2 கொரிந்தியர் 6 : 1 (ECTA)
நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
2 கொரிந்தியர் 6 : 2 (ECTA)
‘தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்’ எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்! [* எசா 49: 8 ]
2 கொரிந்தியர் 6 : 3 (ECTA)
எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே, நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை.
2 கொரிந்தியர் 6 : 4 (ECTA)
மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்.
2 கொரிந்தியர் 6 : 5 (ECTA)
நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; [* திப 16: 23 ]
2 கொரிந்தியர் 6 : 6 (ECTA)
தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேட மற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்; [* கலா 5: 22 ]
2 கொரிந்தியர் 6 : 7 (ECTA)
உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். [* எபே 6: 11 ]
2 கொரிந்தியர் 6 : 8 (ECTA)
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள்.
2 கொரிந்தியர் 6 : 9 (ECTA)
அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை.
2 கொரிந்தியர் 6 : 10 (ECTA)
துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். [* 2 கொரி 4: 11 ]
2 கொரிந்தியர் 6 : 11 (ECTA)
கொரிந்தயரே, நாங்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுகிறோம். எங்கள் இதயத்தில் ஒளிவு மறைவு என்பதே இல்லை.
2 கொரிந்தியர் 6 : 12 (ECTA)
நீங்கள் உங்கள் இதயக் கதவை அடைத்து வைத்திருக்கிறீர்கள்; எங்கள் இதயக்கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது.
2 கொரிந்தியர் 6 : 13 (ECTA)
பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்; எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.
2 கொரிந்தியர் 6 : 14 (ECTA)
4.தூய வாழ்விற்கான அழைப்பு நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? [* இச 22: 10 ]
2 கொரிந்தியர் 6 : 15 (ECTA)
கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும்* என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? [* மூலபாடத்தில் ‘போலியார்’ என்றுள்ளது.போலியார் என்பது யூதமக்கள் சாத்தானுக்கு கொடுத்த பெயர்களுள் ஒன்று.. ]
2 கொரிந்தியர் 6 : 16 (ECTA)
கடவுளின் கோவிலுக்கும் சிலைவழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே. “என் உறைவிடத்தை அவர்கள் நடுவில் நிறுவுவேன். அவர்கள் நடுவே நான் உலவுவேன். நானே அவர்கள் கடவுள்! அவர்கள் என் மக்கள்!” என்று கடவுளே சொல்லியிருக்கிறார் அன்றோ!
2 கொரிந்தியர் 6 : 17 (ECTA)
எனவே, “அவர்கள் நடுவிலிருந்து வெளியேறுங்கள்; அவர்களை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்” என்கிறார் ஆண்டவர். “தீட்டானதைத் தொடாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்.
2 கொரிந்தியர் 6 : 18 (ECTA)
மேலும், நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்; நீங்கள் எனக்குப் புதல்வரும் புதல்வியருமாயிருப்பீர்கள்” என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18