2 இராஜாக்கள் 21 : 1 (ECTA)
யூதா அரசன் மனாசே
(2 குறி 33:1-20) மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய்.
2 இராஜாக்கள் 21 : 2 (ECTA)
இஸ்ரயேலர் முன்னிருந்து ஆண்டவர் விரட்டிய வேற்றினத்தாரின் அருவருப்புகளை அவன் பின்பற்றி ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். [* எரே 15: 4 ]
2 இராஜாக்கள் 21 : 3 (ECTA)
அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்; இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்; வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான்.
2 இராஜாக்கள் 21 : 4 (ECTA)
‘எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்’ என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான். [* 2 சாமு 7: 13 ]
2 இராஜாக்கள் 21 : 5 (ECTA)
ஆண்டவரின் இல்லத்தின் இரு முற்றங்களிலும் வானத்துப் படைகளுக்கெல்லாம் அவன் பலிபீடங்களைக் கட்டினான்.
2 இராஜாக்கள் 21 : 6 (ECTA)
மேலும், அவன் தன் மகனை நெருப்பில் பலியாக்கினான்; குறி கேட்பதிலும் சகுனம் பார்ப்பதிலும் நம்பிக்கை கொண்டு குறி கூறுபவர்களோடும், சகுனம் பார்ப்பவர்களோடும் தொடர்பு கொண்டு ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து ஆண்டவருக்குச் சினமூட்டினான்.
2 இராஜாக்கள் 21 : 7 (ECTA)
மேலும், அவன் அசேராவின் செதுக்கிய சிலையை ஆண்டவரின் இல்லத்தில் நிறுவினான். இவ்விடத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் பின்வருமாறு கூறினார்: “இக்கோவிலிலும் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேமிலும், எனது பெயரை என்றென்றும் விளங்கச் செய்வேன். * 1 அர 9:3-5; 2 குறி 7:12-18..
2 இராஜாக்கள் 21 : 8 (ECTA)
நான் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்.” * 1 அர 9:3-5; 2 குறி 7:12-18..
2 இராஜாக்கள் 21 : 9 (ECTA)
ஆனால், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில், மனாசே அவர்களை வழி தவறி நடக்கச் செய்தான். இஸ்ரயேலர், தம் முன்னிலையில் ஆண்டவர் அழித்த வேற்றினத்தாரைவிட அதிகமாக, தீயன செய்தனர்.
2 இராஜாக்கள் 21 : 10 (ECTA)
ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:
2 இராஜாக்கள் 21 : 11 (ECTA)
“யூதாவின் அரசன் மனாசே அருவருப்பான வழக்கங்களில் ஈடுபட்டுத் தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்தவற்றைவிட மிகவும் தீயன செய்தான். சிலைகளை வழிபடச் செய்து யூதாவைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கினான்.
2 இராஜாக்கள் 21 : 12 (ECTA)
எனவே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ! நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும், கேட்கும் ஒவ்வொருவருடைய இரு காதுகளும் அதிரும் அளவுக்கு, கேடு வரச் செய்வேன்.
2 இராஜாக்கள் 21 : 13 (ECTA)
சமாரியாவுக்கு எதிராக நான் பிடித்த அளவுநூலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராக நான் பிடித்த தூக்குநூலையும் எருசலேமுக்கு எதிராகப் பிடிப்பேன். ஒருவர் உள்ளும் புறமும் தட்டினைத் துடைத்துத் தூய்மையாக்குவதுபோல நானும் எருசலேமைத் துடைத்துத் தூய்மையாக்குவேன்.
2 இராஜாக்கள் 21 : 14 (ECTA)
எனவே, எனது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரைக் கைவிட்டு, அவர்களின் பகைவரிடம் ஒப்புவிப்பேன். அப்போது அவர்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பர்.
2 இராஜாக்கள் 21 : 15 (ECTA)
ஏனெனில், அவர்களின் மூதாதையர் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் இன்றுவரை இடைவிடாமல் என் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து எனக்குச் சினமூட்டியுள்ளனர்.”
2 இராஜாக்கள் 21 : 16 (ECTA)
மனாசே, எருசலேமில் ஒருமுனை முதல் மறு முனைவரை நிரம்பும் படியாக, மிகுதியான மாசற்றவரின் குருதியைச் சிந்தினான். இவ்வாறு, அவன் பாவம் செய்ததோடு யூதா மக்களை ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ய வைத்துப் பாவத்துக்கு உள்ளாக்கினான்.
2 இராஜாக்கள் 21 : 17 (ECTA)
மனாசேயின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் அவன் செய்த பாவமும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
2 இராஜாக்கள் 21 : 18 (ECTA)
மனாசே தன் மூதாதையரோடு துயில்கொண்டு, ‘ஊசாப் பூங்கா’ என்ற அவனது அரண்மனைப் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் ஆமோன் அரசனானான்.
2 இராஜாக்கள் 21 : 19 (ECTA)
யூதா அரசன் ஆமோன்
(2 குறி 33:21-25) ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு, அவன் ஈராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். யோற்றுபாவைச் சார்ந்த ஆரூசின் மகள் மெசுல்லமேத்து என்பவளே அவன் தாய்.
2 இராஜாக்கள் 21 : 20 (ECTA)
அவன் தன் தந்தை மனாசேயைப் போலவே ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
2 இராஜாக்கள் 21 : 21 (ECTA)
தன் தந்தை நடந்த வழியிலெல்லாம் அவனும் நடந்தான்; தன் தந்தை வணங்கி வழிபட்டு வந்த சிலைகளை அவனும் வழிபட்டான்.
2 இராஜாக்கள் 21 : 22 (ECTA)
அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தான்; ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.
2 இராஜாக்கள் 21 : 23 (ECTA)
ஆமோனுடைய அலுவலர் அவ்வரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனை அவன் மாளிகையிலேயே கொலை செய்தனர்.
2 இராஜாக்கள் 21 : 24 (ECTA)
ஆனால், நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தவர்களையெல்லாம் கொன்றுவிட்டு, அவனுடைய மகன் யோசியாவை அவனுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
2 இராஜாக்கள் 21 : 25 (ECTA)
ஆமோனின் பிற செயல்கள், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
2 இராஜாக்கள் 21 : 26 (ECTA)
ஊசாப் பூங்காவிலிருந்த அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோசியா அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.
❮
❯