிவு செய்கிறேன். [* 1 அர 19: 16 ]
2 இராஜாக்கள் 9 : 7 (ECTA)
உன் தலைவன் ஆகாபின் குடும்பத்தை நீ அழிக்க வேண்டும். இங்ஙனம், ஈசபேலால் சிந்தப்பட்ட என் ஊழியரான இறைவாக்கினரின் இரத்தத்திற்கும் ஆண்டவராகிய என் எல்லா அடியவர்களின் இரத்ததிற்கும் நான் பழிவாங்குவேன்.
2 இராஜாக்கள் 9 : 8 (ECTA)
இவ்வாறு, ஆகாபின் குடும்பம் முழுவதும் அழியும். இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் அனைவரையும், அடிமைகளாயினும் உரிமை மக்களாயினும், வெட்டி வீழ்த்துவேன்.
2 இராஜாக்கள் 9 : 9 (ECTA)
இந்த ஆகாபின் குடும்பத்தை நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்தைப் போலும், அகியாவின் மகன் பாசாவின் குடும்பத்தைப் போலும் ஒழித்துக் கட்டுவேன்.
2 இராஜாக்கள் 9 : 10 (ECTA)
இஸ்ரயேல் நிலப்பகுதியில் ஈசபேலை நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க யாரும் வரமாட்டாக்கள்” என்று கூறி கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டான். [* 1 அர 21: 23 ]
2 இராஜாக்கள் 9 : 11 (ECTA)
பின்பு, ஏகூ தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனை நோக்கி, “நல்ல செய்திதானா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தது ஏன்?” என்று கேட்டனர். அதற்கு அவன், “அவன் யாரென்றும் அவன் சொன்னது என்னவென்றும் உங்களுக்குத் தெரியுமே!” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 12 (ECTA)
அதற்கு அவர்கள், “அது பொய்! உண்மையை எங்களுக்குத் தெரிவி” என்றனர். அப்போது ஏகூ, “அவன் என்னிடம் ‘ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்’ என்றான்” என்று பதிலளித்தான்.
2 இராஜாக்கள் 9 : 13 (ECTA)
இதைக் கேட்டவுடன் அவர்கள் அனைவரும் விரைந்து தம் போர்வையைக் கழற்றி அவற்றை வெறுமையாய் இருந்த படிகளில் விரித்து எக்காளம் ஊதி, “ஏகூவே அரசர்!” என்று முழங்கினர்.
2 இராஜாக்கள் 9 : 14 (ECTA)
இஸ்ரயேல் அரசன் யோராம் கொலை செய்யப்படல் நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். அப்பொழுது யோராம் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராக இஸ்ரயேலின் எல்லாப் படைகளோடும் இராமோத்து கிலயாதை முற்றுகையிட்டிருந்தான்.
2 இராஜாக்கள் 9 : 15 (ECTA)
ஆனால், சிரியாவின் மன்னன் அசாவேலோடு போரிடுகையில், சிரியரால் பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக அரசன் யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்திருந்தான். ஏகூ, “இதை நீங்கள் மனமார விரும்பினால், இஸ்ரயேலுக்குப் போய் யாரும் செய்தியைப் பரப்பாதபடி, இந்நகரினின்று எவரையும் தப்பி வெளியேற விடாதீர்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 16 (ECTA)
பிறகு, அவன் தேரின்மீது ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான். ஏனெனில், அங்கே யோராம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். இச்சமயம் யூதாவின் அரசன் அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.
2 இராஜாக்கள் 9 : 17 (ECTA)
இஸ்ரயேலின் காவல்மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன், ஏகூ படையோடு வருவதைக் கண்டு, “படையொன்றைக் காண்கிறேன்” என்றான். அதற்கு யோராம், “ஒரு குதிரை வீரனைத் தயார் செய். அவனை அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பு. ‘அமைதிக்காவா?’ என்று அவன் கேட்கட்டும்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 18 (ECTA)
அவ்வாறு, குதிரை வீரன் ஒருவன் ஏகூவைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்று, “‘அமைதிக்காகவா?’ என்று அரசர் கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு ஏகூ, “சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா” என்றான். அப்பொழுது காவலன், “தூதன் அவர்களைச் சென்றடைந்தான். ஆனால், இன்னும் திரும்பி வரவில்லை” என்று அறிவித்தான்.
2 இராஜாக்கள் 9 : 19 (ECTA)
அரசன் மற்றொரு குதிரை வீரனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, “‘அமைதிக்காகவா?’ என்று அரசர் கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு ஏகூ, “சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 20 (ECTA)
காவலன் மீண்டும் “அவன் அவர்களைச் சென்றடைந்துவிட்டான். ஆனால், அவனும் இன்னும் திரும்பி வரவில்லை. வேறெவனோ தேரோட்டிக் கொண்டு வருகிறான். அது நிம்சியின் மகன் ஏகூவைப்போன்று உள்ளது. அவன்தான் பைத்தியக்காரன் போல் ஓட்டுவான்!” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 21 (ECTA)
உடனே யோராம், “தேரைப் பூட்டுங்கள்” என்று கூற, அவர்கள் அவனது தேரில் குதிரைகளைப் பூட்டினார்கள். இஸ்ரயேலின் அரசன் யோராமும் யூதாவின் அரசன் அகசியாவும் தம் தேரில் ஏறி ஏகூவைச் சந்திக்கச் சென்றனர்; அவனை இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் சந்தித்தனர்.
2 இராஜாக்கள் 9 : 22 (ECTA)
யோராம் ஏகூவைக் கண்டு, “ஏகூ! அமைதிக்காகவா வருகிறீர்?” என்று கேட்டான். அதற்கு அவன், “உன் தாய் ஈசபேலின் வேசித்தனமும் மாய வித்தைகளும் மிகுந்திருக்கும் வரை அமைதி எப்படி இருக்க முடியும்?" என்று மறுமொழி கூறினான்.
2 இராஜாக்கள் 9 : 23 (ECTA)
உடனே யோராம் கைகளால் கடிவாளத்தை இழுத்து, அகசியாவை நோக்கி, “அகசியா! சதி!” என்று சொல்லிக்கொண்டு தப்பி ஓட முயன்றான்.
2 இராஜாக்கள் 9 : 24 (ECTA)
உடனே ஏகூ தன் வலிமையோடு வில்லை வளைத்து யோராமின் புயங்கள் நடுவே அம்பினை எய்தான். அந்த அம்பு அவன் இதயத்தை ஊடுருவிச் செல்ல, அவன் தேரிலேயே சரிந்து விழுந்தான்.
2 இராஜாக்கள் 9 : 25 (ECTA)
ஏகூ குதிரைப்படைத் தலைவன் பித்காரை நோக்கி, “அவனைத் தூக்கி இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் எறிந்துவிடு. ஏனெனில், நாம் இருவரும் சேர்ந்து அவனுடைய தந்தை ஆகாபைத் தொடர்ந்து சென்றபோது அவனுக்கு எதிராக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
2 இராஜாக்கள் 9 : 26 (ECTA)
‘நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் பிள்ளைகளின் இரத்தத்தையும் கண்டேன். நான் கண்டதற்காக நாபோத்தின் இந்த நிலத்திலேயே உன்னைப் பழிவாங்குவது உறுதி’ என்கிறார் ஆண்டவர். எனவே, இப்பொழுது அவனைத் தூக்கி ஆண்டவரின் வாக்கிற்கிணங்க அந்த நிலப்பகுதியில் எறிந்துவிடு” என்றான். [* 1 அர 21: 19 ]
2 இராஜாக்கள் 9 : 27 (ECTA)
யூதா அரசன் அகசியா கொலை செய்யப்படல் யூதாவின் அரசன் அகசியா இதைக் கண்டு பெத்தகான் சாலையில் தப்பி ஓடலானான். ஏகூ அவனைப் பின்தொடர்ந்து சென்று தன் ஆள்களிடம், “இவனையும் வெட்டி வீழ்த்துங்கள்” என்றான். அவர்களும் இபிலயாம் அருகே இருந்த கூர் மலைச்சரிவில் தேரிலிருந்த அவனைக் காயப்படுத்தினார்கள். அவனோ மெகிதோ வரை சென்று அங்கு இறந்தான்.
2 இராஜாக்கள் 9 : 28 (ECTA)
அவனுடைய அலுவலர் அவனது சடலத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று, தாவீதின் நகரில் அவனுடைய மூதாதையருடன் அவனது கல்லறையில் அடக்கம் செய்தனர்.
2 இராஜாக்கள் 9 : 29 (ECTA)
இதற்கிடையில் ஆகாபின் மகனான யோராம் ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டில் அகசியா யூதாவின் அரசனானான்.
2 இராஜாக்கள் 9 : 30 (ECTA)
ஈசபேல் கொலை செய்யப்படல் ஏகூ இஸ்ரயேலுக்கு வந்து சேர்ந்ததைக் கேள்வியுற்ற ஈசபேல் தன் கண்களுக்கு மையிட்டு தன் தலைமுடியை அழகுபடுத்திக் கொண்டு பலகணி வழியாக எட்டிப் பார்த்தாள்.
2 இராஜாக்கள் 9 : 31 (ECTA)
ஏகூ நகர வாயிலில் நுழைந்த போது அவள், “உன் தலைவனைக் கொலை செய்து, சிம்ரிக்கு நிகர் ஆனவனே! சமாதான நோக்கோடுதான் வருகிறாயா?” என்று கேட்டாள்.
2 இராஜாக்கள் 9 : 32 (ECTA)
அவன் முகத்தை உயர்த்தி பலகணியைப் பார்த்து, “என் சார்பாக இருப்பது யார்? யார்?” என்றான். உடனே இரண்டு, மூன்று அண்ணகர் குனிந்து அவனைப் பார்த்தனர்.
2 இராஜாக்கள் 9 : 33 (ECTA)
ஏகூ, “ அவளைக் கீழே தள்ளிவிடுங்கள்” என்றான். அவ்வாறே, அவர்களும் அவளைத் தள்ளிவிட்டனர். அவளது இரத்தம் மதிற்சுவரிலும் குதிரைகள் மீதும் சிதறியது. மேலும், அக்குதிரைகள் அவளைக் காலால் மிதித்துக் கொன்றன.
2 இராஜாக்கள் 9 : 34 (ECTA)
அவன் உள்ளே சென்று உண்டு குடித்தபின், “நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்டவளைத் தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசன் மகள்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 35 (ECTA)
அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்றபோது அவளுடைய மண்டைஓடு, கால்கள், உள்ளங்கைகள் தவிர வேறொன்றையும் அவர்கள் காணவில்லை.
2 இராஜாக்கள் 9 : 36 (ECTA)
எனவே, அவர்கள் திரும்பி வந்து அதை அவனுக்கு அறிவித்தனர். அப்பொழுது அவன், “திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே; * 1 அர 21:23..
2 இராஜாக்கள் 9 : 37 (ECTA)
இஸ்ரியேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும். ஈசபேலின் பிணம் இஸ்ரியேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே ‘இதுதான் ஈசபேல்’ என்று கூற முடியாது” என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37