2 இராஜாக்கள் 19 : 1 (ECTA)
எசேக்கியா எசாயாவிடம் திருவுளம் கேட்டல்
(எசா 37:1-7) அரசர் எசேக்கியா இதைக் கேட்டு தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு ஆண்டவரின் இல்லத்தினுள் நுழைந்தார்.
2 இராஜாக்கள் 19 : 2 (ECTA)
அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும், எழுத்தன் செபுனாவையும், குருக்களில் முதியோரையும் சாக்கு உடை உடுக்கச் செய்து ஆமோசின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பினார்.
2 இராஜாக்கள் 19 : 3 (ECTA)
அவர்கள் அவரிடம், “எசேக்கியா கூறுவது இதுவே: இன்று துன்பமும் கண்டனமும் அவமானமும் மிக்க நாள். பிள்ளைகளைப் பெற்றெடுக்க நேரம் வந்துவிட்டது; ஆனால், பெற்றெடுக்கவோ வலிமையில்லை.
2 இராஜாக்கள் 19 : 4 (ECTA)
வாழும் கடவுளைப் பழித்து இகழும்படி அசீரிய மன்னனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே சொன்னவற்றையெல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார்! அச்சொற்களை முன்னிட்டு உம் கடவுளாகிய ஆண்டவர் அவனைத் தண்டிக்க வேண்டும். நீரோ இன்னும் இங்கு எஞ்சியிருப்போர்க்காக மன்றாடும்” என்றனர்.
2 இராஜாக்கள் 19 : 5 (ECTA)
அரசர் எசேக்கியாவின் அலுவலர் எசாயாவிடம் வந்தபொழுது,
2 இராஜாக்கள் 19 : 6 (ECTA)
எசாயா அவர்களை நோக்கி, “உங்கள் தலைவனிடம் இவ்வாறு சொல்லுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னனின் கைக்கூலிகள் என்னை இகழ்ந்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவேண்டாம்.
2 இராஜாக்கள் 19 : 7 (ECTA)
இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிப் போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன்” என்றார்.
2 இராஜாக்கள் 19 : 8 (ECTA)
அசீரியர் மீண்டும் அச்சுறுத்தல்
(எசா 37:8-20) அவ்வாறே, ‘அசீரிய மன்னன் இலாக்கிசை விட்டு வெளியேறிவிட்டான்’ என்று கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிய இராப்சாக்கே தன் மன்னன் லிப்னாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.
2 இராஜாக்கள் 19 : 9 (ECTA)
அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி,
2 இராஜாக்கள் 19 : 10 (ECTA)
“யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: ‘எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்படமாட்டாது’ என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே.
2 இராஜாக்கள் 19 : 11 (ECTA)
இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?
2 இராஜாக்கள் 19 : 12 (ECTA)
என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு, ஏதேனியர் வாழ்ந்த தெலாசர் ஆகியவற்றை அந்நாடுகளின் தெய்வங்களால் விடுவிக்க முடிந்ததா?
2 இராஜாக்கள் 19 : 13 (ECTA)
ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம் நகர், ஏனா, இவ்வா இவற்றின் மன்னர்கள் எங்கே?” என்று கூறியிருந்தான்.
2 இராஜாக்கள் 19 : 14 (ECTA)
எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.
2 இராஜாக்கள் 19 : 15 (ECTA)
மேலும், எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: “கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! * விப 25:22..
2 இராஜாக்கள் 19 : 16 (ECTA)
ஆண்டவரே! நீர் செவி சாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக!
2 இராஜாக்கள் 19 : 17 (ECTA)
ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!
2 இராஜாக்கள் 19 : 18 (ECTA)
அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில், அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே, அவற்றை அழிக்க முடிந்தது.
2 இராஜாக்கள் 19 : 19 (ECTA)
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.”
2 இராஜாக்கள் 19 : 20 (ECTA)
எசாயா எசேக்கியாவுக்கு விடுத்த செய்தி
(எசா 37:21-38) அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது:“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் . கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன்.
2 இராஜாக்கள் 19 : 21 (ECTA)
அவனக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள்.
2 இராஜாக்கள் 19 : 22 (ECTA)
யாரை நீ பழித்து இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்க் குரல் எழுப்பினாய்? யாரை நீ இறுமாப்புடன் நோக்கினாய்? இஸ்ரயேலின் புனிதமானவரை அன்றோ!
2 இராஜாக்கள் 19 : 23 (ECTA)
நீ உன் தூதர்மூலம் என் தலைவரைப் பழித்துரைத்து, ‘எண்ணற்ற என் தேர்களோடு நான் மலையுச்சிகளுக்கு லெபனோனின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும் அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன். அதன் காடுகளின் மிக அடர்ந்த பகுதியான கடையெல்லைவரை சென்றேன்.
2 இராஜாக்கள் 19 : 24 (ECTA)
நான் அயல்நாடுகளில் கிணறு வெட்டி நீர் பருகினேன். எகிப்தின் நதிகளையெல்லாம் என் உள்ளங்கால்களினால் வற்றச் செய்தேன்’ என்றாய்!
2 இராஜாக்கள் 19 : 25 (ECTA)
நீ கேட்டதில்லையோ? நான் தான் பல நாள்களுக்கு முன்பே இதை முடிவு செய்தேன். நான்தான் தொன்று தொட்டே இதைத் திட்டமிட்டேன். அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த கற்குவியலாக நீ ஆக்க வேண்டு மென்பதை இப்பொழுது நான்தான் நிறைவேறச் செய்தேன்.
2 இராஜாக்கள் 19 : 26 (ECTA)
அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து கலக்கமுற்று அவமானமடைந்தனர்; வயல்வெளிப் புல் போலவும், கூரைகளில் முளைத்து வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப் பூண்டு போலவும் ஆயினர்.
2 இராஜாக்கள் 19 : 27 (ECTA)
நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும். எனக்கு எதிராக நீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்.
2 இராஜாக்கள் 19 : 28 (ECTA)
நீ எனக்கு எதிராகப் பொங்கி எழுந்தாலும், உன் ஆணவம் என் செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன் மூக்கில் வளையத்தையும் உன் வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விரட்டுவேன்!
2 இராஜாக்கள் 19 : 29 (ECTA)
எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்; இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்; அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்; ஆனால், மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்; திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய்.
2 இராஜாக்கள் 19 : 30 (ECTA)
யூதா வீட்டில் எஞ்சியவை எல்லாம் கீழே வேரூன்றி மேலே பயன் அளிக்கும்.
2 இராஜாக்கள் 19 : 31 (ECTA)
ஏனெனில், எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!
2 இராஜாக்கள் 19 : 32 (ECTA)
ஆதலால், ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்; இந்நகருக்குள் அவன் நுழையமாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத்தளம் எழுப்ப மாட்டான்.
2 இராஜாக்கள் 19 : 33 (ECTA)
அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.
2 இராஜாக்கள் 19 : 34 (ECTA)
இந்நகரை நான் பாதுகாப்பேன்; என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.”
2 இராஜாக்கள் 19 : 35 (ECTA)
அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.
2 இராஜாக்கள் 19 : 36 (ECTA)
எனவே, அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.
2 இராஜாக்கள் 19 : 37 (ECTA)
தன் தெய்வமாகிய நிஸ்ரோக்கின் கோவிலில் அவன் வழிபாடு செய்துகொண்டிருந்த பொழுது, அவன் புதல்வர்களாகிய அதிரம் மெலக்கும், சரேத்சரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அரராத்து நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டனர். அவனுடைய மகன் ஏசகத்தோன் அவனுக்குப்பின் அரசன் ஆனான்.
❮
❯