2 இராஜாக்கள் 14 : 1 (ECTA)
யூதா அரசன் அமட்சியா
(2 குறி 25:1-24) இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதா அரசன் யோவாசின் மகன் அமட்சியா அரசன் ஆனான்.
2 இராஜாக்கள் 14 : 2 (ECTA)
அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த யோவதீன் என்பவளே அவன் தாய்.
2 இராஜாக்கள் 14 : 3 (ECTA)
அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தான். ஆயினும், தன் மூதாதையான தாவீது போல் அவன் செய்யவில்லை. அனைத்திலும் தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் செய்துவந்தான்.
2 இராஜாக்கள் 14 : 4 (ECTA)
தொழுகை மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம்காட்டியும் வந்தனர்.
2 இராஜாக்கள் 14 : 5 (ECTA)
ஆட்சி தன் கைக்கு வந்து உறுதியானவுடன், அரசனாகிய தன் தந்தையைக் கொலை செய்த அலுவலரைக் கொன்று போட்டான்.
2 இராஜாக்கள் 14 : 6 (ECTA)
ஆயினும், கொலைகாரர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை. ஏனெனில், ஆண்டவரின் கட்டளைப்படி மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ளதாவது: பிள்ளைகளின் பாவத்திற்காகப் பெற்றோர் கொல்லப்படலாகாது; பெற்றோரின் பாவத்திற்காகப் பிள்ளைகள் கொல்லப்படலாகாது. எல்லாரும் அவரவர் செய்த பாவத்திற்காகவே கொல்லப்படுவர். [* இச 24: 16 ]
2 இராஜாக்கள் 14 : 7 (ECTA)
அமட்சியா போரிட்டு உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் ஏதோமியரைக் கொன்று, சேலாவைக் கைப்பற்றி அதற்கு இன்றுவரை வழங்கி வரும் ‘யோக்தவேல்’ என்ற பெயரை இட்டான்.
2 இராஜாக்கள் 14 : 8 (ECTA)
பின்பு, அவன் இஸ்ரயேலின் அரசனும் ஏகூவின் மகன் யோவகாசின் புதல்வனுமாகிய யோவாசிடம் தூதனுப்பி, “வாரும்! போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்” என்று சொல்லச் சொன்னான்.
2 இராஜாக்கள் 14 : 9 (ECTA)
அதற்கு இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவிடம் ஆளனுப்பி, “லெபனோனின் நெருஞ்சிச் செடி லெபனோனின் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, ‘என் மகனுக்கு உன் மகளை மணமுடித்துக் கொடு’ என்றதாம்; ஆனால், லெபனோனின் விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் நெருஞ்சிச் செடியை மிதித்துப் போட்டதாம்!
2 இராஜாக்கள் 14 : 10 (ECTA)
நீ ஏதோமியரை முறியடித்தது உண்மைதான். எனவே, நீ நெஞ்சிலே செருக்குற்றாய்! பெருமைப்பட்டுக் கொள்! ஆனால், உன் வீட்டினுள்ளே தங்கியிரு! நீயும் உன்னோடு யூதாவும் வீழ்ச்சியுறவா தீமையை நீ நாடுகிறாய்?” என்று சொன்னான்.
2 இராஜாக்கள் 14 : 11 (ECTA)
அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
2 இராஜாக்கள் 14 : 12 (ECTA)
யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
2 இராஜாக்கள் 14 : 13 (ECTA)
இஸ்ரயேலின் அரசன் யோவாசு பெத்செமேசில் அகசியாவின் மகனான யோவாசின் புதல்வனும் யூதாவின் அரசனுமான அமட்சியாவைக் கைது செய்து, எருசலேமைத் தாக்கச் சென்றான். அவன் எருசலேமின் மதிற் சுவரில், எப்ராயிம் வாயில் முதல் மூலை வாயில்வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளினான்.
2 இராஜாக்கள் 14 : 14 (ECTA)
ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டான். மேலும், அவன் சிலரைப் பிணையாளராகப் பிடித்துக் கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிச் சென்றான்.
2 இராஜாக்கள் 14 : 15 (ECTA)
யோவாசின் பிற செயல்களைப் பற்றியும் யூதா அரசன் அமட்சியாவுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலைப் பற்றியும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளது அல்லவா?
2 இராஜாக்கள் 14 : 16 (ECTA)
யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் இஸ்ரயேல் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் எரோபவாம் அரசனானான்.
2 இராஜாக்கள் 14 : 17 (ECTA)
யூதா அரசன் அமட்சியாவின் இறப்பு
(2 குறி 25:25-28) இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு இறந்தபின், யூதா அரசனான யோவாசின் மகன் அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
2 இராஜாக்கள் 14 : 18 (ECTA)
அமட்சியாவின் பிற செயல்கள் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
2 இராஜாக்கள் 14 : 19 (ECTA)
எருசலேமில் சிலர் அமட்சியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். எனவே, அவன் இலாக்கிசுக்குத் தப்பி ஓடினான். ஆனால், அவர்கள் இலாக்கிசுக்கு ஆளனுப்பி அவனை அங்குக் கொலை செய்து,
2 இராஜாக்கள் 14 : 20 (ECTA)
அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவன் மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.
2 இராஜாக்கள் 14 : 21 (ECTA)
பின்னர், யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர். * ‘உசியா’ என்பது மறுபெயர்..
2 இராஜாக்கள் 14 : 22 (ECTA)
அமட்சியா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், அவன் ஏலத்து நகரை மீண்டும் உருவாக்கி யூதாவுடன் இணைத்துக் கொண்டான்.
2 இராஜாக்கள் 14 : 23 (ECTA)
இஸ்ரயேல் அரசன் இரண்டாம் எரொபவாம் யூதா அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், இஸ்ரயேல் அரசனும் யோவாசின் மகனுமான எரொபவாம் சமாரியாவில் அரசனானான். அவன் நாற்பத்தோராண்டுகள் ஆட்சி செய்தான்.
2 இராஜாக்கள் 14 : 24 (ECTA)
அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அகலவில்லை.
2 இராஜாக்கள் 14 : 25 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர், தம் அடியவரும் கத்கேப்பரைச் சார்ந்த அமித்தாயின் மகனுமான இறைவாக்கினர் யோனாவின் மூலம் உரைத்த வாக்கின்படியே, எரொபவாம், அமாத்து கணவாய் முதல் அராபாக் கடல்வரை, இஸ்ரயேலுக்குரிய நிலப் பகுதிகளை மீண்டும் இணைத்துக் கொண்டான். [* யோனா 1: 1 ]
2 இராஜாக்கள் 14 : 26 (ECTA)
ஏனெனில், இஸ்ரயேலர் மிகக் கடுமையாகத் துன்புறுவதையும் அவர்களுக்குத் துணை செய்ய, அடிமையோ, குடிமகனோ, எவனும் இல்லை என்பதையும் ஆண்டவர் கண்டார்.
2 இராஜாக்கள் 14 : 27 (ECTA)
ஆனால் ஆண்டவர், இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவதாகக் கூறியிருக்கவில்லை. எனவே, அவர் அவர்களை யோவாசின் மகன் எரொபவாமின் மூலம் விடுவித்தார்.
2 இராஜாக்கள் 14 : 28 (ECTA)
எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை — ஆகியன பற்றி ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
2 இராஜாக்கள் 14 : 29 (ECTA)
எரொபவாம் தன் மூதாதையரான இஸ்ரயேல் அரசர்களுடன் துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் செக்கரியா அரசன் ஆனான்.
❮
❯