2 இராஜாக்கள் 8 : 1 (ECTA)
சூனேம் பெண் மீண்டும் வரல் எலிசா தாம் உயிர்ப்பித்துக் கொடுத்த சிறுவனின் தாயான பெண்ணை நோக்கி, “நீயும் உன் குடும்பத்தினரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான வேறோர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், ஆண்டவர் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது நாட்டில் ஏழாண்டுகள் நிலைத்திருக்கும்” என்றார். [* 2 அர 4:8- 37 ]
2 இராஜாக்கள் 8 : 2 (ECTA)
எனவே, அப்பெண் எழுந்து கடவுளின் அடியவர் வாக்கின்படி செய்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் புறப்பட்டுப் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று அங்கு ஏழாண்டுகள் தங்கியிருந்தனர்.
2 இராஜாக்கள் 8 : 3 (ECTA)
ஏழாண்டுகள் கடந்தபின் அந்தப் பெண் பெலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தம் வீடும் நிலங்களும் தமக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிடச் சென்றார்.
2 இராஜாக்கள் 8 : 4 (ECTA)
அப்பொழுது அரசனும் கடவுளின் அடியவர்க்குப் பணிவிடை செய்து வந்த கேகசியிடம், “எலிசா புரிந்துள்ள அரும்பெரும் செயல்களையெல்லாம் எனக்குச் சொல்லும்” என்று கேட்டு உரையாடிக் கொண்டிருந்தான்.
2 இராஜாக்கள் 8 : 5 (ECTA)
அவனும் இறந்தவனை எலிசா உயிர்ப்பித்துக் கொடுத்த நிகழ்ச்சியை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தான். உயிர்ப்பிக்கப்பட்ட அதே சிறுவனின் தாய் அப்பொழுது அரசன்முன் வந்து, தம் வீட்டையும் நிலங்களையும் முன்னிட்டு அரசனிடம் முறையிட்டார். அப்பொழுது கேகசி, “அரசே! என் தலைவரே! இவள்தான் அந்தப் பெண். இவள் மகனாகிய இவனைத்தான் எலிசா உயிர்ப்பித்தார்” என்றான்.
2 இராஜாக்கள் 8 : 6 (ECTA)
அரசன் அந்தப் பெண்ணிடம் அதைப்பற்றி வினவ, அவரும் நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார். அப்பொழுது அரசன் ஓர் அலுவலனை அழைத்து, “அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திருப்பிக் கொடுத்து விடு. மேலும், அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள்முதல் இன்றுவரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டான்.
2 இராஜாக்கள் 8 : 7 (ECTA)
எலிசாவும் சிரியா மன்னனும் எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். ‘கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்’ என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
2 இராஜாக்கள் 8 : 8 (ECTA)
அந்த மன்னன் அசாவேலிடம், “கையோடு ஓர் அன்பளிப்பு எடுத்துக் கொண்டு கடவுளின் அடியவரைச் சந்திக்கச் செல். ‘நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?’ என்று அவர் மூலம் ஆண்டவரிடம் கேட்டறிந்து வா” என்றான்.
2 இராஜாக்கள் 8 : 9 (ECTA)
எனவே, அவன் தமஸ்குவில் கிடைக்கக்கூடிய எல்லா விதமான அரும்பொருள்களையும் நாற்பது ஒட்டகச் சுமையளவு கையோடு அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு சென்றான். அவர் முன் வந்து நின்று அவன் அவரை நோக்கி, “நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா? என்று கேட்குமாறு சிரியாவின் மன்னனும் உம் புதல்வனுமான பெனதாது உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார்” என்றான்.
2 இராஜாக்கள் 8 : 10 (ECTA)
எலிசா மறுமொழியாக, “நீ போய், ‘நீர் நலமடைவது உறுதி’ என்று சொல்; ஆனால், ‘அவன் செத்துப்போவது திண்ணம்’ என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்” என்றார்.
2 இராஜாக்கள் 8 : 11 (ECTA)
பிறகு, கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.
2 இராஜாக்கள் 8 : 12 (ECTA)
அசாவேல் அவரை நோக்கி, “என் தலைவரே, நீர் அழுவது ஏன்?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்; அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்; அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்; அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்; அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய்” என்றார்.
2 இராஜாக்கள் 8 : 13 (ECTA)
அசாவேல் அவரை நோக்கி, “நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா?” என்றான். அதற்கு எலிசா, “நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்” என்றார். [* 1 அர 19: 15 ]
2 இராஜாக்கள் 8 : 14 (ECTA)
அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்” என்று கேட்டான். அதற்கு அசாவேல், “நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார்” என்றார்.
2 இராஜாக்கள் 8 : 15 (ECTA)
மறுநாள் அசாவேல் ஒரு போர்வையை எடுத்துத் தண்ணீரில் நனைத்து மன்னன் முகத்தை மூட, அவன் இறந்து போனான். அசாவேல் அவனுக்குப் பதிலாக அரசனானான்.
2 இராஜாக்கள் 8 : 16 (ECTA)
யூதா அரசன் யோராம்
(2 குறி 21:1-20)
இஸ்ரயேல் அரசன் ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனானான். * ‘யோராம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டில்’ என்பதற்கு ‘யோராம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டில் யோசபாத்து யூதாவில் அரசராகி இருக்கும்போது’ என்பது எபிரேய பாடம்..
2 இராஜாக்கள் 8 : 17 (ECTA)
அவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரசனாகி எட்டு ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி புரிந்தான்.
2 இராஜாக்கள் 8 : 18 (ECTA)
அவன் ஆகாபின் மகளை மணந்தவன்; ஆதலால் ,ஆகாபின் குடும்பத்தவரைப்போல இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தான்; ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
2 இராஜாக்கள் 8 : 19 (ECTA)
ஆயினும், ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு யூதாவை அழிக்க விரும்பவில்லை; ஏனெனில், அவர்தம் மைந்தராம் குல விளக்கை எந்நாளும் காப்பதாக அவருக்கு வாக்களித்திருந்தார். [* 1 அர 11: 36 ]
2 இராஜாக்கள் 8 : 20 (ECTA)
யோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தங்களுக்கென ஓர் அரசனை நியமித்துக் கொண்டனர். [* தொநூ 27: 40 ]
2 இராஜாக்கள் 8 : 21 (ECTA)
ஆனால், யோராம் சாயிருக்குத் தன் தேர்ப்படைகள் அனைத்தோடும் சென்றான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படை தலைவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அவன் இரவில் எழுந்து ஏதோமியரை வெட்டி வீழ்த்தினான். மக்கள் தம்தம் கூடாரத்திற்கு தப்பி ஓடினர்.
2 இராஜாக்கள் 8 : 22 (ECTA)
எனவே, இந்நாள் வரை ஏதோமியர் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அதே காலத்தில் லிப்னாவும் கிளர்ச்சி செய்தது.
2 இராஜாக்கள் 8 : 23 (ECTA)
யோராமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
2 இராஜாக்கள் 8 : 24 (ECTA)
யோராம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் அகசியா அரசனானான்.
2 இராஜாக்கள் 8 : 25 (ECTA)
யூதா அரசன் அகசியா
(2 குறி 22:1-6)
இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா அரசாளத் தொடங்கினான்.
2 இராஜாக்கள் 8 : 26 (ECTA)
தன் இருபத்திரண்டாம் வயதில் அரசனான அகசியா எருசலேமில் இருந்துகொண்டு ஓராண்டு ஆட்சி செலுத்தினான். இஸ்ரயேல் அரசன் ஓம்ரியின் பேத்தியான அத்தலியா என்பவளே அவன் தாய்.
2 இராஜாக்கள் 8 : 27 (ECTA)
அவன் ஆகாபு வீட்டு மருமகனாதலின், ஆகாபு குடும்பத்தவரைப் போல நடந்து, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்.
2 இராஜாக்கள் 8 : 28 (ECTA)
மேலும், சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராய்ப் போரிட ஆகாபின் மகன் யோராமுடன் இராமோத்து கிலயாதுக்குப் போனான். ஆனால், அங்குச் சிரியாப் படையினர் யோராமைத் தாக்கினர்.
2 இராஜாக்கள் 8 : 29 (ECTA)
சிரியாவின் மன்னன் அசாவேலுடன் இராமோத்தில் போரிடுகையில் சிரியரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்தான். அப்பொழுது யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா, ஆகாபின் மகனும் காயமுற்றிருந்தவனுமான யோராமை இஸ்ரயேலில் காணச் சென்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29